வாழ்வை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்?
– பல்கூன்குமார், திருவனைக்காவல்.
என்னோடு வாழ்ந்தவர்கள் என்னை எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்பதைவிட, எனக்குப் பின்னால் வரப்போகிறவர்கள், என்னை எப்படி மதிப்பிடப் போகிறார்கள் என்பதைப் பற்றியே அதிகம் கவலைப்பட வேண்டும். வாழ்வின் சிந்தனை எதிர்காலத்தைப் பற்றியது அல்ல. எதிர்காலத்தில் வாழ்பவர்களுக்கு நாம் செய்து வைத்திருக்கும் அல்லது வைக்கப் போகும் நிரந்தர நன்மை பற்றியதாகவே இருக்க வேண்டும்.
நம் கவலைகளை பிறரிடம் சொல்லலாமா?
– வேதஸ்ரீ, அம்பத்தூர் – சென்னை.
பிறர் என்பதில் வரையறை தேவை. கவலைகளை பிறரிடம் சொல்வதால் பாரம் குறைகிறது என்கிறார்கள். ஒரு சிலர் நல்ல தீர்வையும் சொல்லுகின்றார்கள். எனவே, பிறரிடம் என்பது அது யாரிடம் சொல்கிறோம் என்பதைப் பொறுத்தது. பெரும்பாலும் கவலைகளை பிறரிடம் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. பாதிப்பேருக்கு அதில் சந்தோசம் இருக்கும். மீதிப்பேருக்கு அதில் அக்கறை எதுவும் இருக்காது.
குழந்தைக்கு எதைச் சொல்லித் தர வேண்டும்?
– அனிதா, குரோம்பேட்டை – சென்னை.
நேர்மையுடன் வாழும் திறமையைச் சொல்லித் தர வேண்டும். காரணம், நேர்மையுடன் வாழ்வதற்குதான் போராட்ட குணமும், திறமையும் தேவைப்படுகிறது. அதை வளர்த்துக்கொள்வதற்கே படிப்பு பயன் பட வேண்டும். இன்றைய போட்டி உலகமும், வணிக உலகமும் இத்தகைய நேர்மையை பூரணமாகச் சொல்லித் தரும் சூழலில் இல்லை என்பதுதான் யதார்த்தம்.
கல்யாண பத்திரிகையில் சிரஞ்சீவி என்று போடுகிறார்களே, சரியா? அதற்கு என்ன பொருள்?
– அஸ்வின்குமார், திருச்சி.
சிரஞ்ஜீவி என்றால் “என்றும் ஜீவித்து இருப்பவர்” என்று பொருள். அதனால், சிரஞ்ஜீவி என்றுதான் எழுத வேண்டும். சிரஞ்சீவி என்று சொன்னால், தலையை துண்டித்தல் என்கிற பொருளும் வரும். எனவே எழுதுகின்றபொழுது சிரஞ்ஜீவி என்று எழுதுவது சாலச் சிறந்தது.
ராசிகளில் நெருப்பு ராசி, நீர் ராசி என்ற பிரிவினை இருப்பது உண்மைதானா?
– ராஜாராமன், கும்பகோணம்.
உண்மைதான். பன்னிரு ராசிகளில் மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றையும் ‘நெருப்பு ராசிகள்’ என்றும், ரிஷபம், கன்னி, மகரம் ஆகியவற்றை ‘நில ராசிகள்’ என்றும், மிதுனம், துலாம், கும்பம் ஆகிய இம்மூன்றையும் ‘காற்று ராசிகள்’ என்றும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவற்றை ‘நீர் ராசிகள்’ என்றும் ஜோதிடர்கள் அழைக்கிறார்கள். அதற்கேற்றவாறு நெருப்பு ராசிக்காரர்கள் எளிதில் கோபப்படுப வர்களாகவும், நில ராசிக் காரர்கள் பொறுமைசாலிகளாகவும், காற்று ராசிக்காரர்கள் அலைபாயும் மனதினை உடையவர்களாகவும், நீர் ராசிக்காரர்கள் எளிதில் இளகுகின்ற மனதினைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
The post குழந்தைக்கு எதைச் சொல்லித் தர வேண்டும்? appeared first on Dinakaran.