ஊட்டி : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2வது சீசனுக்காக 125 வகைகளில் 2 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் இரு சீசன்கள் கடைபிடிக்கப்படுகிறது. கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் முதல் சீசனாகவும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரு மாதங்கள் இரண்டாம் சீசனாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இவ்விரு சீசனின் போதும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், இவ்விரு சீசனின் போதும், நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகிய பூங்காக்களில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அவைகளில் மலர்கள் பூத்து காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் முடிந்த நிலையில், பூங்காக்களில் இருந்த அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டன. தற்போது 2ம் சீசனுக்காக அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகியவைகள் இரண்டாம் சீசனுக்காக தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பூங்காக்களில் தற்போது மலர் செடிகள் உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று 2ம் சீசனுக்கான மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் துவங்கியது.
இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி கலந்து கொண்டு மலர் செடிகள் நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, நேற்று பூங்காவில் சால்வியா, மேரி கோல்டு, காஸ்மாஸ், டேலியா, டயான்தஸ், ஆஸ்டர், லூபின் உட்பட பல்வேறு மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும், அமெரிக்கா, ஜப்பான் நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 125 வகை மலர் நாற்றுகள் நடவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி கூறியதாவது: குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா துவங்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் வகையில், கோடை சீசனின்போது, 150வது ஆண்டு பழக்கண்காட்சி நடத்தப்பட்டது. 2ம் சீசனை முன்னிட்டு பல்வேறு வகையான 2 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஹாலந்து பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான மலர் விதைகள் நாற்றுகளாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவைகள் நடும் பணிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. துவக்கமாக பால்சம், பெட்டூனியா, சால்வியா, கேலண்டுல்லா, இன்காமேரிகோல்டு, டெல்பீனியம் போன்ற அரிய வகை மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தற்போது குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாற்று நடவு பணிகள் துவங்கிய நிலையில், ஓரிரு நாட்களில் மற்ற பூங்காக்களிலும் மலர் நாற்று நடவு பணிகளை துவங்க தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.
The post குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2வது சீசனுக்காக 2 லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி துவக்கம் appeared first on Dinakaran.