×

மேட்டுப்பாளையம் மலைப்பாதைகளில் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும்

*போலீசார் அறிவுறுத்தல்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோவை வழியாக ஊட்டி செல்வோர் மேட்டுப்பாளையத்தை கடந்து தான் செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்ல குன்னூர், கோத்தகிரி என இரு சாலைகள் தனித்தனியே உள்ளன.

இரு மாவட்டங்கள் மற்றும் மூன்று மாநிலங்களை இணைக்கும் இச்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் பனிமூட்டத்தின் காரணமாக பகல் நேரங்களில் கூட மலைச்சாலைகளில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது.

நேற்று முன்தினம் பகல் 11 மணியளவில் துவங்கிய மழை நேற்று நள்ளிரவு வரை விடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் பகல் நேரத்திலும் இரவில் பயன்படுத்தும் ஹெட் லைட் வெளிச்சத்தில் வாகனங்கள் பயணித்தன. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் தற்போது ஊட்டியில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி மேலும் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் ஊட்டியை நோக்கி படையெடுத்து கொண்டு உள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான வாகனங்கள் மேட்டுப்பாளையம் வழியாக குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குன்னூர், கோத்தகிரி சாலைகளின் வழியே பயணித்து வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் வாகனங்களை மிகுந்த கவனத்துடன் இயக்க வேண்டும் என போலீசார் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

The post மேட்டுப்பாளையம் மலைப்பாதைகளில் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Nilgiris district ,Ooty ,Tamil Nadu ,Coimbatore ,Coonoor ,Kothagiri ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது