×

புதுமைகளை புகுத்தினேன்… ஜெயித்தேன்!

நன்றி குங்குமம் தோழி

250 வகை ஐஸ்கிரீம்களை தயாரிக்கும் லதா

‘‘கணவனின் இழப் பிற்குப் பிறகு குடும்பத்தை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தினால் நான் தீவிரமாய் ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று இறங்கினேன். இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறேன்’’ என நெகிழ்ச்சியுடன் தனது கடும் வாழ்வியல் போராட்டத்தை விவரிக்கிறார் கோயமுத்தூரைச் சேர்ந்த லதா ராஜா.

பத்தாவது படித்த மகன் மற்றும் முதலாம் வகுப்பு படிக்கும் மகளுடன் தனது ஐஸ்கிரீம் தொழிலில் பட்டையைக் கிளப்பி வருகிறார் இவர். இறந்த கணவரின் நினைவாக ‘ஐஸ் ராஜா’ என்கிற பெயரில் ஏராளமான வகை ஐஸ்கிரீம்களை தயாரித்து விற்பனை செய்கிறார். ஐஸ்கிரீமில் இத்தனை வகைகளா? என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் இவரது தயாரிப்புகள் கோவை பகுதிகளில் மிகப் பிரபலம். ஐஸ்கிரீம் தொழில் குறித்தும் தனது தொழில் போராட்டங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘நான் படித்தது பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரி. வேலை செய்ததோ ஹோட்டல் துறையில். அதில் பதினொரு வருட அனுபவங்கள் எனக்கு இருந்தது. அந்த அனுபவத்தில் தான் என் கணவருடன் சேர்ந்து ஜஸ்கிரீம் தொழிலில் இறங்கினேன். எதிர்பாராத விதமாக அவர் நோய்வாய்ப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து போனார். திடீரென குடும்பம் எவ்வித உதவியுமின்றி தத்தளிக்க, அவருக்கு சிகிச்சை செய்த செலவுகளால் கடன்களும் கழுத்தை நெறிக்க, அதி தீவிரமாக தொழிலை பலப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பத்தாவது படித்த மகனுடனும், அசூர உழைப்புடனும் களமிளறங்கினேன். அதுவரை வேறு பெயரில் நடத்தி வந்த நிறுவனப் பெயரை மாற்றி கணவரின் நினைவாக ‘ஐஸ் ராஜா’ என்ற பெயரில் தொழிலில் நிறைய மாற்றங்களை செய்து தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.

நட்சத்திர ஓட்டல்களில் வேலை செய்த 11 வருட அனுபவத்துடன் ஐஸ்கிரீம் தயாரிப்பில் ஆறு வருட அனுபவங்களும் தான் என் வாழ்க்கைக்கு தற்போது கை
கொடுத்து வருகிறது. ஆரம்பத்தில் பேக்கரி, கேக் வகைகள் செய்து வந்தேன். அதனை கேட்பவர்களுக்கு மட்டுமே ஆர்டரின் பேரில் செய்து வருகிறோம். இப்போது முழுக்க முழுக்க எங்களது கவனம் ஐஸ்கிரீம்கள் தயாரிப்பின் மேல் மட்டுமே உள்ளது.

புதிய வகை ஐஸ்கிரீம்கள்…

பழங்கள், காய்கறிகளில் ஐஸ்கிரீம், வீகன் ஐஸ்கிரீம், சுகர் ஃபீரி ஐஸ்கிரீம், கீரை ஐஸ்கிரீம், சிறுதானியங்கள் மற்றும் கருப்பட்டி போன்றவற்றில் புது வகையான
ஐஸ்கிரீம்கள் செய்து தருகிறோம். எங்களிடம் இருநூற்று ஐம்பது புதிய வகையிலான ஐஸ்கிரீம்கள் உள்ளன. இன்னும் பல புதிய வகைகளை தயாரிக்கும் திட்டங்களும் இருக்கிறது.

விற்பனை வாய்ப்புகள்…

பெரும்பாலும் கல்யாண கேட்டரிங் ஆர்டர்கள்தான் எடுத்து செய்கிறோம். கேட்டரிங் சர்வீஸ் ஆர்டர் எடுப்பவர்களில் பெரும்பாலும் சொந்தமாக ஐஸ்கிரீம்கள் தயாரிப்பதில்லை. மற்ற கடைகளில் இருந்து தான் வாங்கி அங்கு சப்ளை செய்வார்கள். ஐஸ்கிரீம்களை தயாரிப்பதை விட உருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் அதனை பரிமாறுவதும் சவாலான விஷயம். எங்களின் ஐஸ்கிரீம்கள் உருகாமல் இருப்பதை பார்த்துக் ெகாள்வோம்.

சில கல்யாணங்களில் ஐஸ்கிரீம் ஸ்டால்கள் அமைப்பதோடு எங்கள் ஆட்களே பரிமாறு வதையும் கவனித்துக் கொள்வார்கள். அதே போன்று காலேஜ் கேன்டீன்களுக்கும் சப்ளை செய்கிறோம். வீட்டில் நடைபெறும் சிறிய விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கும் மொத்தமாக ஆர்டர்கள் கொடுக்கிறார்கள். தற்போது கோயம்புத்தூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் எங்களது ஐஸ்கிரீம் வகைகள் கிடைக்கும். சென்னையில் பிரபல யூனிவர்சிட்டி கேன்டீனில் எங்கள் தயாரிப்புகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. குழந்தைகள் மட்டுமல்ல பல பிரபலங்களும் எங்கள் ஐஸ்கிரீம்களை விரும்பி வாங்கி சுவைக்கிறார்கள்.

உங்களது சர்வீஸ்…

தற்போது முதன்மையாக கோயமுத்தூரில்தான் விற்பனை இருக்கிறது. இனிவரும் காலங்களில் தமிழகம் முழுவதும் ஐஸ்கிரீம்கள் சப்ளை செய்யும் எண்ணம் உள்ளது. ஏற்கனவே சென்னை உட்பட தேனி, திண்டுக்கல், பொள்ளாச்சி என பல ஊர்களில் விழா நிகழ்வுகளில் ஸ்டால் அமைத்து விற்பனை செய்து வருகிறோம். இதுவரை இவ்வளவு வகை ஐஸ்கிரீம்களை யாரும் தயாரித்து விற்பனை செய்ததில்லை. நாங்கள் மட்டுமே இதை செய்து வருவதால் இதற்கான பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறோம். எதிர்காலத்தில் நிறைய வகைகளில் ஐஸ்கிரீம்களை செய்து அசத்த வேண்டும் என்ற ஆசைகள் உண்டு. சொந்தமாக கடை அமைத்து ரீடெயில் சேல்ஸ் செய்கிற எண்ணமும் இருக்கிறது.

இன்னும் நவீன ரக இயந்திரங்களை அமைத்து எங்களது யூனிட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதற்காக நானும் எனது மகனும் கடும் உழைப்பினை இதில் செலுத்தி வருகிறோம். நிச்சயமாக ஜெயிப்போம் என்கிற நம்பிக்கை பெருமளவு இருக்கிறது. எதிர்காலத்தில் ஐநூறு வகையான ஐஸ்கிரீம்களை செய்து அசத்த வேண்டும் என்கிற பெருங் கனவு இருக்கிறது.

தனி ஒரு பெண்மணியாக தொழிலில் சந்தித்த சவால்கள்…

என் கணவரின் மறைவிற்குப் பிறகு யாருடைய உதவியில்லாமல் ரொம்பவுமே துவண்டு போயிருந்தேன். அப்போது பொருளாதார ரீதியாகவும் கடும் சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழல். என் குழந்தைகளுக்கான எதிர்காலம் எதிரே வந்து பயமுறுத்த அந்த சோகத்திலும் தொழிலை கவனிக்க வேண்டிய கட்டாயம். உதவிக்கு யாருமற்று சிரமப்பட்ட நிலையில் ‘‘நான் இருக்கிறேன்ம்மா” என தோளோடு தோள் கொடுத்தவன் என் மகன்தான். பத்தாவது படித்திருந்த அவன் பேக்கரி கோர்ஸ் ஒன்றை கற்றுக்கொண்டு என்னோடு களம் இறங்கினான். இன்று வரை காலில்
சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறான்.

இளம் தொழில்முனைவோரான எனது மகனை பலரும் பாராட்டும் போது மனசுக்கு ரொம்பவே நெகிழ்ச்சியா இருக்கு. என் மகன் உதவியோடுதான் இந்த தொழிலை திறம்பட நிர்வகிக்க முடிகிறது என்பது தான் உண்மை. எல்லா தொழிலை போல இதிலும் பல்வேறு கஷ்ட நஷ்டங்கள் இருக்கிறது. அதனை சமாளித்து வெளி வருவதில் தானே வெற்றி இருக்கிறது. உழைப்பு அது ஒன்றுதானே நம் வாழ்வை மாற்றக்கூடிய வல்லமை பெற்றது.

என்னை போல் பலரும் துணிந்து ஏதாவது ஒரு தொழிலில் இறங்க வேண்டும். குறிப்பாக பெண்கள். இக்கட்டான சூழலில் நமது சுயதொழிலே நம்மை அதிலிருந்து மீட்டெடுக்கும். என்னால் முடியும் என உறுதியுடன் நினைத்தால் வெற்றிகள் நம் வசப்படும். பொதுவாக உணவு சார்ந்த தொழிலுக்கு எக்காலத்திலும் வரவேற்பு உண்டு. அதில் சில புதுமைகளை புகுத்தினால் நாமும் தனித்து தெரிவோம் என்பதோடு விற்பனையும் சிறப்பானதாக இருக்கும். முதலில் குறைந்த முதலீட்டில் சிறியதாக யூனிட்டை ஆரம்பித்து வீட்டிலிருந்தே துவங்கலாம். கொஞ்சம் க்ரியேட்டிவிட்டி மட்டும் இருந்தால் போதும் வானம் நம் வசப்படும்’’ என்கிறார் பெண் தொழில்முனைவோர் லதா ராஜா.

தொகுப்பு: தனுஜா

The post புதுமைகளை புகுத்தினேன்… ஜெயித்தேன்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Dothi Lata ,
× RELATED பாதங்களைப் பராமரிக்க எளிய வழிகள்!