×

இந்த வார விசேஷங்கள்

ஆனி மாதப் பிறப்பு ஷடசீதி புண்ணிய காலம் 15.6.2024 சனி

ஒவ்வொரு வருடமும் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி 1 ம் தேதி ஆக வருடத்தில் நான்கு ஷட சீதி புண்ணிய காலம் வரும். நோய் நொடியின்றி சிரஞ்சீவியாக வாழ அதி சக்தி வாய்ந்தது ஷடசீதி புண்ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும். ஷடசீதி புண்ணிய காலம் பிறக்கும் நாளில் சிவன், சக்தி வழிபாடு, சித்தர்கள் வழிபாடு, ஞானிகளின் அருள் பெற்று வருவது தனிச் சிறப்பினைத் தரும். மாதம் பிறக்கும் இந்த நேரத்தில் செய்யப்படும் நீராடல், தானம், ஜபம், ஹோமம், பூஜை, பாராயணம், பித்ரு தர்ப்பணம் அதிகமான புண்ணியத்தை தருபவை.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர்முத்துப்பந்தல் லீலை 15.6.2024 சனி

கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் பட்டீஸ்வரம் இருக்கிறது. சுவாமிமலை முருகன் கோயிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் திருசத்திமுற்றம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணம் – ஆவூர் சாலையில் சென்று இத்தலத்தையடையலாம். தேவலோகப் பசு காமதேனுவின் மகள் பட்டி இத்தலத்தில் இறைவனை பூஜித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் எனப்பட்டது. பராசக்தி தனித்து தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர இறைவன் பராசக்தியின் தவத்திற்கு உவந்து தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம். விசுவாமித்திர முனிவர் காயத்திரி சித்திக்கப் பெற்று பிரம்மரிஷி என்ற பட்டம் இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது. மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்திலுள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கப் பெற்றான். இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியேயுள்ளன. திருவலஞ்சுழி, பழையாறை மேற்றளி, திருச்சத்தி முற்றம் ஆகிய தலங்களிலுள்ள இறைவனைப் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் வந்த திருஞானசம்பந்தருக்கு வெயிலின் கொடுமை தாக்காமல் இருக்க இத்தலத்து இறைவன் சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அளித்து அதன் குடை நிழலில் சம்பந்தர் தன்னைத் தரிசிக்க வரும்போது நந்தி மறைக்காமல் இருக்க நந்தியெம்பெருமானை விலகி இருக்கச் சொல்லி அருளிய சிறப்புடையது. ஆனி மாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பூதகணங்கள் மூலம் முத்துப்பந்தல் அளிக்கும் விழா நடைபெறும். இத்தலத்தின் சிறப்புவிழா இதுவேயாகும். அந்த விழா இன்று.

நிர்ஜல ஏகாதசி 18.6.2024 செவ்வாய்

ஆனி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசியே பாண்டவ நிர்ஜல ஏகாதசி என்றும் நிர்ஜல ஏகாதசி என்றும் சொல்லப்படுகிறது. நிர்ஜல ஏகாதசி பற்றி ‘பிரம்ம வைவர்த்த புராணம்’ விவரித்துள்ளது. ஒருமுறை பீமன் வியாசரிடம் எமது தாய் குந்தி தேவி, எனது உடன்பிறந்தவர்கள் யுதிஷ்டிரர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் பாஞ்சாலி என அனைவரும் பிரதி ஏகாதசி தோறும் விரதம் இருக்கின்றனர். எனக்கும் ஆசை. ஆனால் முடியவில்லை. என்னால் ஒருவேளை கூட உணவு உண்ணாமல் இருக்க முடியாது. வாயுதேவரின் புத்திரனான ‘சமானப்ராணா’ (எந்தப் பொருளையும் செரிமானம் செய்யக்கூடிய வாயு) எனது வயிற்றில் உள்ளது. அதனால் என்னால் பசி தாங்க இயலாது. எனக்கு ஏகாதசி விரதம் இருக்கும் வழியைக் கூறுங்கள் என கேட்க, வியாசர் சொன்னார். உன்னைப்போன்று ஒவ்வொரு மாதமும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், சூரியன் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பயணிக்கக்கூடிய ஜேஷ்ட மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசி விரதத்தை, உண்ணாமல் மட்டும் அல்ல, ஒரு துளி நீர் கூட அருந்தாமல் இருந்து கடைப்பிடிக்க வேண்டும்’’ என்றார். அப்படியே பீமன் கடைப்பிடித்தான். நிர்ஜல ஏகாதசி நாளில் விரதம் மேற்கொண்டால், புண்ணிய நதிகளில் நீராடிய பலன்கள் கிடைக்கும். தனம், தானியம், ஐஸ்வரியம் பெருகும். மகாவிஷ்ணுவின் பேரருள் கிடைக்கும்.

நாதமுனிகள் திருநட்சத்திரம் 20.6.2024 வியாழன்

வைணவ ஆசாரிய பரம்பரையில் முதல் ஆச்சாரியார் ஸ்ரீ நாத முனிகள். அவர் 1200 வருடங்களுக்கு முன்னால் நம் தமிழ்நாட்டில் காட்டுமன்னார்குடி என்னும் ஊரில் ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். வைணவத்துக்கும், ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களுக்கும், தமிழ் பண்ணிசைக்கும் நாடகக் கலைக்கும், அவர் செய்த சேவை அளப்பரியது. இசைக் கலையையும் நாடகக் கலையையும் வளர்ப்பதற்காக அவர் செய்த இன்னொரு முக்கியமான விஷயம் அரையர் சேவை. அரையர் என்றால் தலைவன் என்று பொருள். திருமாலுக்கு அரையன் என்ற பெயர் உண்டு. ‘‘அன்றாயர் குல மக்களுக்கு அரையன் தன்னை’’ என்பது திருமங்கையாழ்வார் பாசுரம். அரையர், அறையர், விண்ணப்பம் செய்வார், பாடுவான், இசைக்காரர், தம்பிரான்மார் என்றெல்லாம் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். முக்கியமான உற்சவங்களில் ஆழ்வார் பாசுரங்களை இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழால் ஓதப்பட வேண்டும் என்பதற்காகவே, இம்மூன்று கலைகளையும் அறிந்த, அரையர் மரபை உண்டாக்கினார் நாதமுனிகள் தன் காலத்தில் உருவாக்கினார். திருக்கோயில் உற்சவர் முன் நடைபெறும் அரையர் சேவையின் போது அரையர்கள் பஞ்சகச்சம் அணிந்து, அரையர் குல்லாய் எனப்படும் கூம்பு வடிவத் தொப்பியும் இறைவனுக்குச் சாத்தப்பட்ட மாலையும் தனித்துவமாக அணிந்திருப்பர். காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும். குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். அவர்களுக்கு பரம்பரையாக வந்த கைத்தாளமும் இத்தகு அரிய கலை வைணவக் கோயில்களில் மட்டும் காணப்படும். நாதமுனிகளின் அவதார உற்சவம் ஸ்ரீ ரங்கம், திருவல்லிக்கேணி, திருப்பதி முதலிய எல்லாக் கோயில்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவதோடு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பஜனை மடங்களிலும், வைணவர்கள் இல்லங்களிலும் அனுசரிக்கப்படும்.

பௌர்ணமி 21.6.2024 வெள்ளி

இன்று பௌர்ணமி நாள். கிரிவலம் வருவதற்கு ஏற்ற நாள். நிலவு புறப்படும் நேரத்தில், உங்களுக்கு தெரிந்த மந்திரங்களையும் ஸ்லோகங்களையும் சொல்லிக்கொண்டு மலைக் கோயில்களை வலம் வருவது மகத்தான பலன்களைத் தரும். இன்று சத்யநாராயண பூஜை செய்வதும் மிகச் சிறந்த பலன்களைத் தரும். காலை 7.45 முதல் மறுநாள்
7.19 வரை இன்று இரவு கிரிவலம் வருவது நன்று.

ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்21.6.2024 வெள்ளி

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும். ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து பட்டர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு வருவர் காவிரி ஆற்றில் 1 தங்கக் குடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்படும் அங்கிருந்து காலை
7 மணிக்கு தங்கக் குடத்தில் உள்ள புனித நீர்யானைமீது வைத்தும் 28 வெள்ளிக் குடங்களைத் தோளில் சுமந்தும் அம்மா மண்டபம் சாலை, ராஜகோபுரம் வழியாக கோயிலுக்கு எடுத்து வரப்படும்.
ஜேஷ்டாபிஷேகத்தின் மறுநாள் காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ளே மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் சமர்ப்பிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்படும். பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் முப்பழ உற்சவம் 21.6.2024 வெள்ளி

108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலம் திருமாலிருஞ்சோலை. மதுரைக்கு அருகே உள்ளது. தென்திருப்பதி என்று போற்றப்படும் இக்கோயில் அழகர்கோவில் என்று வழங்கப்படுகிறது. இங்கு வற்றாத புனித தீர்த்தம் நூபுரகங்கை (சிலம்பாறு) எனப்படும். இங்கு ஆண்டு முழுவதும், மாதந்தோறும் ஒவ்வொரு விதமான திருவிழா நடைபெறுவது வழக்கம். அதில் முக்கிய அம்சமாக கருதப்படும் திரு விழாக்களில் ஆண்டு தோறும் ஆனி மாதம் நடைபெறும் முப்பழ உற்சவ விழா.
முப்பழ உற்சவ விழாவில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, அலங்காரம் செய்யப்படும். தொடர்ந்து மா, பலா, வாழை ஆகிய முப்பழங்களும் ஒருசேர தேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் பெருமாளுக்கு படைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடந்து நெய்வேத்தியம் செய்யப்படும். இதேபோல இந்த கோயிலின் உபகோயிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலிலும் முப்பழ உற்சவ விழா நடக்கும்.

மன்னார்குடி தெப்ப உற்சவம் 21.6.2024 வெள்ளி

வைணவ கோயில்களில் சிறப்பு வாய்ந்ததாக ராஜகோபால சுவாமி கோயில் திகழ்கிறது. நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதிராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் செண்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும்,  ராஜகோபாலன் கோயில் கொண்டிருப் பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ வித்யா ராஜகோபாலசுவாமி என்று சுவாமிக்கு திருநாமம். கிருஷ்ணரின் வடிவமான இராஜகோபாலசுவாமியே பிரதான தெய்வம். இக்கோயில் 9.3 ஹெக்டேர் (23 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள திருக்குளம் அற்புதமானது. ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு உற்சவம் நடப்பது இக்கோயிலின் சிறப்பாகும். இங்கு, ஆனி மாத உற்சவம் ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவமாக கொண்டாடப்படுகிறது. இந்த தெப்பத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ருக்மணி, சத்தியபாமா சமேதராக கிருஷ்ண அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருத்தேர் 21.6.2024 வெள்ளி

திருநெல்வேலியில் மிகவும் பிரசித்திபெற்ற பழைமையான சைவத் திருத்தலமாக நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் விளங்குகிறது. இந்தத் திருத்தலம் சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையானது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவத் தொண்டாற்றிய திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சைவத் தலம். இந்தக் கோயிலில் உள்ள மூலவர், `நெல்லையப்பர்’, `சுவாமி வேணு நாதர்’, `நெல்வேலி நாதர்’ என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இந்தக் கோயிலில் ஆனித் திருவிழாவும், ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவும் முக்கியமான வைபவங்களாக நடை பெற்று வருகின்றன. ஆனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடப்பது திருத் தேரோட்டம். விழாவின் 9-ம் நாளில் நடக்கும் இந்த தேரோட்டம் மிகச் சிறப்பானது. இக்கோயில் நெல்லையப்பர், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்கள் உள்ளன. இதில் நெல்லையப்பர் தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்னும் பெருமையைக் கொண்டதாகும். சுமார் 70 அடி உயரமும், 450 டன் எடையுடன் மிகவும் கம்பீரமாக இந்தத் தேர் காணப்படும். மிகச் சிறப்பான தேர் விழா இன்று. ஸ்ரீ

15.6.2024 சனி திருவாவடுதுறையில் ருத்ராபிஷேகம்.
16.6.2024 ஞாயிறு சூரியனார் கோயில் மகா அபிஷேகம்.
16.6.2024 ஞாயிறு பாபஹர தசமி.
17.6.2024 திங்கள் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் உற்சவ ஆரம்பம்.
18.6.2024 செவ்வாய் ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வார் புறப்பாடு.
19.6.2024 புதன் ராம லட்சுமண துவாதசி.
20.6.2024 வியாழன் மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெண்ணெய்த் தாழி சேவை.

விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Saturn ,Ani ,
× RELATED கூனிக் குறுகி வாழும் வறுமையையும் மாற்றி அமைக்கும் ஆனி மாதம்!!