×

விஸ்வநாததாஸ் காலனியில் சாலையில் ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்: சரி செய்ய மக்கள் கோரிக்கை


விருதுநகர்: விருதுநகர் விஸ்வநாததாஸ் காலனியில் சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகரில் கடந்த 2007ல் பாதாள சாக்கடை பணிகள் ரூ.23 கோடியில் தொடங்கப்பட்டது. அதில், சுத்திகரிப்பு நிலையப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டன. ஆனால், ஏராளமான பகுதிகளில் பாதாள சாக்கடைக்கான பிரதான குழாய்கள் பதிக்கப்படவில்லை. இதையடுத்து ரூ.4 கோடி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.

இருந்தபோதும், தற்போது வரை சுமார் 6 ஆயிரம் வீடுகளுக்கு மட்டுமே பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். வீடுகளில் இருந்து பாதாள சாக்கடை தொட்டிகளில் விழும் கழிவு நீரானது, கழிவு நீரேற்று நிலையத்திற்கு வருகிறது. பின்பு, அங்கிருந்து ராட்சத மோட்டார் மூலம் பம்ப் செய்யப்பட்டு, குழாய்கள் மூலம், மாத்தநாயக்கன்பட்டி சாலையில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு, சுத்தமான நீர், அருகில் செல்லும் ஆற்றில் விடப்படுகிறது. இந்நிலையில் விஸ்வநாத தாஸ் காலனியில் உள்ள நிலையத்தில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மின் மோட்டார்கள் பழுதடைந்துள்ளது. அதனை சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக பாதாள சாக்கடை தொட்டிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. இதனால் கழிவுநீரானது உந்து நிலையத்திற்கு செல்ல முடியாமல் மேன்வெல்கள் மூலம் வெளியேறி சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவதோடு உந்துநிலைய மின்மோட்டாரை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விஸ்வநாததாஸ் காலனியில் சாலையில் ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்: சரி செய்ய மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Viswanathas Colony ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED ரத்தத்திற்கான தேவை அதிகரிப்பு...