×

பாதங்களைப் பராமரிக்க எளிய வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நம்முடைய மொத்த உடலையும் தாங்கி சுமப்பது நமது பாதங்களே. எனவே, முகத்தின் அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் பாதத்தின் அழகிற்கும் கொடுக்க வேண்டும். அந்தவகையில் நம்முடைய கால் பாதங்களை வீட்டிலேயே பராமரிப்பது எப்படி என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

சிறிதளவு எண்ணெயை எடுத்து பாதத்தின் வலி கொண்ட இடத்தில் மசாஜ் செய்யும் போது நிவாரணம் கிடைக்கிறது. சிறந்த பலன் பெற ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம். இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொண்டு அதனை மிதமாக சூடுபடுத்தி, வலி உள்ள இடத்தில் தடவி சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம். இதனால், பாதிக்கபட்ட இடத்தை சுற்றியுள்ள ரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது மற்றும் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கிறது.

வலி குறையும் வரை இதை தொடர்ந்து பல நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம். பாதத்தில் பாத அழற்சியால் ஏற்பட்ட வீக்கத்தினை மற்றும் வலியை குறைக்க ஐஸ் பேக்கை பயன்படுத்துவது வீட்டிலேயே செய்யக் கூடிய சிறந்த தீர்வாகும். சில ஐஸ் கட்டிகளை எடுத்து பருத்தித் துண்டை கொண்டு சுற்றி பின்னர், பாதிக்கப்பட்ட பகுதியில் சில நிமிடங்களுக்கு ஒற்றி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது வீக்கமும் வலியும் குறையும்.

பாத அழற்சியை குணப்படுத்த வெதுவெதுப்பான நீரும், உப்பும் சிறந்த துணை புரிகிறது. உப்பு கரைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீரில் பாதத்தினை 10-15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்னர், காலை வெளியே எடுத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் பாதங்கள் மென்மையாக இருக்கும். சாதாரணமாக வீட்டிற்குள் நடக்கும் போது செருப்புகளை பயன்படுத்தலாம். அதன் மூலம் பாதங்களில் கறை பிடிப்பதை தவிர்க்கலாம்.ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத்தின் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் பகுதியில் உள்ள வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் கிருமிகளையும் அழிக்கும்.

பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில் சுமாா் 20 நிமிடம் மூழ்கவிடவும். பின்னா் பாதத்திற்கான ஸ்க்ரப்பரைக் கொண்டு நன்கு தேய்க்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் பாதங்கள் சுத்தமாக காட்சியளிக்கும்.கால்களை மடக்குவது, நீட்டுவது, நடப்பது உள்ளிட்ட சில வகை உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் பாதத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம். பாதத்துக்கு மசாஜ் செய்தல் மற்றும் மெல்லிய சூட்டில் பாதத்தைக் கழுவுதல் ஆகியவை பாதத்துக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

இரவில் படுக்கைக்கு செல்லும் முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷினால் சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். பின்பு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.பாதத்தில் வெடிப்பு இருந்தால் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து அந்த இடங்களில் 5 நாட்களுக்கு ஒரு முறை தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.
உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும் வெடிப்பினால் உண்டான கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

கால் விரல் நகத்தின் அழுக்கு நிறைந்து விட்டால் வெதுவெதுப்பான நல்லெண்ணெயை அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வெளியே வந்து விடும். நகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.பொதுவாக வெயிலிலும் சாி, பனியிலும் சாி பாதத்தை பாதுகாக்க பாதங்களுக்கு காலுறைகள் அணிந்து கொள்வது ஒரு சிறந்த பாதுகாப்பாகும்.

கால் விரல்களில் ஆலிவ் எண்ணெய் பூசி வருவது கால்களை மிருதுவாகவும் பட்டுப் போன்ற பளபளப்பாகவும் மாற்றும்.பாதங்கள் மற்றும் கால் மணிக்கட்டு சுழற்சிப் பயிற்சிகள் கால்களில் ரத்த ஓட்டத்தை நன்கு பராமரிக்க உதவும்.கால்வெடிப்புக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்து. கற்றாழையைக் கீறி உள்ளே இருக்கும் சோற்றை எடுத்து நீரில் நன்கு அலசி அதனை காலில் பூசிவர வெடிப்பு குணமாகும்.

தொகுப்பு: தவநிதி

The post பாதங்களைப் பராமரிக்க எளிய வழிகள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,
× RELATED தைராய்டு பிரச்னைகளும் தீர்வும்!