×

மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் அந்தமான் சென்ற விமானம் சென்னை திரும்பியது: பயணிகள் தவிப்பு

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மோசமான வானிலை காரணமாக அந்தமானில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. இதனால் பயணிகள் சென்னையில் தவித்து வருகின்றனர். சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 142 பயணிகள் இருந்தனர். விமானம் அந்தமான் வான்வெளியை நெருங்கியபோது, அந்தமானில் கடும் சூறைக்காற்றுடன், மோசமான வானிலை நிலவிக் கொண்டிருந்தது.

இதையடுத்து அந்த விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் ஆகியும் வானிலை சீரடையாததால், விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் சென்னை வந்து தரை இறங்கியது. இதனையடுத்து அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் விமானம் நாளை (இன்று) சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் பயணிகள் மற்ற ஏர்லைன்ஸ் விமானங்கள் அந்தமானில் தரை இறங்கிய நிலையில் இந்த விமானம் மட்டும் தரையிறங்குவதற்கு என்ன பிரச்னை என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமான நிறுவன அதிகாரிகள், நாங்கள் பயணிகள் பாதுகாப்பு காரணமாக, மோசமான வானிலை நிலவியதால், அங்கு தரையிறங்காமல் வந்துவிட்டோம். நாளையோ இல்லையேல் வேறு ஏதாவது ஒரு நாளோ நீங்கள் பயணம் செய்யலாம். அதற்குத் தகுந்தாற்போல் உங்கள் பயண டிக்கெட்டுகளை மாற்றிக் கொடுக்கிறோம். இல்லையென்றால் உங்கள் பயண கட்டணம் விதிமுறைகளின்படி திருப்பி அளிக்கப்படும் என்றும் கூறினர்.

The post மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் அந்தமான் சென்ற விமானம் சென்னை திரும்பியது: பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Andaman ,Chennai ,Akasha Airlines ,Andaman… ,
× RELATED அந்தமான் சென்ற விமானம் மோசமான வானிலை...