×

தைராய்டு பிரச்னைகளும் தீர்வும்!

நன்றி குங்குமம் டாக்டர்

தைராய்டு பிரச்னைகள்

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.

ஹைபோதைராய்டிஸம்

(Hypothyroidism) இது தைராய்டு சுரப்பி போதுமான அளவு தைராய்டு ஹார்மோன்களை சுரக்காமல் இருக்கும் நிலை.

அறிகுறிகள்

உடல் இயக்கம் அனைத்தும் மெதுவாக செயல்படுவதால், அதிக குளிர் உணர்வது, எளிதில் சோர்வடைவது, சருமம் உலர்வது, எடை கூடுதல், தூக்கக் கலக்கம், மறதி மற்றும் மனச்சோர்வு அதிகரிப்பது, மாதவிடாய் பிரச்னைகள் மற்றும் மலச்சிக்கல் ஆகியவை.

காரணங்கள்

உடலில் அல்லது தைராய்டில் ஏற்படும் ஆட்டோ இம்யூன் வியாதிகள், தைராய்டு அறுவை சிகிச்சை, கழுத்துப் பகுதியில் கொடுக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை, பிறக்கும் போதே தைராய்டு பிரச்சினைகளுடன் பிறப்பது, தைராய்டில் எரிவு (inflammation), குறிப்பிட்ட சில மருந்துகள், மிக அதிக அல்லது மிகவும் குறைவான அயோடின் மற்றும் தைராய்டை கட்டுப்படுத்தும் மூளையிலுள்ள பிட்யூடரி சுரப்பியில் நோய், மற்றும் குடும்பத்தில் தைராய்டு நோய் இருப்பது.

சிகிச்சை

மருந்துகள் மூலம் இந்த ஹார்மோன் அளவை சரிசெய்ய முடியும். மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இந்த மருந்தை தேவையைவிட குறைவாக எடுத்துக்கொண்டால் உங்கள் அறிகுறிகள் முழுவதும் குணமடையாமல் இருக்கும். அதிகமாக எடுத்துக்கொண்டால் தூக்கமின்மை, எடை குறைவு, பதற்றம், அதிக பசி, படபடப்பு, சோர்வு, மூச்சுவாங்குதல் போன்றவை ஏற்படும். அதனால் சரியான அளவு எடுத்துக் கொள்வதில் கவனம் தேவை. மருத்துவர் உங்களுக்கு மருந்து ஆரம்பித்து 6 – 10 வாரங்கள் கழித்து, மருந்தின் அளவை நிர்ணயம் செய்ய, இரத்தப் பரிசோதனை செய்வார். இதன் பின்பு வருடம் ஒரு தடவை இரத்தப் பரிசோதனை செய்யலாம்.

உங்கள் அறிகுறிகள் மோசமடைந்தாலோ, மேற்கூறிய பிற அறிகுறிகள் ஏற்பட்டாலோ, பிற மருந்துகள் சாப்பிட ஆரம்பித்தாலோ, சரிவர மருந்துகள் எடுக்கவில்லை என்றாலோ, மருந்துகள் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றாலோ, கர்ப்பம் தரித்தாலோ மருத்துவரை அணுகி தைராய்டு ஹார்மோனின் அளவை பரிசோதிப்பது அவசியம்.

ஹைபர்தைராய்டிஸம் (Hyperthyroidism)

இது, உடலின் தேவையைவிட அதிக தைராய்டு ஹார்மோன் சுரக்கும் நிலை. இந்த நிலையில், உடலின் அனைத்து இயக்கங்களின் வேகம் அதிகரிக்கிறது. இதன் அறிகுறிகள் மிகவும் மெதுவாக ஆரம்பித்து முன்னேறுவதால், மன அழுத்தம் அல்லது பதற்றம் எனத் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும்.

அறிகுறிகள்

பதற்றம், அதிக வியர்வை, படபடப்பு, கை நடுக்கம், தூங்குவதில் சிரமம், சருமம் மெலிதல், முடி உதிர்தல், தசைகள் ஓய்ந்து போதல் – குறிப்பாக தொடை மற்றும் தோற்பட்டை தசைகள், அடிக்கடி மலம் கழித்தல், பெண்களுக்கு மாதவிடாய் சரியாக இல்லாமல் இருத்தல், எடை குறைதல் ஆகியவை.

காரணங்கள்

‘கிரேவ்ஸ்’ நோய் எனப்படும் நோயால் பொதுவாக ஏற்படும். இது தவிர தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கட்டி அல்லது முடிச்சுகளாலும், எரிவாலும், தொற்றாலும் சில வகையான மருந்துகளாலும் ஏற்படலாம். சிகிச்சை: மருந்து, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு மருந்துகள், பிற மருந்துகள் என நோயின் தன்மை மற்றும் காரணத்தைப் பொறுத்து நபருக்கு நபர் தைராய்டு சிகிச்சை மாறுபடும்.

தைராய்டு காய்டர்

இது தைராய்டு சுரப்பி பெரிதாவதைக் குறிக்கும். இந்நிலையில் சுரப்பி அதிகமாகவோ, குறைவாகவோ அல்லது ஏதும் மாற்றமில்லாமலும் செயல்படலாம்.

காரணம்

உணவில் அயோடின் பற்றாக்குறை, ஆட்டோ இம்யூன் நோய், தைராய்டில் எரிவு போன்றவற்றால் இது ஏற்படும்.

சிகிச்சை

பெரிதான சுரப்பி உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். தைராய்டு சுரப்பி கழுத்தில் பார்க்க முடிகிறதென்றால், உடனே மருத்துவரை அணுகவும்.

தைராய்டு கட்டிகள்

தைராய்ட்டு சுரப்பியில் உள்ள செல்களின் அபரிமிதமான வளர்ச்சியால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டிகள் ஏற்படலாம். இவை எதனால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாக இவை எந்த தொந்தரவையும் ஏற்படுத்துவதில்லை. சிலருக்கு கழுத்தில் வலி, விழுங்குவதில் சிரமம், மூச்சு வாங்குவதில் சிரமம், குரலில் மாற்றம் போன்றவை ஏற்படுத்தும். மருத்துவரிடம் சென்று இது புற்றுநோய் கட்டியல்ல என்று உறுதி செய்து கொள்வது அவசியம்.

தைராய்டு எரிவு

தைராய்டு செல்கள் எரிவுக்கு உள்ளாகும்போது அதன் வீரியத்தைப் பொறுத்து பாதிப்படையும். மருந்துகள், மகப்பேற்றுக்குப்பின் தொற்றுகள் (Infection) போன்றவை இவற்றை ஏற்படுத்தும். சிலவகையான எரிவுகள் வலியை ஏற்படுத்தும்.

தைராய்டு புற்றுநோய்

இந்தப் புற்றுநோயை பெரும்பாலும் அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம். மற்ற புற்றுநோய்கள் போன்று இது வலியோ, பாதிப்போ ஏற்படுத்துவதில்லை.

*பொதுவாக இவை எந்த அறிகுறியும் ஏற்படுத்துவதில்லை.
*சிலருக்கு வலி, விழுங்குவதில் சிரமம், குரலில் மாற்றம், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.
*குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தால் வரும் வாய்ப்பு அதிகம்.
*மருத்துவரின் ஆலோசனையின்படி தொடர் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
*யாருக்கு தைராய்டு நோய் வரும் வாய்ப்பு அதிகம்?
*கீழ்க்கண்டவை இருந்தால் அவர்களுக்கு மற்றவரை விட தைராய்டு நோய் வரும் அபாயம் அதிகம்.
*பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்
*ஆட்டோ இம்யூன் வியாதிகள், குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு
பிரச்சினைகள் இருப்பது, தைராய்டு அறுவைசிகிச்சை மற்றும் கழுத்தில் கதிர்வீச்சு சிகிச்சை செய்திருப்பவர்கள்
*புகைபிடித்தல், உணவில் அயோடின் குறைபாடு.
*கர்ப்பகாலம் மற்றும் குழந்தை பிறந்த ஓரிரு வருடங்களில்.

கீழ்க்கண்ட அறிகுறிகள்

மிகுந்த அசதி, திடீரென உடல் எடை அதிகமாகவோ குறைவாகவோ ஆவது, பதற்றம், மனச்சோர்வு, இயல்பைவிட மிகக் குறைந்த அல்லது அதிக கொலஸ்டிரால் அளவு, மலம் கழிப்பதில் பிரச்சினை, முடி உதிர்தல், சருமத்தில் மாற்றம், கழுத்துப்பகுதியில் வீக்கம், வலி அல்லது கட்டி, குரல் மாற்றம், தசை, மூட்டு வலி, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, கருத்தரித்தலில் சிக்கல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

அயோடின்

தைராய்டு ஹார்மோனின் உற்பத்திக்கு அயோடின் மிகவும் அத்தியாவசியமானது. இதை உணவிலிருந்து மட்டுமே பெறமுடியும் அல்லது மருந்தாக உட்கொள்ள வேண்டும். இதன் குறைபாடு தைராய்டு சுரப்பியில் பல்வேறு பிரச்சினைகளை உண்டு பண்ணலாம். அனைவருக்கும் அயோடின் மிகமிக அவசியம். குறிப்பாக கர்ப்பமடைந்த பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் அயோடின் மிக முக்கியம். போதிய அளவு அயோடின் இல்லையென்றால், குறைப்பிரசவம், குழந்தை இறந்தே பிறப்பது, மூளை வளர்ச்சி இல்லாத குழந்தை, மூளைத்திறன் குறைவான குழந்தை, பேச்சு, கேட்கும் திறனில் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும். அயோடின் சேர்க்கப்பட்ட சமையல் உப்பைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த குறைபாட்டை எளிதில் தடுக்கலாம்.

தொகுப்பு: லயா

The post தைராய்டு பிரச்னைகளும் தீர்வும்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dinakaran ,
× RELATED முருங்கை விதையின் மருத்துவ குணங்கள்!