×

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரத்தில் நடு வழியில் பஞ்சராகி நின்ற அரசு பேருந்தால் பயணிகள் அவதியுற்றனர். தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு ஒன் டூ ஒன் அரசு பேருந்து நேற்று மாலை புறப்பட்டது. இப்பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் நுழைவு வாயில் அருகே வந்த போது டயர் பஞ்சராகி நின்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி நின்றனர். மாலை நேரம் என்பதால் தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி வந்த சாதாரண லோக்கல் பேருந்துகள் அனைத்தும் கூட்டமாக சென்றது. சுமார் 30 நிமிடங்கள் கழித்து மாற்று பேருந்தில் பயணிகளை ஏற்றி விட்டனர். பஞ்சரான பேருந்து ஒன் டூ ஒன் பேருந்தாகும். இதனால் அனைத்து பயணிகளும் திருநெல்வேலிக்கு செல்பவர்கள்.

மாற்றுப்பேருந்தில் உட்கார இடம் கிடைக்காததால் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் நின்று கொண்டு சென்றனர். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். வழக்கமாக அனைத்து வாகனங்களிலும் திடீரென டயர் பஞ்சரானால் உடனடியாக அதனை சரி செய்யும் வகையில் மாற்று டயர் வைத்திருப்பர். ஆனால் பிரேக் டவுன் ஆகி நின்ற அரசு பேருந்தில் மாற்று டயர் இல்லை என்று கூறப்படுகிறது. மாற்று டயர் இருந்திருந்தால் கூட 10 நிமிடத்திற்குள் பஞ்சரான டயரை மாற்றி பேருந்தை இயக்கி இருக்கலாம். ஆனால் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் மாற்று டயர் இன்றி பேருந்து இயக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

 

The post பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Bhavoorchatra ,Bhavoorchatram ,Tenkasi ,Tirunelveli ,Vennimalai Murugan ,avati ,
× RELATED குற்றால அருவிகளில் வெள்ளம்: எச்சரிக்கை கருவி அமைப்பு