×

எங்களை கவனித்துக் கொள்ளாததால் மகனுக்கு எழுதிக் கொடுத்த தான செட்டில்மெண்ட்டை ரத்து செய்ய வேண்டும்: வயதான தம்பதி கலெக்டரிடம் மனு

 

விழுப்புரம், மே 28: எங்களை கவனித்துக் கொள்ளாததால் மகனுக்கு எழுதிக் கொடுத்த தான செட்டில்மெண்ட் சொத்துப்பதிவை ரத்து செய்ய வேண்டுமென வயதான தம்பதி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கண்ணன்(70). அவரது மனைவி கங்காபாய்(65) ஆகியோர் நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், செஞ்சி கிருஷ்ணாபுரத்தில், நான் எனது மனைவி கங்காபாய் இருவரும் வசித்து வருகிறோம்.

எனது மகள் பிரியா, மகன் சீனுவாசன் ஆகிய இருவருக்கும் நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து கொடுத்து விட்டேன். இந்நிலையில், செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள எனக்கு சொந்தமான திருமண மண்டபத்தின் வருவாய் மூலம் குடும்பம் நடத்தி வந்தேன். எனது மகன் சீனுவாசன், என்னையும் என் மனைவி மற்றும் அவரது சகோதரிக்கும் தேவையான வாழ்வாதாரத்தை செய்து கொடுப்பதாக உறுதி கூறி, எனக்கு சொந்தமான திருமண மண்டபத்தை தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதனை நம்பி, கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி, எனது மகன் பெயருக்கு திருமண மண்டபத்தை தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்துவிட்டேன். இந்நிலையில் என்னையும், எனது மனைவியையும் சரிவர கவனிக்காமல், எங்களுக்கான உணவு மற்றும் மருத்துவ செலவுக்குகூட உதவி செய்யாமல் கடமை தவறிவிட்டார். இதனால், வயதான தம்பதிகளான நானும், எனது மனைவியும் குடும்ப செலவுக்கு பணமின்றி பிறரை எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால், மனமுடைந்து நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, எனது மகன் எங்களிடம் பொய்யான வாக்குறுதி அளித்து, எழுதி வாங்கிய திருமண மண்டப சொத்து தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய கேட்டுக் கொள்கிறோம். அந்த சொத்து மீண்டும் எனக்கு கிடைத்தால், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு நானும், எனது மனைவியும் எங்களது இறுதி காலத்தை நிம்மதியாக வாழ, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post எங்களை கவனித்துக் கொள்ளாததால் மகனுக்கு எழுதிக் கொடுத்த தான செட்டில்மெண்ட்டை ரத்து செய்ய வேண்டும்: வயதான தம்பதி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Kannan ,Krishnapuram ,Senchi ,Villupuram district ,Dinakaran ,
× RELATED எங்களை கவனித்துக் கொள்ளாததால்...