×

நிலக்கோட்டை பகுதியில் கழுதைப்பால் விற்பனை அமோகம்

*லிட்டர் ரூ.14,000க்கு விலை போகிறது

நிலக்கோட்டை : நிலக்கோட்டை பகுதியில் கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன்படி ஒரு சங்கு பால் ரூ.150, மற்றும் ஒரு லிட்டர் ரூ.14,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.நிலக்கோட்டை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தினமும் காலை நேரத்தில் கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

ஒரு காலத்தில் பொதி சுமப்பதற்காகவும், மலைப்பகுதிகளில் பாரம் எடுத்துச்செல்லவும் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்ட கழுதைகளை, இன்று மருத்துவ குணம் கொண்ட பால் என கூறப்படுவதால், அதன் உரிமையாளர்கள் ஆடு, மாடுகள் போல் வளர்த்து வருகின்றனர். இவற்றின் பாலை விற்பனை செய்வதற்காகவே, அதிக எண்ணிக்கையில் வளர்த்து வருகின்றனர்.

இந்த கழுதைகளை கூட்டம் கூட்டமாக பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்து சென்று, அவற்றின் பாலை விற்று வருமானம் ஈட்டி வருகின்றனர், இதேபோல நிலக்கோட்டை புறநகர் பகுதிகளில் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சின்னன் என்பவர் கழுதைகளுடன் வந்து தங்கியுள்ளார்.

இவர் ஒரு சங்கு கழுதைப்பாலை (குழந்தைகளுக்கு பாலூட்டும் சங்கு) ரூ.100 முதல் 150 வரை விற்பனை செய்கிறார். மேலும் கழுதைப்பால் குடித்தால் செரிமான கோளாறுகள் நீங்கும், மஞ்சள் காமாலை, டெங்கு, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த எதிர்ப்பு சக்தியை வழங்கும் என்பதுடன் இதில் அதிக ஊட்டச்சத்து உள்ளதாக கூறி கழுதைப்பால் விற்பனையில் ஈடுபட்டு கவருகிறார்.

கழுதைப்பால் கேட்கும் பொதுமக்களுக்கு, உடனடியாக அந்த இடத்திலேயே பாலை கறந்து தருகிறார். இதனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆர்வமாக பாலை வாங்கி குழந்தைகளுக்கு தருகின்றனர். இதன்மூலம் ஒரு லிட்டர் கழுதைப்பால் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பசும்பாலை விட கழுதைப்பால் விலை பல மடங்கு அதிகமாக இருந்தாலும், ஒரு நாளைக்கு 1 லிட்டர் வரை விற்பனையாவதாக சின்னன் கூறினார். இதன்படி மாதந்தோறும் இவர் லட்சகணக்கான ரூபாய் வருமானம் ஈட்டுவது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. இதற்கிடையே கழுதைப்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதாக, இதுவரை எந்த மருத்துவரும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post நிலக்கோட்டை பகுதியில் கழுதைப்பால் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,
× RELATED மரக்கன்றுகள் நடல்