×

கடையநல்லூர் அருகே வேன் மீது அரசு பஸ் மோதலில் 4 பேர் காயம்

 

கடையநல்லூர், மே 29: கடையநல்லூரை அடுத்த திரிகூடபுரத்தில் அரசு பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். இதனால் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குற்றாலத்திலிருந்து திருவேட்டநல்லூரிலுள்ள கோயில் திருவிழாவிற்காக புனித நீர் எடுத்துக் கொண்டு சுமார் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரு வேனில் திருவேட்டநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேன் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையான திரிகூடபுரம் விலக்கில் சென்று கொண்டிருந்த போது, புளியங்குடியிலிருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பேருந்தும் வேனும் மோதிய விபத்தில் அரசு பேருந்து சாலையோர ஓடையில் நிலை தடுமாறி சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் பேச்சிமுத்து (50), வேனில் பயணம் செய்த பூபதிபொன்வேந்தன் (19), ஆனந்தபாபு (28), பேச்சியம்மாள் ஆகியோர் காயமடைந்தனர். அரசு பேருந்தில் பயணம் செய்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் சொக்கம்பட்டி போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜேசிபி வாகனம் மூலம் விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்தின் காரணமாக திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

The post கடையநல்லூர் அருகே வேன் மீது அரசு பஸ் மோதலில் 4 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Kadayanallur ,Trikutapuram ,Tirumangalam – Kollam National Highway ,Courtalam ,Dinakaran ,
× RELATED கடையநல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை ரத்து