×

உயிருக்கே ஆபத்தாகும் திரவ நைட்ரஜன் உணவுகள்!

நன்றி குங்குமம் தோழி

கடந்த ஒரு வாரம் அனைத்து செய்தித்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டும், பகிரப்பட்டும் வந்த செய்தி தான் நைட்ரஜன் திரவம் கொண்டு
பரிமாறப்படும் உணவுகள். பிஸ்கெட்கள், சாக்லெட் என பல உணவுகளில் திரவ நைட்ரஜன்கள் பயன்படுத்துகிறார்கள். இது சாப்பிடும் போது வாய் மற்றும் மூக்கில் இருந்து வெளிேயறும் புகை ஒருவித ஃபன்னாக இருந்தாலும், இது உடலில் பலவித பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் தற்போது கண்டறிந்துள்ளனர்.

திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட பிஸ்கெட் ஒன்றை சாப்பிட்ட கர்நாடகாவைச் சேர்ந்த சிறுவனுக்கு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியும், அவன் அதை சாப்பிடும் போது எடுக்கப்பட்ட வீடியோவும் இன்று ஹாட் செய்தியாக நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்பட்ட விளைவுகளை ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளனர். அதன் மூலம் 2017ல் இதே போன்ற ஒரு சம்பவம் ஹரியானா மாநிலத்தில் ஏற்பட்டு, அந்த இளைஞருக்கு குடலில் ஓட்டை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தற்போது கர்நாடகாவில் சிறுவனுக்கு நிகழ்ந்த சம்பவம் நாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரவ நைட்ரஜன் என்பது என்ன? அதனை எதற்காக பயன்படுத்துகிறார்கள்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? இது போன்ற பல கேள்விகள் தற்போது மக்கள் மனதில் எழுந்துள்ளது.

‘‘பார்ப்பவர்களை கவர்வதற்காக உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் இந்த திரவ நைட்ரஜனுக்கு எந்த ஒரு மனமோ, சுவையோ கிடையாது. இருப்பினும் அதை பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளியேறும் புகையானது, கேளிக்கையாகவும், பார்ப்பதற்கு சுவாரஸ்யமான ஒன்றாகவும் இருப்பதால் அதனுடைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. நகரங்களில் ஒரு சில இடங்களில் மட்டும்தான் அதாவது, நட்சத்திர மற்றும் உயர் ரக உணவு விடுதிகளிலும், கேளிக்கை விடுதிகளிலும்தான் இந்த திரவ நைட்ரஜனில் தொய்க்கப்பட்ட பிஸ்கெட், ஐஸ்க்ரீம்கள் மற்றும் குளிர்பானங்கள் ஒரு விளையாட்டாகவும், பேன்டஸிக்காகவும் உபயோகப்படுத்துகிறார்கள். அந்த திரவ நைட்ரஜன் நம்ம உடல் வெப்ப நிலைக்கு மாறும் போது புகையாக வெளிவரும். அதை வாயில் ஊற்றும் போது நமது வாய் மற்றும் மூக்கின் வழியாக புகையாக வெளியேறுவதை விளையாட்டாக செய்து வருகின்றனர். இந்த விளையாட்டுதான் தற்போது வினையாக மாறியுள்ளது’’ என்கிறார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்.

‘‘இந்த சம்பவத்திற்குப் பிறகு, நகரங்களில் பல்வேறு பகுதிகளில் இந்த திரவ நைட்ரஜனின் பயன்பாட்டை சரிபார்த்து, தேவையில்லாத இடங்களில் இந்த உபயோகத்தை தடை செய்து வருகின்றனர் அதிகாரிகள். மேலும், இந்த திரவ நைட்ரஜன் நேரடியாக பயன்படுத்திய உணவுப் பொருட்களின் பயன்பாட்டிற்கும் தடை விதித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதையும் மீறி இதனை பயன்படுத்தும் உணவகங்களுக்கோ அல்லது கேளிக்கை விடுதிகளுக்கோ அபராதமும் அதன் உரிமையும் ரத்து செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்’’ என்றவர், இதன் தன்மையை பற்றியும், இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றியும் விரிவாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

*திரவ நைட்ரஜன் என்றால் என்ன..? எங்கெல்லாம் இந்த திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது..?

Freezing Agent என்று சொல்லப்படும் இந்த திரவ நைட்ரஜன் உணவுப் பொருட்களை பதப்படுத்த பயன்படும் ஒரு வகையான ரசாயனம். அதாவது, ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு கொண்டு செல்லும் காய்கறிகள், மாமிசங்கள், பால் வகைகள் கெட்டுப் போகாமல் இருக்கவும், பெரிய பெரிய உணவு விடுதிகளிலும் உணவுப் பொருட்களை பராமரிக்கவும் இதனை பயன்படுத்துவது வழக்கம். இதற்கென எந்த ஒரு மனமோ, நிறமோ அல்லது சுவையோ கிடையாது.

திரவ நைட்ரஜன் மிகவும் முக்கியமாக மருத்துவத் துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேஜர் அறுவை சிகிச்சைக்கு குறிப்பாக கேன்சர் கட்டிகளை நீக்க இந்த திரவ நைட்ரஜன் மருத்துவ துறையில் பயன்படுத்தப்படுகிறது. கேன்சர் கட்டிகளை அறுவை சிகிச்சை செய்யும் போது, அதன் மேல் இதனை செலுத்தி, அந்த இடம் முழுவதும் மறுத்த பிறகு, கட்டிகளை முழுமையாக அகற்ற இதனை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சில உடல் உறுப்புகளை பதப்படுத்தவும் இந்த திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உடல் உறுப்புகளின் திசுக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பல ஆண்டுகள் பதப்படுத்த முடியும். மேலும் இதனை பயன்படுத்திதான் உயிரியல் மாதிரிகளையும் பராமரிக்கின்றனர்.

*உயிருள்ள மனித உடலில் இந்த திரவ நைட்ரஜன் படும்போது அதன் செயல்பாடுகள்?

0 டிகிரி அல்லது மைனஸ் 1 டிகிரி கொண்ட ஐஸ்கட்டிகளையே தொடர்ந்து ஒரு நிமிடம் நம்மால் கைகளிலோ அல்லது வாயினிலோ வைக்க முடியாது. அப்படி இருக்கும் நிலையில் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக் கொண்ட இந்த திரவ நைட்ரஜன் நம் உடலில் பட்டால் அந்த இடம் முழுவதும் மறுத்து அங்கு இருக்கும் திசுக்கள் அனைத்தும் உறைந்து சிறிது நேரத்திலே செயலிழக்கும். மேலும் 50-60% அமிலத்தன்மை கொண்ட திரவ நைட்ரஜனால் அந்த இடம் முழுவதும் அழுகும் நிலைக்கு தள்ளப்படும்.

மேலும் மைனஸ் 196 டிகிரி வெப்பநிலையில் இருக்கும் இந்த திரவ நைட்ரஜன், நமது உடல் வெப்பநிலைக்கு மாறும்போது ஏற்படும் ஒரு ரசாயன மாற்றத்தினால் தான் அதிலிருந்து புகை வெளியேறுகிறது. அதிலிருந்து புகை முழுவதும் வெளியேறிய பிறகு அதனை பயன்படுத்துவது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என பலர் கூறுகிறார்கள். ஆனால் இதன் பயன்பாட்டை அவசியமான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேளிக்கைக்காக பயன்படுத்தக்கூடாது.

*இதனை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன..?

திரவ நைட்ரஜன், நமது உடலில் சருமத்தில் பட்ட ஒரு சில வினாடிகளில் அந்த பகுதி முழுவதும் உறைய வைக்கும் (frost bite) நிலைமைக்கு மாற்றிவிடும். இதனால் அந்த குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் திசுக்கள் முழுவதும் சிதைந்து போகும். இதனை வாய் வழியாக நாம் உட்கொள்ளும் போது, வாய் முதல் இரைப்பை வரை உணவு செல்லும் பாதை தொடங்கி அனைத்து இடங்களிலும் திசுக்கள் உறைந்து, உறுப்புகளை சிதைக்கிறது.

விளைவு சில சமயம் இதனால் பேச்சினை இழக்கும் தன்மையும் ஏற்படும். மேலும் நுரையீரல் உள்ளே செல்லும் போது திசுக்கள் உறையத் துவங்கி, மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்தி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சில சமயம் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இவை போக, இதனை உட்கொள்ளும் குழந்தைகள் ஒரு சிலருக்கு கண் பார்வை பறிபோகும் நிலையும் வரக்கூடும். அதிகபட்சமாக, மூளைச்சாவு அடையவும், மயக்க நிலைக்கு கொண்டு செல்லவும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் குடல்களில் ஓட்டை ஏற்படும் நிலையும் உருவாகும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அதில் இருந்து மீட்க வேண்டும் என்றால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த திரவ நைட்ரஜனை பயன்படுத்துவது உடல் ரீதியாக மட்டுமல்லாது மன ரீதியாகவும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இதிலிருந்து வெளியேறும் புகையை அந்த நேரத்திற்கு சுவாரஸ்யமாகவும், ரசிக்கும் தன்மையுடையதாகவும், குழந்தைகளின் மனதில் பதிந்துவிடும். அப்போது புகைப்பது தவறல்ல என்ற எண்ணம் அவர்களின் மனதில் வேறூன்ற வாய்ப்புள்ளது. அதை தொடர்வதற்காக சிலர் சிகரெட் மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாகும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் விளையாட்டாக செய்யக்கூடிய ஒரு விஷயம், பின் வரும் நாட்களில் பெரிய மாற்றத்தினை கொண்டு வரும் அபாயம் உள்ளது. எனவே பெற்றோர்கள் இது போன்ற கேளிக்கையான விஷயங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தாமல் இருக்க வேண்டும்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post உயிருக்கே ஆபத்தாகும் திரவ நைட்ரஜன் உணவுகள்! appeared first on Dinakaran.

Tags : kumkum doshi ,Dinakaran ,
× RELATED தகவல் தொழில்நுட்ப வல்லுநர் to தொழிலதிபர்!