×

போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பின் ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரப்படுத்தப்படும்: அதிகாரிகள் தகவல்

சென்னை, மே 30: ராமாபுரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பின்னர் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட பணிகள் 3 வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகிறது. இந்த பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5வது வழித்தடத்தில் 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும், 6 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும் வருகின்றன. இந்த வழித்தடத்தில் மேம்பாலப் பணிகள் பல்வேறு இடங்களில் தீவிரமடைந்து உள்ளன. தற்போது வரை 500க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக போரூர் சந்திப்பு – சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் இடையே மேம்பாலப் பாதைக்கான பணிகள் நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் தூண்கள் நிறுவி அதற்கு மேல் கர்டர்கள் அமைத்து, உயர்மட்ட பாதைக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. முகலிவாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.

இதில் ராமாபுரம் முதல் கிண்டி வரை தூண்கள் மற்றும் நிலையங்கள் அமைப்பதற்கு மேலும் சில காலங்கள் ஆகும். குறுகிய பகுதி என்பதால் போக்குவரத்து முழுமையாக மாற்றப்பட்ட பின் பணிகள் முழுவீச்சில் நடைபெறும். இதற்காக மெட்ராஸ் வார் கல்லறை அருகே வாகனங்கள் திருப்பிவிடப்பட உள்ளது. அதன்பின்னர் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பின் ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரப்படுத்தப்படும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ramapuram ,Chennai ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட...