×

கல்லாறு அருகே பைக்கில் சென்ற போலீஸ்காரரின் மனைவி லாரி மோதி பரிதாப பலி

*இரு குழந்தைகள் காயம்

மேட்டுப்பாளையம் : கல்லாறு அருகே பைக் மீது லாரி மோதி போலீஸ்காரரின் மனைவி பலயானார். கோவை சின்னத்தடாகம் வடக்கு விதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (40). கோவை ஆயுதப்படையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். கோடை விடுமுறை என்பதால் காரமடை டீச்சர்ஸ் காலனியில் உள்ள மாமனார் வீட்டிற்கு மனைவி பவித்ரா (35), மகள் கயல் (8) தனசேகரனின் அண்ணன் சுரேஷ் குமாரின் மகள்அன்பு (4), ஆகியோருடன் தனசேகர் சில நாட்களுக்கு முன் வந்துள்ளார்.

நேற்று காலை தனசேகர் ஒரு பைக்கிலும், அன்பு, கயல் உள்ளிட்டோருடன் பவித்ரா மற்றொரு பைக்கிலும் கல்லாறு சென்றனர். 4 பேரும் அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது தனசேகர் முன்னால் செல்ல, பின்னால் வந்துகொண்டிருந்தார். கல்லாறு ரயில்வே கேட் அருகே சென்றபோது எதிரே மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி பிரட் பாக்கெட்டுகளை ஏற்றிச்சென்ற லாரி தனசேகர் மற்றும் பவித்ராவின் பைக்குகள் மீது மோதியது.

இதில் அதிர்ஷ்டவசமாக தனசேகர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் வேகமாக சென்ற லாரி பவித்ராவின் பைக் மீது மோதியதில் பவித்ரா, அன்பு, கயல் உள்ளிட்ட மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இது குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பவித்ரா, அன்பு, கயல் உள்ளிட்ட மூவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பவித்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

படுகாயமடைந்த அன்பு, கயல் உள்ளிட்டோருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலியை சேர்ந்த அனு (31) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தினை ஏற்படுத்திய அனு மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மதுபோதையில் லாரியை இயக்கி பைக் மீது மோதியதில் தலைமை காவலரின் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கல்லாறு அருகே பைக்கில் சென்ற போலீஸ்காரரின் மனைவி லாரி மோதி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Kallar ,Mettupalayam ,Dhanasekaran ,Coimbatore ,Chinnathadagam North Vidhi ,Coimbatore Armed Forces ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில்...