×

கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: கேரளா, லட்சத்தீவு மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழையும், வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெயிலும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில், குறிப்பாக மத்திய மாநிலங்களில் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை வீசி வருவதுடன் 127 டிகிரி வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெப்பம் மற்றும் வெயில் தகித்து வருகிறது.

இதுதவிர பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நேற்று கடுமையான வெப்ப அலை வீசியது. ஜூன் 1ம் தேதிக்கு பிறகு அங்கு வெப்ப அலை வீச்சு குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஜூன் 3ம் தேதி வரையில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும், இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், ஜூன் 1 மற்றும் 2ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள் திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும், 3ம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் மேற்கு பகுதியில் இருந்து கடுமையான காற்று வீசி வருவதால் கேரளாவில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், மாகே, லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய இடங்களில் 7 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகள், தெலங்கானா, ராயலசீமா ஆகிய இடங்களில் ஜூன் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவை பொறுத்தவரையில் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து அங்கு கடும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

The post கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Southwest Monsoon ,Kerala ,Lakshadweep ,Tamil Nadu ,Chennai ,South West ,South Tamil Nadu ,
× RELATED கேரளாவில் தென்மேற்கு பருவமழை...