×

திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல்; தபால் வாக்குகள் எண்ணும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் அலுவலர்களுக்கு பயிற்சி

திண்டுக்கல், மே 30: நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குச் சீட்டுகள் எண்ணும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அலுவலர்களுக்கான பயிற்சி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் பூங்கொடி தலைமை வகித்து தெரிவித்ததாவது: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் தொகுதிக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்.19ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் ஜூன் 4ம் தேதி காலை 8.00 மணிக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தபால் வாக்குகள் எண்ணுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் மூன்று மேஜைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு சுற்றில் 500 வாக்குகள் வீதம் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் தாசில்தார் நிலையில் ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் மற்றும் இரண்டு வாக்கு எண்ணும் உதவியாளர்கள் நியமிக்கப்படுவர். இதுதவிர ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண்பார்வையாளரும், ஒரு வாக்கு எண்ணிக்கை முகவரும் நியமிக்கப்படுவர். ஜூன் 4ம் தேதி காலை 8.00 மணிக்கு முன்னர் வரை பெறப்படும் அனைத்து அசல் வாக்குச்சீட்டுகளும் தேர்தல் நடத்தும் அலுவலர் பேஜைக்கு எடுத்து வரப்பட்டு, தபால் வாக்கு எண்ணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

அஞ்சல் வாக்குச் சீட்டுடன் படிவம்-13A உறுதிமொழி இல்லையென்றாலும், படிவம்-13A உறுதிமொழி படிவத்தில் சான்றொப்பம் இடும் அலுவலரின் கையொப்பம் இல்லையென்றாலும், வாக்காளரின் கையொப்பம் இல்லையென்றாலும், படிவம்-13A -ல் குறிப்பிடப்பட்டுள்ள வரிசை எண்ணும், படிவம் – 13B-ல் குறிப்பிடப்பட்டுள்ள வரிசை எண்ணும் வேறுபாடாக இருந்தாலும், படிவம்-13A-ஐ தனியாக வைக்காமல் படிவம்-13B உறையின் உள்ளே வைத்திருந்தால், தபால் வாக்குச்சீட்டு படிவம் 13B-உறையினுள் இல்லாமல் வெளியில் இருப்பின், அஞ்சல் வாக்குச்சீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்திருந்தால், தபால் வாக்குச்சீட்டில் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்கவில்லை என்றாலும், போலியான தபால் வாக்குச்சீட்டுக்கள் என்று கண்டறியப்பட்டாலும், சேதமான, கிழிந்த நிலையில் உள்ள மற்றும் முற்றிலும் கசக்கப்பட்ட தபால் வாக்குச்சீட்டுக்கள் என்றாலும் இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்அனுமதி பெற்று தள்ளுபடி செய்யலாம்.

இவ்வாறு நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகளின் படிவம்-13C உறை அல்லது படிவம்-13B-உறையின் மீது உரிய ரப்பர் ஸ்டாம்ப் இட்டு அதற்கான காரணத்தினை குறியீடு (\”டிக்\”) செய்ய வேண்டும். ஒரு மேஜைக்கு வழங்கப்பட்ட 500 அஞ்சல் வாக்குச்சீட்டுகளையும் பிரித்து அடுக்கிய பின் அவற்றிற்குரிய அனைத்து படிவம் 13A-களை ஒரு தனி உறையில் இட்டு முத்திரையிட வேண்டும். பின் படிவம் 13B- அனைத்தையும் எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக பிரித்து அதிலுள்ள அஞ்சல் வாக்குச்சீட்டுக்களை வெளியில் எடுத்து, அதில் பதிவாகியுள்ள வாக்கு விவரத்தை அனைத்து முகவர்களிடமும் காண்பித்து அதனை சம்மந்தப்பட்ட வேட்பாளரின் பெயர் கொண்ட பெட்டியில் இட வேண்டும். வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு எதிரே எந்த ஒரு குறியீட்டை பயன்படுத்தியும் வாக்களிக்கலாம். அக்குறியீடு அந்த வேட்பாளருக்கு வாக்களித்ததை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். 500 வாக்குகளையும் பிரித்து அதற்குரிய பெட்டியில் இட்ட பின்னர் முதல் சுற்று முடிவு பெறும்.

முதல் சுற்று முடிவுற்றவுடன் ஒவ்வொரு வேட்டாளருக்கும் பதிவாகியுள்ள தபால் வாக்குகளை 50 எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக கட்டி அதனை எண்ணி முதல் சுற்று முடிவினை அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் 500 வாக்குகள் வீதம் ஒவ்வொரு மேஜையிலும் எண்ணி முடிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் அனைத்து தபால் வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டவுடன் வேட்பாளர்கள் வாரியாக பெற்ற வாக்குகள் விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்திட வேண்டும். பின்னர், வேட்பாளர்கள் பெற்ற தபால் வாக்குகளின் விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிக்க வேண்டும். செல்லத்தக்க வாக்குச்சீட்டுக்கள் அனைத்தையும் தனியாக ஒரு உறையினுள் வைத்து, சீலிடப்பட்டு “தொகுதியின் பெயர், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாள், செல்லத்தக்க தபால் வாக்குகளின் எண்ணிக்கை\” ஆகிய விவரங்களை தெளிவாக எழுத வேண்டும்.

நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகள் அனைத்தையும் தனியாக ஒரு உறையில் வைத்து சீலிடப்பட்டு, உறையின் மேல் நன்கு தெரியும் வகையில் “தொகுதியின் பெயர், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாள், அஞ்சல் வாக்குச்சீட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான குறிப்பட்ட காரணம்\” ஆகியவை எழுதப்பட வேண்டும். இந்த வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்து தபால் வாக்குச்சீட்டுகள் எண்ணிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். பயிற்சிக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், தனி வருவாய் அலுவலர் பவானி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கழ் கோட்டைக்குமார், ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல்; தபால் வாக்குகள் எண்ணும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் அலுவலர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Dindigul Parliament Election ,Dindigul ,Dindigul Collector ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...