×

ஜூன் 4ம் தேதிக்கு பிறகு மோடியை ஈடி விசாரிக்கும்: பீகார் பிரசாரத்தில் ராகுல் காந்தி உறுதி

பக்தியார்பூர்: நாடு முழுவதும் இந்தியா கூட்டணி ஆதரவு அலை வீசுவதாக பீகாரில் நடந்த பிரசார கூட்டததில் ராகுல் காந்தி பேசினார். பீகாரில் உள்ள பக்தியார்பூர் என்ற இடத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசுகையில்,‘‘ இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் வீசுகிறது. எனவே, மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு கிடையாது.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும். ராணுவ வீரர்களை தொழிலாளர்களாக மோடி மாற்றி உள்ளார். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அக்னிபத் திட்டம் குப்பையில் வீசப்படும். அக்னி வீர் திட்டத்தில் சேரும் வீரர்கள் உயிரிழந்தாலோ அல்லது வீரமரணம் அடைந்தாலோ அவர்களுக்கு இழப்பீடு எதுவும் கிடைக்காது. பெண்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.8500 வழங்கப்படும்.

ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி பொறுப்பேற்ற பின்னர் ஜூலை முதல் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.8,500 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தினரின் நிதி நிலைமை மேம்பாடு அடையும்.  மோடி ஆட்சியில் 22 பேரை கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சி வந்தால் கோடிக்கணக்கானோர் லட்சாதிபதியாக்கப்படுவார்கள்’’ என்றார்.

ஈடி விசாரிக்கும் சமீபத்தில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி,நான் மனித பிறவியே அல்ல, கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார் என தெரிவித்திருந்தார். இது பற்றி ராகுல் காந்தி கூறுகையில்,‘‘ ஜூன் 4ம் தேதிக்கு பிறகு ஊழல் பற்றி மோடியிடம் அமலாக்கத்துறை கேள்வி கேட்கும். அப்போது மோடி, எனக்கு எதுவும் தெரியாது. கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பினார். கடவுள் செய்யச் சொன்னார். அதனால் செய்தேன் என்று கூறுவார் என தெரிகிறது என்றார்.

* மேடை சரிந்தது: ராகுல் தப்பினார்
பாடலிபுத்ரா தொகுதி ஆர்ஜேடி வேட்பாளர் மிசா பாரதியை ஆதரித்து நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். ராகுல் காந்தியும், மிசா பாரதியும் மேடையின் நடுவே சென்ற போது மேடை திடீரென சரிந்தது. சமநிலை இல்லாததால் கீழே விழ போன ராகுல் காந்தியின் கையை மிசா பாரதி பிடித்து கொண்டார். ராகுலின் பாதுகாவலர்களும் உதவிக்கு ஓடி வந்தனர். அப்போது மிசா பாரதி, ராகுல் காந்திக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவர் நன்றாக இருக்கிறார் என தெரிவித்தார்.

The post ஜூன் 4ம் தேதிக்கு பிறகு மோடியை ஈடி விசாரிக்கும்: பீகார் பிரசாரத்தில் ராகுல் காந்தி உறுதி appeared first on Dinakaran.

Tags : ED ,Modi ,Rahul Gandhi ,Bihar ,Bakhtiyarpur ,India ,Congress ,president ,India Alliance ,Bakhtiarpur ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகளைப்...