×

மாமல்லபுரம் கடற்கரையில் சிசிடிவி கேமராக்கள் மாயம் திருட்டு, வழிப்பறி அதிகரிப்பு: பெண் சுற்றுலா பயணிகள் அச்சம்

மாமல்லபுரம்: தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. மாமல்லபுரம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது புராதன சின்னங்களும், கற்சிற்பங்களும்தான். கடந்த 7ம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தை ஆட்சிபுரிந்த பல்லவ மன்னர்கள் அழகுர செதுக்கிய புராதன சிற்பங்களை யுனெஸ்கோ நிறுவனம் உலகின் மிகவும் பழமைவாய்ந்த பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரித்துள்ளது. புராதன சின்னங்களை கண்டு ரசிக்க தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் சொகுசு பஸ், வேன், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

இவர்கள் ஒரு வாரம் தங்கி சுற்றிப்பார்ப்பது, புராதன சின்னங்களின் முன்பு செல்பி புகைப்படம் எடுப்பது, புராதன சின்னங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வது, கடற்கரைக்கு சென்று மீன் வறுப்பதை புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர். இந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியடைகின்றனர். இங்கு வரும் காதல் ஜோடிகள் பாரம்பரிய நினைவு சின்னங்களை சிதைப்பதும் தங்களின் பெயர்களை புராதன சின்னங்களில் எழுதி அலங்கோலப்படுத்திவிட்டு செல்வது, உணவு, தின்பண்டங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை கண்ட இடங்களில் வீசிவிட்டு செல்கின்றனர்.

மேலும் பயணிகளிடம் செல்போன் பறிப்பு, கை பை திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் மர்ம கும்பலை எளிதில் அடையாளம் காணும் வகையில், வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், கடற்கரை உட்பட முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் 360 டிகிரியில் சுழன்று கண்காணிக்கும் வகையிலும், பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கடந்த 2017ம் ஆண்டு ரூ.11.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டது.

இதையடுத்து, நகரப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள், நவீன கழிப்பறைகள், நடைபாதைகள், அலங்கார மின் விளக்குகள், மீட்பு படகுகள், குப்பைகளை அகற்ற டிராக்டர்கள், இயற்கை அழகை ரசிக்க இருக்கை மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க சுற்றுலாத்துறை முடிவு செய்தது. இந்த பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக ரூ.6.6 கோடி நிதி வழங்கப்பட்டு முதல் கட்டமாக கடற்கரையில் 24 மணி நேரமும் 360 டிகிரி சுழன்று துல்லியமாக கண்காணிக்கும் வகையில் 40 சிசிடிவி கேமராக்கள் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பொருத்தப்பட்டது. ஆனால் முறையாக அதிகாரிகள் பரா மரிக்காததால் 39 சிசிடிவி கேமராக்கள், பேட்டரிகள் மற்றும் வயர்களை திருடப்பட்டுள்ளது. தற்போது ஒரே ஒரு கம்பத்தில் மட்டும் சிசிடிவி கேமரா உள்ளது. அதுவும் உடைந்தும் பேட்டரியின் பெட்டி கழன்றும் வயர்கள் அறுந்து காட்சிப் பொருளாக காணப்படுகிறது.

இதை சாதகமாக பயன்படுத்திகொள்ளும் மர்ம கும்பல் சுற்றுலா பயணிகளிடம் வழிப்பறி, கொள்ளை, பாலியல் சீண்டல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதுபோல் மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட்டுகளில் வாடகைக்கு அறை எடுத்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நேரில் வந்து ஆய்வு செய்து குற்றச்சம்பவங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை மீண்டும் பொருத்தி, பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் கடற்கரையில் சிசிடிவி கேமராக்கள் மாயம் திருட்டு, வழிப்பறி அதிகரிப்பு: பெண் சுற்றுலா பயணிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Tamil Nadu ,Pallava ,UNESCO ,
× RELATED புராதன சின்னங்களை சுற்றி பார்க்க...