×

மருத்துவ மாணவரின் கல்விச் சான்றுகளை வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவ மாணவரின் கல்விச் சான்றிதழ்களை உடனே வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக் சர்ஜரி, உடல் மறுசீரமைப்பு சிகிச்சை முறையில் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மாணவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவர் அரசு மருத்துவமனையில் பணிபுரிய தயாராக இருந்தும் அவருக்கான பணியில் காலியிடம் இல்லை. காலியிடம் இல்லாததால் பணியமர்த்தப்படாததற்கு மருத்துவர் பொறுப்பேற்க முடியாது என்றும் ஒருவரின் சான்றிதழ்கள் மீது பிறருக்கு எந்த உரிமையும் இருக்க முடியாது என்றும் கல்விச் சான்றிதழ்கள் சந்தைப்படுத்தக்கூடிய விற்பனை பொருட்கள் அல்ல என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியைச் சேர்ந்த ரஞ்சன் ஜேம்ஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

அரசு தரப்பில் பணி வழங்கி மனுதாரர் அதை ஏற்க மறுக்கும் சூழலில் இழப்பீட்டை வசூலிப்பது தொடர்பாக முடிவெடுக்கலாம். இந்த வழக்கை பொறுத்தவரை அரசு தரப்பில் மனுதாரருக்கான பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை, மனுதாரர் பணியாற்ற தயாராக தான் இருக்கிறார் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை, மதுரை, துாத்துக்குடி, தேனி மருத்துவ கல்லுாரிகள் மற்றும் கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரிகளில், முதுநிலை படிப்பு முடித்த டாக்டர்கள் 25 பேர், தாக்கல் செய்த மனுவில் கடந்த ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்பு முடித்தோம். படிப்பில் சேரும்போது, இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு உத்தரவாதம் அளித்தோம்.அதன்படி, படித்து முடித்த உடன், கொரோனா சிகிச்சை பணியில் 10 மாதங்கள் ஈடுபடுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டோம்;

புதிதாக எந்த பணியும் வழங்கப்படவில்லை.அதனால், கல்வி சான்றிதழ்களை தரும்படி, கல்லுாரி நிர்வாகத்திடம் கோரினோம். இரண்டு ஆண்டுகள் முழுமையாக பணியாற்றவில்லை எனக்கூறி சான்றிதழ்களை வழங்கவில்லை. எங்களின் கல்வி சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

கல்வி சான்றிதழ் ஒன்றும் சந்தைப் பொருள் அல்ல; மாணவர்களின் சான்றிதழ்களை நிர்வாகம் வைத்துக் கொள்ள முடியாது. எனவே, முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவ மாணவரின் கல்விச் சான்றிதழ்களை உடனே வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது.

The post மருத்துவ மாணவரின் கல்விச் சான்றுகளை வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : HC ,Madurai ,Madurai High Court ,Dinakaran ,
× RELATED முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுத்தாக்கல்