×

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நாளை துவக்கம்

*5 டன் பழங்களால் அலங்காரம் தயாராகிறது

ஊட்டி : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாளை 64வது பழக்கண்காட்சி துவங்குகிறது. கண்காட்சியில் 5 டன் பழங்களை கொண்டு மனித குரங்கு (கிங்காங்), நத்தை, வாத்து உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.நீலகிரி சர்வதேச சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக உள்ளது. இங்கு நிலவும் மிதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு செல்கின்றனர். மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டு நாடாளுமன்ற ேதர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சிக்கு மட்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மலர் மற்றும் ேராஜா கண்காட்சிகள் நடைபெற்று முடிந்தன.

கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64வது பழக்கண்காட்சி நாளை 24ம் தேதி துவங்கி 25, 26ம் தேதி என 3 நாட்கள் நடக்கிறது. பழ கண்காட்சிக்காக கடந்த ஜனவரி மாதத்தில் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ரகங்களில் 3.15 லட்சம் பல்வேறு வண்ண ரக மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. இவை தற்போது பூத்து குலுங்குகின்றன. பழக்கண்காட்சி நாளை துவங்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க வசதியாக பூங்காவின் நுழைவாயில் பகுதியில் பல்வேறு பழங்களால் ஆன அலங்காரங்கள் அமைக்கும் பணிகள் நடந்தன.

சுமார் 5 டன் பழங்களை கொண்டு மனித குரங்கு (கிங்காங்), வாத்து, நத்தை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர குன்னூர் சிம்ஸ் பார்க் துவங்கி 150 ஆண்டுகள் நிறைவடைவதால் அது குறித்த அலங்காரம், 150 வகை பழங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதற்காக அரங்குகள், விழா மேடை அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
பழக்கண்காட்சியையொட்டி கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா 1874ம் ஆண்டு தொடங்கப்பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த பூங்கா கடல் மட்டத்திலிருந்து 1790 மீட்டர் உயரத்தில் உள்ளது. 12 ஹெக்டர் பரப்பளவில் சரிவு மற்றும் மேடான நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சிம்ஸ் பூங்கா தொடங்கி இந்த ஆண்டுடன் 150 ஆண்டுகள் நிறைவடைவதால் 150 வகை பழங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக நீலகிரியில் உள்ள பிளம்ஸ், மங்குஸ்தான், பீச், ரம்பூட்டான், துரியன், வெல்வெட் ஆப்பிள் உள்ளிட்ட பழங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும். மொத்தம் 5 டன் பழங்களால் அலங்காரங்கள் அமைக்கப்படுகிறது’’ என்றனர்.

The post குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Coonoor Sims Park ,Nilgiri International… ,Coonoor Sims Park Garden Exhibition ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2வது...