×
Saravana Stores

போக்குவரத்து விதிகளை மீறியதாக 2 அரசு பேருந்துக்கு அபராதம் விதிப்பு

 

கள்ளக்குறிச்சி, மே 26: கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 2 அரசு பேருந்துக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலம் கோட்டம் அரசு பேருந்து கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை செல்லும்போது, வழக்கமாக வெளியே செல்லும் வழியாக செல்லாமல் எதிர் வழியாக, அதாவது பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லும் வழியாக பேருந்து வெளியேறியதால் மற்ற பேருந்துகள், பஸ் நிலையத்திற்குள் உள்ளே செல்ல முடியாததால் துருகம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறியதாக சேலம் கோட்ட அரசு பேருந்துக்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் ரூ.500 அபராதம் விதித்தார். இதேபோல், நான்குமுனை சந்திப்பில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு இருந்தபோது விழுப்புரம் கோட்டம் அரசு பேருந்து சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு சென்றபோது, ஒரு வழிபாதையை பின்பற்றாமல் போக்குவரத்து விதிகளை மீறியும், பணியில் ஈடுபட்டு இருந்த உதவி ஆய்வாளர் பாலமுருகன் கை மேல் பேருந்து உரசி சென்றுள்ளது.

இதையடுத்து விதிகளை மீறியதாக விழுப்புரம் கோட்டம் அரசு பேருந்துக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விதிகளை முறையாக பின்பற்றாமல் பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

The post போக்குவரத்து விதிகளை மீறியதாக 2 அரசு பேருந்துக்கு அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Balamurugan ,Dinakaran ,
× RELATED ரத்தினகிரி கோயிலில் 4ம் நாள் கந்த...