×

கோடை விடுமுறையை கொண்டாட நெல்லை அறிவியல் மையத்தில் குழந்தைகளுடன் குவியும் பெற்றோர்

நெல்லை : நெல்லையில் மழைக்கான அறிகுறியுடன் கூடிய இதமான காலசூழ்நிலை நிலவி வருவதால் கோடைவிடுமுறையை கொண்டாட குழந்தைகள் பெற்றோருடன் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் குவிகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டிவாட்டி வதைத்து வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வந்தனர். பள்ளிகள் கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நேரத்திலும் வெயிலின் தாக்கத்தால் பெற்றோர்கள் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.

இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் எதிர்பார்த்த மழை இல்லாததால் ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து இதமான காலசூழ்நிலை மாற்றம் காணப்படுகிறது. இதனால் வீட்டில் முடங்கிகிடந்த பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு நெல்லையில் உள்ள ஒரே ஒரு பொழுதுபோக்கு தலமாக விளங்கும் மாவட்ட அறிவியல் மையத்திற்கு நேற்று வந்தனர்.

மாவட்ட அறிவியல் மையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கனமழை காரணமாக குழந்தைகள் கண்டுகளிக்கும் பல கோடி செலவில் கட்டமைக்கப்பட்டிருந்த எலக்ட்ரானிக்ஸ் கண்டு பிடிப்பு மாதிரிகள், பூங்காக்கள் சேதமடைந்தன. தற்போது பூங்காக்கள், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

இதைதொடர்ந்து பள்ளிகள் திறக்க இன்னும் 18 நாட்கள் உள்ள நிலையில் குழந்தைகள் கோடை கால விடுமுறையை கொண்டாடி மகிழ பெற்றோர்களுடன் அறிவியல் மையத்திற்கு வருகை தருவது அதிகரித்துள்ளது. நேற்று காலை முதல் மாவட்ட அறிவியல் மையத்திற்கு பெற்றோர்கள் குழந்தைகளுடன் அதிகமானவர்கள் வந்தனர். அவர்கள் மாவட்ட அறிவியல் மையத்தில் உள்ள சிறுவர் விளையாட்டு உபகரணங்களில் விளையாடியும், பூங்காக்களில் பொழுதை போக்கி சென்றதை காணமுடிந்தது.

 

The post கோடை விடுமுறையை கொண்டாட நெல்லை அறிவியல் மையத்தில் குழந்தைகளுடன் குவியும் பெற்றோர் appeared first on Dinakaran.

Tags : Nellie ,Science Center ,Nellai ,Nellai District ,Dinakaran ,
× RELATED நெல்லை டவுன் ரத வீதியில் தேநீர்...