×

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட முயற்சிப்பதா? கேரள அரசுக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட முயற்சிப்பதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி: முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணைக்கு அனுமதி தரக்கூடாது. உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் கேரள அரசின் அணைகட்டும் முயற்சியை கைவிட ஒன்றிய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் முடிவுக்கு பின் பிரதமரை சந்தித்து வலியிறுத்துவேன்.

* செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் ஒன்றிய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியிருப்பதாக வந்திருக்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது. கேரள அரசின் இத்தகைய முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மையை உச்ச நீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுவால் உறுதி செய்யப்பட்ட பிறகு, கேரள அரசு இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

* அன்புமணி (பாமக தலைவர்): கேரள அரசின் நோக்கம் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது அல்ல. மாறாக, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த விடாமல் தடுப்பது தான். அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான கேரள அரசின் சதித்திட்டத்தை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாற்று அணையின் அங்கமான பேபி அணையை வலுப்படுத்தத் தடையாக அப்பகுதியில் உள்ள சுமார் 15 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கும்படி கேரள அரசுக்கு ஒன்றிய அரசு ஆணையிட வேண்டும்.

The post முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட முயற்சிப்பதா? கேரள அரசுக்கு தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Mullai Peryaru Dam ,Kerala government ,Chennai ,Tamil Nadu ,Mullai-Periyaru Dam ,PAMAKA ,RAMADAS ,MULLA PERIYARU AREA ,
× RELATED தக்கலை பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் கேரள அரசு பேருந்துகள்