×

ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்!

பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா

இதற்கு முந்தைய நாமமான, “நகதீதிதி ஸஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா…’’ என்று நகங்களைப்பற்றி பார்த்தோம். இந்த வர்ணனையில் இந்த பாதத்தை நமஸ்கரிப்பவனுடைய தமோகுணம் என்கிற இருட்டை, அறியாமையை ஒளிமயமான அம்பிகையின் கால் நகங்கள் எப்படி நீக்குகிறது என்று பார்த்தோம். இந்த நாமமான, ‘‘பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா…’’ என்கிற இந்த நாமமானது, மொத்தமாக அம்பிகையினுடைய திருவடிகளை சொல்கிறது. இதற்கு முன்பு அம்பிகையினுடைய கணுக்கால், பாதத்தினுடைய மேற்பரப்பு, நகங்களை தனியாகப் பார்த்தோம். இப்படியே ஒவ்வொன்றாக தனித்தனியாக பார்த்துக் கொண்டே வந்தோம். இப்போது, மொத்தமான திருவடியை இந்த நாமம் வர்ணிக்கின்றது. இந்த நாமாவினுடைய அர்த்தத்தை பார்ப்பதற்கு முன்பு, “பதத்வய’’ என்கிற வார்த்தை அடுத்து வருகிற “ப்ரபாஜாலா…’’ என்கிற நாமத்தை கொஞ்சம் விட்டுவிடுவோம். “பதத்வய பராக்ருத ஸரோருஹா…’’ என்கிற பதத்தை எடுத்துக் கொள்வோம். இதில் வருகிற ஸரோருஹம் எனில் தாமரை என்று பொருள். பராக்ருஹ ஸரோருஹா என்று சொன்னால், தாமரையை விட… அதாவது தாமரையே வெட்கப்படும்படியாகச் செய்யும், தாமரையையே மதிப்பிழக்கச் செய்யும். ஸரோருஹம் என்கிற தாமரையை மதிப்பிழக்கச் செய்யும். எதுவெனில், பதத் த்வயம்… அதாவது இந்த அம்பிகையினுடைய இரண்டு பாதங்கள் இருக்கின்றனவே. அவை இரண்டும் தாமரையையே வெட்கப்படும்படிச் செய்யும். இதற்கு நடுவே ப்ரபாஜாலா… என்கிற ஒரு வார்த்தையை போட்டிருக்கிறார்கள். ப்ரபை என்றால் ஒளி என்று பொருள். அந்த ஒளிக்கு ஒரு ஜாலம் இருக்கிறது. இப்போது மொத்தமாக இதன் பொருளைப் பார்க்கலாமா! தாமரையை மதிப்பிழக்கச் செய்யும் திருவடி எதனால் என்று பார்த்தால், தன்னுடைய ஒளியினால் மதிப்பிழக்கச்செய்கிறது.

அது சரி. அதெப்படி முடியும். தாமரைக்கும் அம்பிகையின் திருவடிக்கும் என்ன ஒப்புமை எனில், தாமரை மென்மையானது. அம்பிகையின் திருவடியும் மென்மையானது. தாமரை வாசம் மிகுந்தது. அம்பிகையின் திருவடியும் வாசம் மிகுந்தது. தாமரை குளத்தில் பூக்கக் கூடியது. அம்பிகையினுடைய திருவடி பக்தனுடைய மனம் என்கிற குளத்தில் பூக்கக் கூடியது. அதற்குப் பிறகு தாமரையைத் தேடி தேனீக்கள் வரும். வண்டுகள் வரும். அம்பிகை என்கிற திருவடியைத் தேடி ஞானி என்கிற வண்டு வரும். இப்படியே அம்பிகையினுடைய திருவடி, தாமரை என்று ஒப்புமை இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால், இங்கு மதிப்பிழக்கச் செய்யும் என்று சொல்லி விட்டார்கள் அல்லவா? ஆக, தாமரையைவிட அம்பிகையின் திருவடி ஒரு படி மேலேயிருந்தால்தானே மதிப்பிழக்க முடியும். அந்த ஒரு படி மேலே இருக்கிறது. இதுவரைக்கும் நாம் இரண்டையும் ஒப்பீடு செய்து கொண்டே வந்தோம். ஆனால், அது எந்த இடத்தில், எப்படி தாமரையை விட ஒரு படி மேலே இருக்கிறதெனில், தாமரை சூரியனைப் பார்த்து மலருகிறது அல்லவா! சூரியனின் ஒளி பட்டால் தாமரை மலருகின்றது. சூரியனின் ஒளிபட்டு சூரியனைப் பார்த்து தாமரை மலருகின்றது அவ்வளவுதான். ஆனால், அம்பிகையின் திருவடி தாமரையாக இருக்கிறது. ஆனால், சூரியனைப் பார்த்து மலருகிற தாமரையாக இல்லை. சூரியனே இறங்கிவந்து தாமரையானால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது, அம்பாளின் திருவடி. அதனால்தான் ப்ரபாஜாலம் காண்பிக்கின்றது. சூரியனுடைய ஒளியைப் பெற்று மலரும் தாமரை தானாக ஒளி வீச முடியாது. தாமரைக்கு ஒளி வீசக்கூடிய தன்மை கிடையாது. ஒளியைப் பெற்று மலரக் கூடிய தன்மைதான் உண்டு. இரவு நேரமானால், தாமரை மீண்டும் கூம்பிவிடும். இருளில் நம்மால் தாமரையை பார்க்க முடியாது. ஏனெனில், தாமரைக்கு என்று ஒளி கிடையாது.

ஆனால், இங்கு அம்பிகையினுடைய திருவடி எப்படி இருக்கிறதெனில், தாமரை மாதிரி இருக்கிறது. ஆனால், சூரியனின் ஒளியை வாங்கி மலரக் கூடிய தாமரைபோன்று இல்லை. சூரியனாகவே இருக்கக்கூடிய தாமரையாக இருக்கிறது. சூரிய ஒளியையே தரக்கூடிய தாமரையாக இருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமென்றால், சூரியனுக்கே ஒளி கொடுக்கக்கூடிய தாமரையாக இருக்கிறது. இந்தத் திருவடி ஒளியினால்தான், சூரியனும் சந்திரனும் அக்னியும் நட்சத்திரங்களும் ஒளிவிட முடியும். இந்தத் திருவடி தாமரை ஒளி கொடுக்கவில்லையென்றால் சூரிய, சந்திர, நட்சத்திராதிகள் எதுவுமே ஒளி கொடுக்காது. இப்போது சொல்லக் கூடிய விஷயமானது கடோபநிஷத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
“ந தத்ர சூர்யோ பாதிந சந்திர
தாரகம்
நேமா வித்யுதோ பாந்தி குதோயம்
அக்னிஹி
தமேவ பாந்தம் அனுபாதி சர்வம்
தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி’’
எங்கு சூரியனும், சந்திரனும், அக்னியும், மின்னலும், நட்சத்திரங்களும் ஒளிவிடவில்லையோ, சூரியனுக்கும் சந்திரனுக்கும் அக்னிக்கும் மின்னலுக்கும் நட்சத்திரங்களுக்கும் யார் ஒளி கொடுக்கிறானோ, அவன்தான் உண்மையாக ஒளியாக இருப்பவன். அந்த ஒளியைத்தான் தியானம் செய்ய வேண்டுமென்று கடோபநிஷத் சொல்கிறது. நாம் ஒளி என்று எதையெல்லாம் பார்க்கிறோமோ அதாவது வெளியே காணப்படும் சூரியனில் ஆரம்பித்து நமக்குள்ளேயே விளங்கும் ஞானசூரியன் வரைக்கும்… அதாவது பஹிர்முகமாக இருக்கும் சூரியனில் தொடங்கி அந்தர்முகமாக இருக்கும் ஞானசூரியன் வரைக்கும் ஒளி கொடுக்கக் கூடியது என்று கேட்டால், பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா.
இதில் என்னவொரு பெரிய விஷயமெனில், ஒளி கொடுக்கக் கூடிய பொருட்கள் எல்லாமே இயற்கையில் பார்த்தால், வெப்பத்தையும் சேர்த்தே கொடுக்கும். சூரியன் ஒளி கொடுக்கக் கூடியது. சூரியனின் வெப்பம் இருக்கிறது. அக்னி ஒளி கொடுக்கும். அக்னியிலும் வெப்பம் இருக்கிறது. மின்னலாக இருந்தாலும் சரி, நட்சத்திரங்களானாலும் சரி, சந்திரனாக இருந்தாலும் சரிதான், ஏன் சந்திரன்கூட சூரியனின் ஒளியை வாங்கி இப்படி அனுப்புகிறது. அதனால், சந்திரனுக்குரிய வெப்பமும் உண்டு. ஆனால், இங்கு அம்பிகையினுடைய பாதத்தை சொல்லும்போது ஒளிமயமான தாமரை என்று வசின்யாதி வாக் தேவதைகள் வர்ணிக்கிறார்கள். ஆனால், அம்பிகையினுடைய பாதங்கள் ஒளிமயமாக இருப்பதால், வெப்பமாக இருக்குமா என்று கேட்டால், கொஞ்சம்கூட வெப்பமே இருக்காது.

எவ்வளவுக்கு எவ்வளவு ஒளி கொடுக்குமோ, அவ்வளவுக்கு அவ்வளவு குளிர்ச்சியாகவும் இருக்கும். ஏனெனில், அதேநேரத்தில் அந்த திருவடியில் சரணாகதி ஆகக்கூடிய பக்தர்களை காப்பாற்றுவதற்காக குளிர்ச்சியான திருவடியாக இருக்கிறது. மென்மையான திருவடியாக இருக்கிறது, இந்த திருவடியில் குளிர்ச்சியாக இருப்பது என்னவெனில், அம்பிகையினுடைய கருணை. இந்தத் திருவடியில் இருக்ககூடிய ஒளி எதுவென்று கேட்டால், நாம் அடையக் கூடிய ஞானம். ஞானம் அடையும்போது அங்கு கருணை என்கிற குளிர்ச்சி இருக்கும். ஞான அக்னி சுடாது. நாம் சாதாரணமாக சொல்லக் கூடிய அக்னி சுடும். ஆனால், ஞானாக்னி என்றைக்குமே சுடாது. அதனால் குளிர்ச்சியும் மென்மையும் பொருந்திய திருவடி. தாமரையை மதிப்பிழக்கச் செய்கிற திருவடி. அதே நேரத்தில், ஒளிமயமாக இருக்கக் கூடிய திருவடி. ஞானப் பிரகாசத்தை அளிக்கக் கூடிய திருவடி. இதை நாம் தத்துவார்த்தமாக பார்க்க வேண்டுமெனில், தத்துவத்தில் நாதம் பிந்து என்று சொல்லுவோம். நாதம் பிந்துவிலிருந்துதான் பிரபஞ்சத்தின் சிருஷ்டி ஆரம்பிக்கின்றது. நாதம் என்பது ஒலி (Sound). பிந்து என்பது வெளிச்சம் (Light). நாதம் பிந்து இவை இரண்டும் சேர்ந்துதான் இந்த பிரபஞ்சம் விரிவடைகின்றது. அதனால்தான் அருணகிரிநாதர் நாத பிந்து கலாதி நமோ நம… என்று பாடியிருக்கிறார்.

இப்போது பிந்து சொரூபம் என்று சொல்கிறோம் அல்லவா… எல்லா வெளிச்சத்திற்கும் மூலமான ஒரு வெளிச்சம் இருக்கிறதல்லவா அதுதான் பிந்து. அந்த மூல வெளிச்சமான பிந்து சொரூபம்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நாமம் ஆகும். இந்த நாமம் என்ன என்று கேட்டால் ஒளிமயமான பிந்து சொரூபத்தைக் காட்டக் கூடியது. இதற்கு அடுத்த நாமமானது நாத சொரூபத்தை காண்பிக்கக் கூடியது. அதனால், இங்கு பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாமமும் சொரூபத்தில் கொண்டுபோய் நம்மை சேர்த்துவிடும். அந்த நாமத்தின் பொருளானது சொரூபத்தையே அம்பிகையான ஆத்மாம்பிகையையே சுட்டிக் காட்டும். இன்னொரு விஷயத்தையும் பார்ப்போம். கொஞ்சம் திவ்விய பிரபந்தத்தையும் பார்ப்போம். சோளிங்கர் என்கிற க்ஷேத்ரத்தில் நரசிம்மரை சேவிக்கும்போது, ஆழ்வார் அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே என்று பாடுகின்றார். இந்த அக்காரக் கனி என்பதற்கு விளக்கம் கொடுக்கக் கூடிய ஆச்சார்யார்கள் என்ன சொல்கிறார்கள் எனில், ஒரு கனியானது இனிமையாக இருந்து பார்த்திருப்போம். ஆனால், ஆழ்வார் என்ன சொல்கிறார் எனில், நாம் வெல்லத்தை எடுத்து அந்த வெல்லமே ஒரு விதையாகி அந்த விதையை நாம் பூமியில் புதைத்து அந்த வெல்லப் பாகிலேயே தண்ணீர் ஊற்றி, அந்த வெல்லமே ஒரு மரமாக முளைத்து அந்த வெல்ல மரத்திலேயே வெல்லமாக ஒரு பழம் வருமாம். சாறு மட்டும் இருக்கக்கூடிய வெல்லமாகிய ஒரு பழம் வருமாம். இப்போது அந்தப் பழம் எப்படி இனிப்பாக இருக்குமோ, அதுபோல, பெருமாள் என்று பாடுகின்றார்.

சரி, அதை எதற்கு இங்கு சொல்ல வேண்டுமெனில், ப்ரபாஜாலம் என்று சொல்கிறோம் அல்லவா. அந்த ஒளி கொடுக்கக்கூடிய திருவடித் தாமரை என்று சொல்கிறோம் அல்லவா… இப்போது ஒளியையே எடுத்து ஒளியே ஒரு தாமரையாகி அந்த ஒளிமயமான தாமரையில் ஒளிமயமான திருவடி. அதாவது அங்கு ஒளியைத் தவிர வேறெதுவும் இல்லை. தாமரையும் ஒளி. அந்த திருவடியும் ஒளி. வெளியே சூரிய சந்திர நட்சத்திரங்களுக்கெல்லாம் ஒளி கொடுக்கக்கூடிய இந்த திருவடி எப்படி இருக்கிறதெனில் நம்முடைய இருதய ஸ்தானத்திற்குள் தலை கீழாக இருக்கக் கூடிய தாமரை
மலராக இருக்கிறது. அப்போது தைத்திரிய உபநிஷதத்தில் நாராயண
சூக்தத்தில்…“பத்மகோச ப்ரதீகச ஹ்ருத்யம் சாப் யதோமுகம்
அதோ நிஷ்டாய விதஸ்த்யந்தே நாப்யம் உபரி திஷ்டதி,
ஜ்வாலமாலா குலம் பாதி விஸ்வஸ்ய யாதனம் மஹத்’’
– என்று சொல்லக் கூடிய வேத வாக்கியம்தான் இந்த நாமம்.

முடிவில்லாதவனும், அழியாதவனும், அனைத்தையும் அறிந்தவனும், கடலுக்குள் இருப்பவனும், உலகிற்கு நன்மை செய்பவனுமான நாராயணனை நான் தியானிக்கிறேன். அவன் இதயத்தில் தலைகீழான தாமரை மொட்டு போல் தொங்கும் ஸ்தானத்திற்குள் உறைகிறான் என்று சூட்சுமமாக இந்த நாமத்தையும் பேசுகின்றது. இந்த திருவடித் தாமரையின் உபாஸனை எங்கு வந்து முடிகிறதெனில், இருதய ஸ்தானமான தலை கீழாக இருக்கும் தாமரைப் பூவுக்குள் உறையும் பரமாத்மாவிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. நமது இருதய ஸ்தானத்தில் கொண்டு வந்து முடிகிறது. நம்முடைய தஹர உபாசனையில் கொண்டு வந்து முடிகின்றது. இப்படி நாராயண சூக்தத்தில் சொல்லப்பட்டுள்ள அதோ முகமான பத்மம் எப்போது விகஸிதமாகும்… எப்போது மலரும் எனில் ஒரு உபாஸகன் இருதய தாமரையில் நெல்முனையளவு துவாரத்திலிருந்து வெளிவரும் அந்த ஒளியை தியானிக்கின்றானோ, அப்போது மலரும். இருதய ஸ்தானத்தில் இந்த நெல் முனையளவு துவாரமான சூட்சுமமான துளைபோலுள்ள இடத்திலிருந்து வரும் சூட்சுமமான ஒளி இருக்கிறதல்லவா… அந்த ஒளிதான் நாம் வெளியே பார்க்கக் கூடிய சூரியன், சந்திரன், நட்சத்திரங்களுக்கு எல்லாம் ஒளியை கொடுக்கின்றது. இந்த ஒளி உள்ளே இல்லையென்றால் வெளியே சூரிய சந்திராதிகளுக்கு ஒளி கிடையாது. வெளியே சூரிய சந்திராதிகளுக்கு எது ஒளி கொடுக்கின்றதோ அந்த பரமாத்ம வஸ்துதான் நம்முடைய இருதய ஸ்தானத்திற்குள்ளே இந்த அதோமுக பத்மத்திற்குள்ளே நெல்முனையளவு ஒளியாக இருக்கின்றது. அந்த ஒளிக்குள்தான் பரமாத்மா இருக்கிறான். இதுதான் சிதம்பரம். இதுதான் நாம் தரிசிக்கக் கூடிய சிதம்பரம். சித் அம்பரம். இங்கேதான் பகவான் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார். எனவே, இந்த நாமத்திற்கு நேரடியாகவே சிதம்பரம் கோயிலையும், மூலவரான சிவகாமி அம்மையையும் சொல்லலாம். அதாவது சித் சபையில் இருக்கக்கூடிய நடராஜருக்கு அருகே இருக்கக்கூடிய சிவகாமியை நினைத்து இந்த நாமாவை சொல்லி தியானிக்கலாம்.

The post ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED இந்த வார விசேஷங்கள்