×

ராஜஸ்தான் மாநிலத்தில் வெயிலால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தில் வெயிலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது தொடர்பாக ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி அனூப்குமார் தாந்த் தாமாக முன்வந்து விசாரித்தார். அப்போது அவர் ராஜஸ்தான் மாநில அரசுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்விவரம் வருமாறு:

நாடு முழுவதும் அடுத்தடுத்து நிலவும் வெப்ப அலைகள் மற்றும் குளிர் அலைகளை தேசிய பேரிடர்களாக அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை மாநில அரசு வழங்க வேண்டும். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலைகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும். திறந்த வெளியில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்கள், சுமை தூக்குபவர்கள், வண்டி மற்றும் ரிக் ஷா இழுப்பவர்கள் உட்பட கடுமையான வெப்பமான சூழ்நிலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.

பீகாரில் வெயில் தாக்கி ஒரேநாளில் 8 பேர் பலி
பீகாரில் நேற்று கடுமையான வெப்பம் நிலவியது. பக்சர் நகரில் அதிகபட்சமாக 116.78 டிகிரி வெப்பம் பதிவானது. அர்வால், ரோஹ்தாஸ், பெகுசராய் மாவட்டங்களிலும் அனல் வீசியது. இதனால் நேற்று மட்டும் இங்கு 8 பேர் வெப்ப அலையால் பலியாகி விட்டனர். பஞ்சாப், அரியானாவிலும் வெயில் சுட்டெரித்தது.

* ரயிலை நிறுத்திய டிரைவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
உபி மாநிலம் ஜான்சியில் இருந்து பண்டாவிற்கு சென்று கொண்டு இருந்த சரக்கு ரயிலில் வினோத் குமார் என்பவர் லோகோ பைலட்டாக இருந்தார். நேற்று உபியில் கடும் வெப்ப அலை தாக்கியதால் பாதிக்கப்பட்ட வினோத்குமார் குல்பஹாட் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தினார். உடனடியாக மஹோபா மாவட்ட மருத்துவமனையில் லோகோ பைலட் வினோத் குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த பிறகு அவரது உடல் நிலை சீரடைந்தது.

நொய்டாவில் ஏசி வெடித்து பயங்கர தீவிபத்து
டெல்லியை அடுத்த நொய்டாவில் நேற்று கடும் வெப்ப அலை காரணமாக அங்குள்ள லோட்டஸ் பவுல்வார்டு அடுக்குமாடி குடியிருப்பில் 10வது மாடியில் உள்ள வீட்டில் திடீரென ஏசி வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு 5 தீயணைப்பு வண்டிகள் சென்று உடனே தீயை அணைத்ததால் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை.

The post ராஜஸ்தான் மாநிலத்தில் வெயிலால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,High Court ,Jaipur ,Rajasthan High Court ,Judge ,Anoop Kumar Thant ,Dinakaran ,
× RELATED உள்ளாடைகளை கழற்றி சிறுமியை...