×

மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

 

திருவாரூர், மே 22: தமிழகத்தில் கோடை மழையால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி, எள், உளுந்து மற்றும் வாழை பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் மாநில பொது செயலாளர் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பெய்து வரும் கோடை மழை காரணமாக பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கியதால் செடிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

மேலும் காற்று காரணமாகவும் பூக்கள் பெருமளவு கொட்டி வருகின்றன. பருத்தி காய்கள் வெடித்து வந்த நிலையில் மழை நீர் கோர்த்து நிறம் மாறியதால் விற்பனை செய்ய வாய்ப்பில்லாமல் உள்ளது. இதேபோன்று எள் மற்றும் உளுந்து செடிகளின் பூக்களும் உதிர்ந்ததுடன் பல இடங்களில் செடிகள் அழுகிவிட்டது. நிலக்கடலை சாகுபடி சில இடங்களில் பாதித்துள்ளது. திருச்சி மாவட்டம் உள்ளிட்ட வாழை விளையும் பகுதிகளில் தார் வந்த நிலையில் வாழை மரங்கள் பல ஏக்கர் அளவில் முறிந்து சாய்ந்து விட்டன.

கிருஷ்ணகிரி மற்றும் சில மாவட்டங்களில் மாமரங்களில் பூக்கள் கொட்டி விளைச்சல் குறையும் நிலை உள்ளது. இப்படி பல நிலையில் கோடை சாகுபடி பரவலாக தமிழகத்தில் விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மழையும் நீடித்து வருகிறது. எனவே தமிழக அரசு வேளாண் துறை மூலம் கள ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்திடும் நிலையில் நிவாரணம் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மாசிலாமணி தெரிவித்துள்ளார்.

The post மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Farmers' Association ,Tiruvarur ,Tamil Nadu Farmers Association ,Tamil Nadu ,state general secretary ,Masilamani ,Dinakaran ,
× RELATED நிலுவை தொகை வழங்க கோரிக்கை