×

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சி: ஜூன் 3 வரை பொதுமக்கள் பார்வையிடலாம்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேற்று திறந்து வைத்தார். திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. வரும் ஜூன் 3ம் தேதி நூற்றாண்டு விழா நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி நூற்றாண்டு புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
புகைப்பட நிபுணர் கோவை சுப்பு ஏற்பாட்டில், அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று கலைஞரின் வரலாற்றுச் சிறப்பு புகைப்பட கண்காட்சியை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., திறந்து வைத்தார். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டு, இறுதியாக திமுக நிர்வாகிகள் உடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படக் கண்காட்சியை, ஜூன் 3ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவின் சிறப்பு புகைப்படங்கள் 1934ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான கலைஞர் தனது சிறு வயது முதல் வாழ்நாளில் அரசியல் வாழ்வில் பயணித்த பல நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த ஓராண்டு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவினை பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை திமுக கட்சி சார்பிலும், அரசு சார்பிலும் நலத்திட்ட உதவிகள், கண்தான முகாம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, இந்த புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் போது, திமுக அமைப்புச் செயலளார் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா வரும் ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் 4ம் தேதி வரை தமிழகத்திலும், மற்ற இடங்களிலும் அமலில் இருப்பதால் 3ம் தேதி விழாவினை பிரமாண்டமாக நடத்த இயலவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கட்சித் தொண்டர்கள் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் எனக் கூறி உள்ளார்.
கலைஞருக்கு அன்றைய தினம் மகிழ்ச்சியோடு மரியாதை செலுத்த வேண்டும் என சொல்லியிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக, அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டு ஜூன் 3ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படக் கண்காட்சியை பார்க்கும் பொழுது கண்கலங்க வைக்கக்கூடிய பல நினைவுகள் தான் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சி: ஜூன் 3 வரை பொதுமக்கள் பார்வையிடலாம் appeared first on Dinakaran.

Tags : Anna Vidyalaya ,CHENNAI ,DMK ,Treasurer ,DR Balu ,Anna Institute ,Tamil Nadu ,Chief Minister ,Dinakaran ,
× RELATED இவிஎம் இயந்திரங்களின் செயல்பாடுகள்...