×

ராகி ஸ்டிக்… குழந்தைகளுக்கான முதல் பேக்கிங் உணவு!

நன்றி குங்குமம் தோழி

ஸ்நாக்ஸ் என்றாலே கடைகளில் பேக்கிங் செய்யப்பட்டு விற்கப்படும் சிப்ஸ் போன்ற ஜங்க் உணவுகள்தான் நம் கண் முன்னே தெரியும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் கொடுக்க வேண்டும் என்றுதான் பெற்றோர் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் சாப்பிடும் கடையில் விற்கப்படும் உணவுகள் ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்றால் அதற்கான சரியான பதில் நம்மிடம் இல்லை. அதனால்தான் பழங்கள், பிஸ்கெட்டுகள் மட்டும் தருகிறேன் என்று கூறும் தாய்மார்கள், அந்த பிஸ்கெட்களையுமே கடையில்தான் வாங்கித் தருகிறார்கள். கடைகளில் விற்கப்படும் பிஸ்கெட்கள் ஆரோக்கியமற்றது என்று நினைப்பவர்கள் அதனை தாங்களே செய்து கொடுக்கிறார்கள்.

வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கு வேலை, வீட்டுச் சமையல் என்பது போக இதற்காக தனிப்பட்ட நேரம் ஒதுக்க முடியாத பட்சத்தில் அவர்களுக்காகவே இந்த முயற்சியினை மேற்கொண்டுள்ளார் கோவையை சேர்ந்த சுவாதி. இவர் ராகி, சோளம், கோதுமை மற்றும் தினை போன்றவற்றில் பிஸ்கெட்டுகள், கேக்குகள் தயாரித்து விற்பனை செய்கிறார். இவரின் ராகி குச்சி பிஸ்கெட், எட்டு மாத குழந்தைக்கும் சாப்பிட கொடுக்கலாம். தங்களின் குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் மற்ற குழந்தைகளின் ஆரோக்கியம் மேல் கவனம் செலுத்தி வரும் சுவாதி ஆரோக்கிய குக்கீஸ் தயாரிக்க முன் வந்த காரணம் பற்றி விளக்குகிறார்.

‘‘இயற்பியலில் முதுகலைப் பட்டம் முடிச்ச பிறகு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்தேன். திருமணத்திற்குப் பிறகு கோவையில் செட்டிலாயிட்டேன். அங்கு என் கணவர் கேக் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் கடைக்கு செல்லும் போதுதான் எனக்கு பேக்கிங் மேல் ஆர்வம் ஏற்பட்டது. அங்குள்ள செஃப்களிடம் பேக்கிங் குறித்த அடிப்படை விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதைக் கொண்டு வீட்டிலும் தயாரிக்க ஆரம்பித்தேன். பொதுவாக கேக் என்றால் மைதா, சர்க்கரைதான் பிரதானமாக இருக்கும். அவை இல்லாமல் கேக் செய்ய முடியாதா என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. சுவையான கேக்குகளை ஆரோக்கியமாக எப்படி செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

காரணம், கேக், பிஸ்கெட்களை அதிகம் உண்பது குழந்தைகள் என்பதால், அவர்களுக்கு அதை ஆரோக்கியமாக கொடுக்க முடிவு செய்தேன். இந்த எண்ணம்தான் என்னை ஆரோக்கியமான பேக்கிங் வழியில் கொண்டு சென்றது. கடைகளில் விற்கப்படும் கேக்குகளில் ஒரு சில வகையில் மைதா இல்லை என்று கூறுவார்கள். ஆனால் அதில் மைதா இருக்கா இல்லையா என்று நம்மால் கண்டுபிடிக்க முடியாது. பிரெட் மற்றும் சில வகை கேக்குகளை ஈஸ்ட் இல்லாமல் செய்ய முடியாது. குக்கீசில் அப்படி இல்லை. இவை எதுவுமே இல்லாமல் செய்ய முடியும்’’ என்றவர் தான் சந்தித்த கஷ்டங்களையும், அதன் பின் கிடைத்த வெற்றியையும் பகிர்கிறார்.

‘‘2018ல் இதனை நான் செயல்படுத்த ஆரம்பித்தேன். கொரோனா ஊரடங்கு பலருக்கு பாதகமாக இருந்தாலும், எனக்கு பெரிதும் உதவியது. அதனை ஒரு ஆயுதமாக எடுத்துக்கொண்டு, வீட்டிலே சின்னதாக ஒரு ஓடிஜி வாங்கி, அதில்தான் நான் குக்கீஸ்களை செய்ய பழகினேன். மைதா, வெள்ளை சர்க்கரை, பிரிசர்வேடிவ்கள் இல்லாமல் குக்கீஸ், கேக் செய்து பார்த்தேன். பலமுறை நான் நினைத்தபடி சரியாக வரவில்லை. காரணம், எனக்கு பேக்கிங் தெரியாது. நானாகத்தான் கற்றுக் கொண்டேன். இதற்காக பயிற்சி எல்லாம் நான் எடுத்துக்கல. பல தோல்விகளுக்கு பிறகு என்னுடைய விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் சேர்த்து ஒரு முழுமையான ஆரோக்கியமான மைதா, சர்க்கரை மற்றும் பிரிசர்வேடிவ்கள் இல்லாத பேக்கிங் மெனுவை தயாரித்தேன்.

சுவைக்காகவும், மணத்துக்காகவும் சேர்க்கப்படும் ரசாயன சுவையூட்டிக்கு பதில் சீரகப் பொடி, சோம்பு பொடி, கிராம்பு, ஏலக்காய், வெண்ணை என ஆரோக்கியமான பொருட்களை சேர்த்து பல டிரயல் அண்ட் எரருக்கு பிறகு இறுதியாக 25க்கும் மேற்பட்ட குக்கீஸ்களை தயாரித்தேன். என்னுடைய பிஸ்கெட்டுகள், மற்றும் பேக்கிங் பொருட்களை என் சமூக வலைத்தளப் பக்கத்திலும் பதிவு செய்தேன். அதைப் பார்த்து ஆர்டர் வரத் துவங்கியது. தற்போது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பிஸ்கெட்டுகளை தயாரித்து தருகிறோம்.

முழுக்க முழுக்க சிறுதானியம், கோதுமை, உலர்ந்த பழங்கள், பருப்பு வகைகள், ராகி, நாட்டுச் சர்க்கரை, பச்சைப் பயறு, கருப்பு கவுனி அரிசி, சிவப்பு கவுனி அரிசி, தேங்காய் மற்றும் ஓட்ஸ் போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை வைத்துதான் தயாரிக்கிறோம். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ப குக்கீஸ் செய்து கொடுக்கிறோம்’’ என்ற சுவாதி தங்களுடைய பிரத்யேகமான தயாரிப்புகளை பற்றி சொல்கிறார்.

‘‘ராகி நம்முடைய உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் அதில் குக்கீஸ் மற்றும் கேக் மட்டுமில்லாமல், ராகி ஸ்டிக்ஸ் என்ற குச்சி பிஸ்கெட்களையும் தயாரிக்கிறோம். குழந்தை பிறந்த ஏழு மாதத்தில்தான் அவர்களுக்கு தாய்ப்பாலுடன் திட ஆகாரமான கூழ், கஞ்சி கொடுக்க ஆரம்பிப்போம். மேலும் அந்த சமயத்தில் சில குழந்தைகளுக்கு பல் முளைக்கவும் துவங்கும். அவர்களுக்கு மைதாவில் தயாரிக்கப்பட்ட சூப்பில் போடக்கூடிய பிஸ்கெட்களை கொடுப்பார்கள்.

அது உடலுக்கு நல்லதில்லை என்பதால், அதற்கு பதிலாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ராகி ஸ்டிக்ஸ். 11 மாதம் வரை குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்பு சேர்க்கக்கூடாது என்பதால் இந்த ராகி ஸ்டிக்கில் அவை இரண்டுமே இருக்காது. ஆறு மாத குழந்தைகளுக்கு இந்த ராகி ஸ்டிக்கினை உண்ண கொடுக்கலாம். ராகி, சோளம் இரண்டையும் முளைக்கட்டி அதனுடன் வெண்ணை சேர்த்து குறிப்பிட்ட வெப்பநிலையில் இந்த ஸ்டிக்கினை தயாரிக்கிறோம். குழந்தைகளுக்கான முதல் பேக்கிங் ப்ராடக்ட் இது என்று பெருமையாக சொல்லுவேன்’’ என்றவர் இதற்கான பயிற்சியும் அளித்து வருகிறார்.

‘‘நாங்க விற்பனை மட்டுமில்லாமல், இதற்கான பயிற்சியும் அளிக்கிறோம். 2021 முதல் ஹெல்த்தி பேக்கிங்கை கற்க விரும்பும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறோம். அந்த சமயத்தில் கோவிட் தாக்கம் இருந்ததால் ஆன்லைனில் மட்டுமே எடுத்து வந்தேன். தற்போது ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் இரண்டுமே எடுக்கும் எண்ணம் இருப்பதால், அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்த மாதத்தில் இருந்து நேரடி வகுப்புகளை துவங்க இருக்கிறேன். நேரடி வகுப்புக்கு வர முடியாதவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளலாம். ஆன்லைன் என்பதால், அவர்கள் விரும்பும் நேரத்தில் பயிற்சிக்கான வீடியோக்களை பார்த்து கற்றுக் கொள்ளலாம்’’ என்றவர், மேலும் புகை வகை குக்கீஸ்களையும் தயாரிக்கும் எண்ணம் இருப்பதாக தெரிவித்தார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post ராகி ஸ்டிக்… குழந்தைகளுக்கான முதல் பேக்கிங் உணவு! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?