×

கூனிக் குறுகி வாழும் வறுமையையும் மாற்றி அமைக்கும் ஆனி மாதம்!!

நமக்குப் பிறவியை அளித்துள்ள, நம் பித்ருக்களான முன்னோர்களுக்கும் நமக்கும் இடையே பாலமாகத் திகழ்பவரும், நாம் செய்து வரும் அமாவாசை, ஆண்டுத் திதி, சூரிய – சந்திர கிரகணப் புண்ணிய காலங்களில் இயற்றும் தர்ப்பணம், பிண்டதானம் ஆகியவற்றை அவர்களிடம் தவறாமல் சேர்ப்பிப்பவருமான சூரியன், தனது உச்ச ராசியான மேஷ ராசியை விட்டு, புதனின் ஆட்சி ராசியான மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலமே “ஆனி” மாதம் எனப் பூஜிக்கப்படுகிறது!அறிவு, ஆற்றல், விவேகம், கல்வி, பண்பு, மருத்துவம், கணிதம், ஜோதிடம், ஒழுக்கம் ஆகிய மகத்தான பேறுகளை அளித்தருளும், புதனின் ராசியான மிதுனத்தில், ஆத்ம பித்ருகாரகரான சூரியன் சஞ்சரிப்பது மக்களுக்கு பல நன்மைகளை அளிக்கவல்லது என்பதை மிகப் புராதனமான ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன. புதன், சூரியனுக்கு நட்புக் கிரகமாகும்.ஆனி மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்திருந்து, நீராடி, சூரிய பகவானையும், புதனையும் பூஜித்து வந்தால், எத்தகைய வறுமையானாலும், நீங்கிவிடும் என ஜோதிடப் பரிகார நூல்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. நமக்கு வேண்டியது, நம்பிக்கையும், பக்தியும் மட்டுமே! இம்மாதத்தில் நிகழும் மிக முக்கிய கிரக நிகழ்ச்சி, கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், வக்கிரகதியில் செல்வதேயாகும். இங்கு கூறியுள்ள பலன்கள் அனைத்தும் சனி பகவானின் வக்கிர கதியையும் கணக்கில் கொண்டு, துல்லியமாகக் கணித்துக் கூறப்பட்டுள்ளவைகளேயாகும். அதனால், எமது அன்பிற்குரிய தினகரன் வாசக அன்பர்கள் படித்து, எளிய பரிகாரங்களைச் செவ்வனே செய்து, பயனடைவார்களேயானால், மிகுந்த மனநிறைவையடைவோம்.இனி, இம்மாதத்தில் நிகழவிருக்கும் புண்ணிய தினங்களைக் காண்போமா?

ஆனி 6 (20-6-2024): சேது நாட்டு இளவரசன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது அடர்ந்த காட்டினுள் அழகிய தடாகத்தையும் அதனுள் ஒரு மீன் நீந்திக் கொண்டிருப்பதையும் கண்ட அவன், தனது கூரிய அம்பினால் அதைக் கொன்றுவிடுகிறான். ஒரு சாபத்தினால் மீனாகப் பிறந்திருந்த தேவக் கன்னி, அவ்விளவரசன் மீது கடுங்கோபமுற்று, “உனக்குப் பிறக்கும் சந்ததிக்கு மீன் வாடை வீசட்டும்…!” என சபித்துவிடுகிறாள். இளவரசனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. துர்நாற்றத்துடன் வீசும் அப் பெண் குழந்தையைக் கொல்ல மனமில்லாமல், மீன் பிடித்து உண்டு வாழும் படகோட்டியிடம் ஒப்படைத்துவிடுகிறான் இளவரசன். “மச்சக்கன்னி” எனப் பெயரிடப்பட்ட அவள், தானொரு இளவரசி என்பதை அறியாமலேயே அப்படகோட்டியிடம் வளர்ந்துவந்தாள். அப்பெண் குழந்தை, தன் தந்தைக்கு உதவியாக, யமுனை ஆற்றைக் கடந்து செல்வோருக்கு படகை செலுத்திக்கொண்டிருந்தாள்.

வேத – வானியல், ஜோதிட சாஸ்திரங்களையும், நீதி நூல்களையும் நன்கு கற்றுணர்ந்த மகரிஷி, முக்காலமும் உணர்ந்த, ஞான ஸாகரமாகிய, முனிவர் பராசரர் ஆற்றைக் கடக்க எண்ணிப் படகில் ஏறினார். அன்றைய தினம், பிறவியில் கிடைத்தற்கரிய, நவக்கிரகங்களில் முக்கியமான மூன்று கிரகங்களாகிய குரு, செவ்வாய், புதன் ஒரே நேர்கோட்டுச் சேர்க்கை நிகழவிருப்பதைத் தன் ஞான-திருஷ்டியால் உணர்ந்த அம்மகான், இத்தருணத்தில் ஒரு குழந்தை ஜனித்தால், அது ஞான ஸ்வரூபியாக – மனித குலத்திற்கு ஒரு வழிகாட்டியாக, இருட்டறைக்கு ஓர் ஒளிவிளக்காகவும் விளங்குவான் என்பதையும் அறிந்து, மச்சக் கன்னியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து, அவளின் பிறப்பின் ரகசியத்தையும், அவளுக்கு நேர்ந்த சாபத்தையும்,

அவளொரு ராஜகுமாரி என்பதையும், அவளின் சாபவிமோசனத்திற்கான நேரமும் வந்துவிட்டதாகவும், சுபக் கிரகங்களின் பார்வையால் பிறக்கும் குழந்தை, கதிரவன் மதியுடனும், கருணைக் கடலாகவும், சிறந்த குணவதியாகவும் பரிமளிப்பான் என்பதையும் தெரிவித்தார். மச்சக்கன்னியும் இசைவு தெரிவித்தமையால், “ரிஷி கர்ப்பம் இராத் தங்காது…!” என்ற மூதுரையை மெய்ப்பிப்பது போலவும், அழகிய கரிய நிறத்தையொத்த ஆண் மகனை ஈன்றெடுத்தாள். கருமை நிறத்தையுடையவனாக இருந்தபடியால், “கிருஷ்ணா” எனவும், கடலில், தீவில் அவதரித்தமையால் துவைபானர் கிருஷ்ண துவைபானர் எனத் திருநாமமிட்டு அழைத்தனர். வேத இதிகாச புராணங்களை எளியோரும் புரிந்துகொள்ளும், எளிய நடையில் பகுத்துக் கூறியபடியால் வேத வியாஸர் பகவான் என்றழைக்கப்பட்டு, பதினெட்டு புராணங்களையும், ருக், யஜுர், சாம,

அதர்வண வேதங்களையும் (ஆதிகாலத்தில் ஒரே ஒரு வேதம்தான் இருந்தது), பிரம்ம சூத்திரம், இதிகாச ரத்னமாகவும், ஒரு லட்சம் ஸ்லோகங்களைத் தன்னுள் அடக்கியுள்ளதுமாகிய மகாபாரதம், உபநிடங்களைஅருளியவரும், வேத வியாஸர் அவதரித்த புண்ணிய தினம். ஹரித்துவாரிலிருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் வேதவியாஸருக்கு கோயில் உள்ளது. சென்னை, வியாஸர்பாடியில் ரவீஸ்வரர் கோயிலிலும் ஸ்ரீ வியாஸ பகவான் கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றார். இந்தப் புண்ணிய தினத்தில் ஸ்ரீ வியாஸ பகவானின் படத்தை எழுந்தருளிச் செய்து, நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்கினால், சந்ததியினர் அனைவரும் ஸத் புத்திரர்களாகவும், அறிவிற் சிறந்த சான்றோர்களாகவும் மிளிர்வர் எனச் சொல்லவும் வேண்டுமோ?

ஆனி 7 (21-6-2024): வட சாவித்திரி விரதம் – மணமான பெண்கள், சகல சௌபாக்கியவதிகளாகவும், தீர்க்க சுமங்கலிகளாகவும், தொட்டதெல்லாம் துலங்க வரும் தாய்க்குலமாகவும் விளங்குவதற்காகவும் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று சத்தியவான் சாவித்திரி கதையைப் படித்தாலும், கேட்டாலும், நினைத்தாலும் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று, தீர்க்காயுளுடன், உற்றார் உறவினருடன் சுகமாக வாழ்வர். மேலும், இன்று ஜேஷ்டாபிஷேகம். அனைத்து, சிவா – விஷ்ணு ஆலயங்களி்லும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். அபிஷேகத்திற்கு தேன், இளநீர், பால், பழங்கள், கரும்புச் சாறு போன்றவற்றைக் கொடுத்தால் சகல கிரக தோஷங்களும் விலகி காரிய சி்த்தியுண்டாவது திண்ணம்.

ஆனி 14 (28-6-2024), ஆனி 15 (29-6-2024): தேய்பிறை அஷ்டமி – இவ்விரு நன்னாட்களிலும், காலைக்கடன்களை முடித்தபிறகு, திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை தரிசித்துவிட்டு மாலையில் (அதாவது, சூரிய அஸ்தமனத்தின்போது) ஸ்ரீ காலபைரவரையும் வணங்கி, தரிசித்து வந்தால், கடன் சுமை நீங்கும், தெரிந்தோ அல்லது தெரியாமலோ சிவனடியார்களுக்கு ஏதேனும் அபவாதம் செய்திருந்தால் அவைகள் தீயினிற் தூசாகும். சிவனடியார்களின் அருளுக்குப் பாத்திரர்களாவோம்.

ஆனி 15 (29-6-2024): அருணகிரியார் திருநட்சத்திரம். ஏயர்கோன் கலிக்காமர் அவதாரப் புண்ணிய தினம்.

ஆனி 17 (1-7-2024) : ரோம ரிஷி அவதார தினம்.

ஆனி 18 (2-7-2024) : ஸ்ரீ கூர்மாவதாரம் – அரிசிமாக் கோலமிட்டு, ஸ்ரீ கூர்மாவதார திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, துளசி தளத்தினால் அர்ச்சித்து, வணங்க சகல சௌபாக்கியங்களும், நீண்ட ஆயுள் – உடல் ஆரோக்கியத்தையும் தந்தருள்வார்.

ஆனி 22 (6-7-2024 முதல், 15-7-2024 வரை) : ஸ்ரீ வராஹி நவராத்திரி – இந்நன்னாட்களில் அம்பாளை பூஜித்து, தேவி பாகவதம், மஹாலட்சுமி அஷ்டோத்திரம், அபிராமி, அந்தாதி ஸ்லோகங்களைப் படித்து, சுமங்கலிகளுக்கு, வெற்றிலை, பாக்கு கொடுத்து உபசரித்தால், மூவகைச் செல்வமாகிய செல்வம், வீரம், கல்விச் செல்வங்களைப் பெற்று, மனமகிழ்வுடனும், நிறைவுடனும் வாழ்வர்.

ஆனி 23 (7-7-2024): ஸ்ரீ அமிர்த லட்சுமிவிரதம். கலசம் வைத்து பூஜித்து, இன்றைய தினம் குறைந்தபட்சம், ஒரு சுமங்கலிப் பெண்ணிற்கு விருந்தளித்து, வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ்சள், வசதியிருந்தால், புடவை, ஜாக்கெட் கொடுத்து உபசரித்தால், மகாலட்சுமியின் கடாட்சத்தால், நன்மக்கட்பேறு, பொன் பொருள், கல்வி, அறிவு, அழகு, வாழ்நாள் இளமை, பொறுமை, துணிவு, நோயின்மை ஆகிய பேறுகளைக் குறைவறப் பெற்று நீடூழி வாழ்வாங்கு வாழ்வர், வையத்துள்!

ஆனி 25 (9-7-2024 ) : “சிறை பெறா நீர்போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே…!” எனவும், “இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க…!” பக்திச் சுவையுடன்கூடிய, மனத்தை உருக்கும் வார்த்தைசொற்றொடர்களுடனும் பாடிய, ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்த புண்ணிய தினம்.

ஆனி 26 (10-7-2024) : சமீ கௌரி விரதம் – தம்பதியினரும், சந்ததியினரும் எவ்வித ேநாய் – நொடியற்றவர்களாகவும், பரிபூரண – தீர்க்க ஆயுள் உடையவர்களாகவும் விளங்குவர், இவ்விரதத்தைக் கடைப்பிடித்தால்!

ஆனி 27 (11-7-2024) : அமர்நீதி நாயனார் திருநட்சத்திரம்.

ஆனி 28 (12-7-2024): ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தைக் கண்டாலே பலகோடி நன்மைகள் நம்மை வந்தடையும்.

ஆனி 30 (14-7-2024): இன்று ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜெயந்தி. இன்றைய தினம் ஸ்ரீ சுதர்ஷணாஷ்டகம் வாசித்தாலும், கேட்டாலும், மனத்தளவில் நினைத்தாலுங்கூட மகத்தான புண்ணிய பலன்களைத் தரக்கூடியது. இன்றைய தினம் வீட்டில் சுதர்ஸன ேஹாமம் செய்வது, சகலவித தோஷங்களையும் அகற்றி, வீட்டில் சந்தோஷம் நிலவும். மேலும், இன்று பரசுராமாஷ்டமி.

ஆனி 31 (15-7-2024) : ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அவதரித்த ஸ்வாதி நட்சத்திரம் – இன்றைய தினம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, துளசி தளத்தினால் அர்ச்சித்து, பானகம் நைவேத்தியம் செய்து வணங்க, சகலவித நன்மைகளும், நோய் நொடியற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், எதிரிகளால், நமக்கு எதிராகச் செய்யப்பட்ட பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் எவ்வித பாதிப்புமின்றி நம்மைக் காத்தருள்வார், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்! தொழிலில் சுணக்கத்தைப் போக்கி, அபவிருத்தியடையச் செய்வார்! மேலும் இன்று பெரியாழ்வார் அவதரித்த புண்ணிய நாளாகும்.

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி
A.M.ராஜகோபாலன்

The post கூனிக் குறுகி வாழும் வறுமையையும் மாற்றி அமைக்கும் ஆனி மாதம்!! appeared first on Dinakaran.

Tags : Ani ,Koonik ,
× RELATED ஆனி மாத பூஜை சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு