×

கருவேல மரங்களை அகற்றி விவசாயிகள் சிறுதானியங்கள் அதிகளவு பயிரிட வேண்டும்: மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

 

சிவகங்கை, மே 29: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தானிய உற்பத்தியில் சிறந்து விளங்க பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு தானியங்கள் உற்பத்தி டெல்டா மாவட்டங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுபோல் மற்ற மாவட்டங்களிலும் 25சதவிகிதத்திற்கு குறையாமல் பயிரிடப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன் விவசாய பணிகள் மேற்கொள்ளாமல் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ள விவசாய நிலங்களை விவசாயிகள் சீர் செய்து அங்கு மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. காலமுறை விவசாயங்களுக்கு இணையாக தானிய வகை பயிர்களையும் பயிரிட்டு பயன்பெற வேண்டும்.

வேளாண்மைத் துறையின் மூலம் சிறுதானிய பயிர்களுக்கு மானியத்தில் விதைகள் வழங்கப்படுகிறது. மேலும், சிறுதானியங்களுக்கு பொதுமக்களிடையே தற்போது நல்ல வரவேற்பு உள்ள நிலையில் உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் நல்ல விலைக்கு விற்பனையாகும் அளவிற்கு சந்தைப்படுத்தல் வேளாண்மைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறு,சிறு விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விவசாயிகளும் மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றி விளைநிலங்களில் வேளாண் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கருவேல மரங்களை அகற்றி விவசாயிகள் சிறுதானியங்கள் அதிகளவு பயிரிட வேண்டும்: மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பகுதிக்கு நிலையான...