×

தகவல் தொழில்நுட்ப வல்லுநர் to தொழிலதிபர்!

நன்றி குங்குமம் தோழி

ஐ.டியில் வேலை. நல்ல சம்பளம். ஆனால், தினமும் ஒரே விதமான வேலை பார்த்து வந்ததால் சலிப்பு ஏற்பட்ட காரணத்தால், வேலையை ராஜினாமா செய்தார். தன் பால்ய சிநேகிதியுடன் இணைந்து சிறிய அளவில் தொழில் செய்ய துவங்கினார். ஜெயந்தி, லாவண்யா இரு தோழிகளும் இணைந்து ‘லயம் ஹோம் எஸன்சியல்ஸ்’ என்ற பெயரில் பலவிதமான பொடிகளை தயாரித்து அதன் மூலம் தொழில்முனைவோராக செயல்பட்டு வருகிறார்கள்.

‘‘காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை தினசரி வேலை பார்ப்பவர்களுக்கு வாழ்க்கை ஒரே சீராக செல்லும். அவர்கள் அதே வாழ்க்கையில் கடைசி வரை இருந்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிலரால் மெஷின் போல் ஒரே மாதிரியான வேலையில் ஈடுபட முடியாது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதை நோக்கி தங்களின் பயணத்தையும் துவங்க விரும்புவார்கள். அப்படி ஒரு மாற்றம் என் வாழ்க்கையில் வேண்டும் என்று விரும்பி ஆரம்பிக்கப்பட்டது தான் எங்களின் இந்த பிசினஸ். இதில் நான் மட்டுமில்லை என் தோழி ஜெயந்தி இருவரும் சேர்ந்துதான் இந்தத் தொழிலை துவங்கினோம்.

எங்களுடையது பதினைந்து ஆண்டு கால நட்பு. எங்க இருவருக்குமே ஒரே இடத்தில் நிலையான வேலையில் ஈடுபட மனமில்லை. சொந்தமாக செய்ய வேண்டும் என்று விரும்பினோம். இப்படி ஒரே மனநிலை எங்களுக்குள் இருந்ததால்தான் எங்களால் இந்தத் தொழிலை இணைந்து செய்ய முடிகிறது. நானும் ஜெயந்தியும் சந்தித்துக் கொள்ளும் போது எல்லாம் எங்களின் ஒரே புலம்பல், ‘வாழ்க்கை மிகவும் ரொடீனாக சென்று கொண்டிருந்தது. மாறுதல் இருந்தால் நல்லா இருக்கும்’ என்பதுதான்.

அந்த எண்ணத்தில்தான் சிம்பிளாக பொடி வகைகளை தயாரித்து விற்பனை செய்யலாம் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது. அன்றாட வாழ்க்கையில் நம் வீட்டில் நம்முடைய சமையல் அறையில் உள்ள மிக்சியில் தயாரிக்கப்படும் பொடியினை ஆரோக்கியமாக கொடுக்க விரும்பினோம். அவ்வாறு கொடுக்கும் போது மனசுக்கு ஒரு சந்தோஷம் மற்றும் நிறைவு ஏற்படும்.

நாங்க இருவரும் வேறு வேறு பட்டப்படிப்பு முடித்திருந்தாலும், ஒரே அலுவலகத்தில்தான் வேலை பார்த்து வந்தோம். அதன் பிறகு இருவரும் வேலையை ராஜினாமா செய்துவிட்டோம். இருவரும் சேர்ந்து இதனை முழு நேரமாக செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நிறுவனமாக துவங்கி செயல்படுத்தி வருகிறோம். இதன் மூலம் வீடுகளிலேயே பொடி வகைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம்’’ என்ற லாவண்யா முதலில் இதற்கான தரமான பொருட்களை எங்கு கொள்முதல் செய்யலாம் என்பது குறித்து பல ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

‘‘தொழில் துவங்க முடிவு செய்தாயிற்று. அதற்கான மூலப் பொருட்களை எங்கே கொள்முதல் செய்தால் குறைவான விலையில் தரமாக கிடைக்கும் என்று பார்த்து அங்கே வாங்க முடிவு செய்தோம். இன்று வரை அங்கிருந்துதான் எங்கள் மூலப் பொருட்களை வாங்கி வருகிறோம். நாங்க இருவருமே தொழில்நுட்ப வல்லுனர்கள் என்பதால், எங்களின் தொழிலையும் அதன் மூலமே செயல்படுத்த துவங்கினோம்.

வாட்ஸப் க்ரூப் அமைத்து அதன் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இணைத்து அதில் நாங்க விற்பனை செய்யும் பொடி வகைகளை குறித்து விவரம் அளித்தோம். மேலும் அதனை தயாரிக்கும் முறை மற்றும் அதில் உள்ள மருத்துவ குணங்கள், உடலுக்கு அதனால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் என அனைத்தும் புரிய வைத்தோம். அவ்வாறு நாங்கள் விற்பனை ஆரம்பித்த பிறகு, பொடி வகைகள் கடையில் வாங்குவதை விட மிகவும் தரமாக சுவையாக உள்ளதாக எங்களிடம் வாங்கியவர்கள் தெரிவித்தார்கள்.

அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு பரவி எங்களின் விற்பனையும் அதிகரித்தது. ஆர்டர்கள் அதிகமானதால், அனைத்தும் நாங்க கூரியர் மூலமாக டெலிவரி செய்ய துவங்கினோம். அதற்கு நம்முடைய பொருட்களை மிகவும் தரமாகவும் பாதுகாப்பாகவும் பேக்கிங் செய்ய வேண்டும். அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பேக்கிங் செய்து பொருட்களை டெலிவரி செய்ய துவங்கினோம். இப்போது மற்ற பெரிய கம்பெனிகள் தயாரிப்பது போன்று சீல் செய்து வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வருகிறோம்.

தற்போது 35க்கும் மேற்பட்ட பொடி வகைகளை தயாரித்து வருகிறோம். முழுக்க முழுக்க சமூகவலைத்தளம் மூலம் ஆன்லைன் முறையில் மார்க்கெட்டிங் செய்து விற்பனை செய்கிறோம். சென்னை மட்டுமல்லாமல் வெளியூர்களுக்கும் கூரியர் மூலமாக எங்களின் பொருட்களை அனுப்பி வைக்கிறோம். இதுவரை நாங்க இருவர் மட்டுமேதான் இதனை தயாரிக்கிறோம். ஆர்டர் அதிகமாகும் போது அந்த சமயத்தில் மட்டும் உதவிக்கு ஆட்களை வைத்துக் கொள்வோம்.

இட்லி பொடி, கறிவேப்பிலை பொடி, முருங்கை இலை பொடி, எள்ளு இட்லி பொடி, சிவப்பரிசி மற்றும் கருப்பு கவுனி அரிசி புட்டு மாவு என பல வகைகள் தயாரித்து வருகிறோம். எங்களின் இந்த தொழில் ஆரம்பித்து ஒன்பது மாதங்கள் தான் கடந்துள்ளது என்பதால் அரசாங்க கடனுக்கு நாங்க விண்ணப்பிக்கவில்லை. வாடிக்கையாளர்கள் அதிகமாகும்போது, எதிர்காலத்தில் இது குறித்து சிந்திக்க முடிவு செய்துள்ளோம். தற்போது கறுப்பு கவுனி அரிசியின் நன்மைகள் குறித்து பலர் கூறி வருவதால் அதில் மாவு, கஞ்சி பவுடர், சூப் மற்றும் கீரை வகை பொடிகளையும் அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது.

மிகச் சிறிய அளவில்தான் இந்தத் தொழிலை ஆரம்பித்தோம். அதனால் சிறிது சிறிதாக விரிவுபடுத்தி வருகிறோம். டிஸ்ட்ரிப்யூட்டர்கள் கிடைத்தால் அவர்கள் மூலமாக விற்பனை செய்யும் எண்ணம் உள்ளது. மேலும் இணையம் மற்றும் யுடியூப் சேனல் ஒன்றை துவங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் மேலும் பிசினஸ் விரிவடையும். வாடிக்கையாளர்களுக்கு தரமான சுத்தமான பொருட்களை அளிக்க வேண்டும் என்பதில் நாங்க இருவருமே உறுதியுடன் செயல்படுகிறோம்’’ என்றார் லாவண்யா.

தொகுப்பு: சித்ரா சுரேஷ்

The post தகவல் தொழில்நுட்ப வல்லுநர் to தொழிலதிபர்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Jayanthi ,Dinakaran ,
× RELATED உன்னத உறவுகள்-அன்றைய நினைவுகள்