×

அரசியல் காழ்ப்புணர்வால் காந்தி பற்றி மோடி பேச்சு: செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: படமாக எடுத்ததால்தான் மக்களால் காந்தி அறியப்பட்டார் என்பது மோடியின் நீண்டகால அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் பரப்புரையை மேற்கொண்டு தேர்தல்களில் வெற்றி பெற்ற மோடி 2024 தேர்தலில் மக்களின் எதிர்ப்பு அலையின் காரணமாக மிகுந்த பதற்றத்துடனும், அச்சத்துடனும் நிதானமிழந்து பேசி வருகிறார்.

அதன் உச்சகட்டமாக 1982 இல் காந்தி திரைப்படம் எடுக்கும் வரை உலகம் காந்தியை பற்றி அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் பொறுப்பில் இருக்கும் நரேந்திர மோடி பேசியிருப்பது அவரது அரசியல் அறியாமையை வெளிப்படுத்துகிறது. உலக நாடுகளில் இந்தியா என்று சொன்னாலே மகாத்மா காந்தியின் நினைவு தான் அனைவருக்கும் வரும். உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவர். மனிதர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தும் அடக்குமுறைக்கு எதிராக மனித சமுதாயத்தின் சுயமரியாதைக்காக அகிம்சை முறையில் போராடி தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக நீதியை நிலைநாட்டியவர் காந்தியடிகள்.

ஆகவே தான் நெல்சன் மண்டேலா அவர்கள் கூறும் போது, ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக இங்கே அனுப்பி வைத்தீர்கள், நாங்கள் மகாத்மாவாக அவரை திருப்பி அனுப்பினோம்” என்று பெருமையாக கூறினார். அந்தளவிற்கு இனவெறிக்கு எதிராக தன்னுடைய போராட்டத்தை பொதுவாழ்க்கையில் தொடங்கி உலகமே வியக்கும் வண்ணம் அந்நிய மண்ணில் அகிம்சை போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர். உலகமே வன்முறை தான் வாழ்க்கை, வன்முறை தான் கடைசி ஆயுதம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அதற்கு எதிராக அகிம்சை போராட்டத்தை நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர் காந்தியடிகள்.

பராக் ஒபாமாவாக இருந்தாலும் சரி, அவருக்கு முன்னால் மார்ட்டின் லூதர் கிங்காக இருந்தாலும் சரி, அமெரிக்காவின் அடிமைத்தனத்திக்கு எதிராக போராடியவர்கள் காந்தியடிகளை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு தான் போராடினார்கள். அதேபோல, போலாந்தில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தவர் வலேசா. வியட்நாமின் ஆயுத புரட்சியை முன்னெடுத்தவர் ஹோசிமின். அவர்கள் அனைவரும் காந்தியடிகளை தான் தங்களது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார்கள்.

தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக 20 ஆண்டுகாலம் போராடி வெற்றி கண்ட காந்தியடிகள் அதே தத்துவங்களான சத்தியம், அகிம்சை என்ற கொள்கைகளை கடைபிடித்து சத்தியாகிரகம், ஒத்துழையாமை என்ற போராட்டங்களை நடைமுறைப்படுத்தி, தலைமையேற்று இந்தியாவிற்கு 1947 இல் சுதந்திரம் பெற்றுத் தந்தவர். அகிம்சையை ஆயுதமாக ஏந்தி, 250 ஆண்டுகால பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி பெற முடியும் என்ற புதிய சரித்திரத்தை உருவாக்கியவர். மதங்களை மீறி மனித இனங்களை இணைப்பதற்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்தவர்.

ஆனால், நாட்டு மக்களிடம் அன்பை மட்டுமே காட்டிய அவரை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினாலும், இந்து மகாசபையை சேர்ந்த சாவர்க்கரினாலும் மூளை சலவை செய்யப்பட்டு மதவெறி தூண்டப்பட்ட வெறுப்பினால் நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை படுகொலை செய்தார். படுகொலை செய்தவர் நாதுராம் கோட்சே. ஆனால், அவரது கொலை முயற்சிக்கு பின்னாலே ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை சித்தாந்தம் அடங்கியிருப்பதை எவரும் மறுக்க முடியாது. அத்தகைய சித்தாந்தத்தில் சிறுவயதிலிருந்து ஊறித் திளைத்த நரேந்திர மோடி மகாத்மா காந்தி மீது உண்மையான அன்பு காட்ட அவரால் முடியாது.

காந்தி திரைப்படத்தின் மூலம் தான் முழுமையாக அறிந்து கொண்டேன் என்று பேசுவது தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானமாகும். நரேந்திர மோடியின் அரசியல் மூலதனமே வெறுப்பு தான். குஜராத்தில் வெறுப்பு அரசியல் நடத்தியதன் விளைவே ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத கல் நெஞ்சக்காரராக அவர் இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதனால் தான் 2008ல் மலேகான் பயங்கர குண்டு வெடிப்பில் 12 பேர் படுகொலைக்கு காரணமானவர் பிரக்யாசிங் தாகூர் என்று தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது.

அவரை சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வரவழைத்து அவரை மத்திய பிரதேச மாநிலம், போபால் மக்களவை தொகுதியில் போட்டியிட வைத்து நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு பயங்கரவாதியை ஆக்கியவர் நரேந்திர மோடி. வெற்றி பெற்றதற்கு பின்னாலே காந்தியடிகளை கொன்ற கோட்சேவை ஒரு தியாகி என்று புகழ்ந்து பேசிய பிரக்யாசிங் தாகூரை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் மவுனமாக இருந்தவர் பிரதமர் நரேந்திர மோடி.

மகாத்மா காந்தியின் புகழ் என்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., வகுப்புவாத சக்திகளின் வரம்பு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. தேசத்தின் தந்தை என்று இந்திய மக்கள் மட்டுமல்லாமல் உலக நாடுககளின் தலைவர்களாலும், மக்களாலும் போற்றி பாராட்டப்பட்டவர். அதனால் காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2 ஆம் நாளை ஐ.நா. சபை அகிம்சை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இத்தகைய புகழுக்கு உரியவரான காந்தியடிகளை தான் அட்டன்பரோ சினிமாவாக எடுக்க வேண்டும் என்று நினைத்தாரேயொழிய அட்டன்பரோ சினிமாவாக எடுத்ததால் தான் உலக மக்களால் காந்தியடிகள் அறியப்பட்டார் என்பது நரேந்திர மோடியின் நீண்டகால அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும்.

அதனால் தான் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு அருகில் அவரது படுகொலையில் குற்றவாளியாக கருதப்பட்ட சாவர்க்கரின் படத்தையும் பா.ஜ.க. அரசு திறந்து வைத்தது. அத்தகைய கொடிய பாவத்தை செய்த பா.ஜ.க.வையும், காந்தியடிகளை சிறுமைப்படுத்துகிற நரேந்திர மோடியையும் இந்திய மக்கள் என்றைக்குமே மன்னிக்க மாட்டார்கள். அதற்கு உரிய தண்டனையை வருகிற நாடாளுமன்றத் தேர்தல் முடிவின் மூலம் மக்கள் வழங்கப் போவது உறுதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post அரசியல் காழ்ப்புணர்வால் காந்தி பற்றி மோடி பேச்சு: செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Gandhi ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,Selvaperunthagai ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகளைப்...