×

சாவிலும் இணை பிரியாத தம்பதி

 

பூந்தமல்லி, மே 30: சென்னை மதுரவாயல் ராஜிவ் காந்தி நகர், செல்வ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து காமாட்சி (95), இவரது மனைவி பவுன் (87), இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் பேர குழந்தைகள் உள்ளனர். அனைவரும் ஒரே காம்பவுண்டுக்குள் அருகருகே தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், முத்துகாமாட்சி, பவுன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தூங்கச் சென்றனர். நேற்று காலை முத்துகாமாட்சி, பவுன் ஆகியோர் நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து மகன் பழனிவேல் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, ஒரு அறையில் அவரது தாய் பவுன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே குடும்பத்தினரை அழைக்க சென்றபோது, மற்றொரு அறையில் அவரது தந்தை இறந்து கிடப்பதைக் கண்டு பழனிவேல் சோகத்தில் செய்வதறியாமல் திகைத்து நின்றார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முத்துகாமாட்சி, பவுன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவர்களது சொந்த ஊரான மதுரையில் நடந்த கோயில் திருவிழாவிற்கு சென்று வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பவுன் உடல் நலம் பாதிக்கப்பட்டு வெளியே வராமல் வீட்டின் அறையிலேயே இருந்து வந்துள்ளார். அவரது கணவர் முத்து காமாட்சி மற்றொரு அறையில் தனியாக தங்கி இருந்ததும் தெரியவந்தது. பவுன் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையான நிலையில் முத்துகாமாட்சி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பவுன் இறந்து போன அதிர்ச்சியில் முத்து காமாட்சியும் இறந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post சாவிலும் இணை பிரியாத தம்பதி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Muthu Kamatshi ,Paun ,Selva Vinayakar Koil Street, Maduravayal Rajiv Gandhi Nagar, Chennai ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து...