விசாக நட்சத்திரம்
27 நட்சத்திரங்களில் விசாக நட்சத்திரம் சிறப்புடையது. குருபகவானை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவதாக இருப்பது விசாகம். முருகப் பெருமானின் அவதார நட்சத்திரம். இதன் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும், நான்காவது பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்திருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தராசு போல இருப்பார்கள். நீதிக்கும் நேர்மைக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள். இரக்க குணம் இருக்கும். மன அடக்கமும் புலனடக்கமும் இருக்கும். அழகிய தோற்றம், கொண்ட கொள்கைகளில் உறுதி, வேத சாஸ்திரங்களில் புலமை கொண்டு சிறந்த ஆன்மிகவாதிகளாகவும் பிரசித்தி பெற்று விளங்குவர். விசாக நட்சத்திரத்தின் பெயர்தான் வைகாசி மாதமாக மாறியது. விசாக நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் நாள் பௌவுர்ணமியானால் அது வைகாசி மாதம். வைகாசி மாதம் மிக விசேஷமானது. ரிஷப ராசி மாதம் என்று சொல்லுவார்கள். சூரியன் ரிஷப ராசியில் பிரவேசிக்கும் காலம் வைகாசி மாதம். அந்த மாத முழு நிலவு நாளில் சந்திரன் விசாக நட்சத்திரத்தில் துலாம் ராசியில் இருக்கும்.
விசாகன்
பொதுவாக ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு விசேஷம். திருவோண நட்சத்திரம், திருமாலுக்கும், திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கும் உரியது. இந்த நட்சத்திரத்தை வைத்து பெருமாளின் பெயரை திருவோணத்தான் என்றும் சிவனின் பழைய பெயரை திரு ஆதிரையான் என்றும் சொல்லும் வழக்கம் உண்டு. முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் சிறப்பானது என்பதால், கார்த்திகையான் என்கிற பெயரும், வைகாசி நட்சத்திரம் உரியது என்பதால் விசாகன் என்றும் அழைப்பது வழக்கம். `வி’ என்றால் பறவை (மயில்), `சாகன்’ என்றால் பயணம் என்று பொருள். மயில் மீது பயணம் செய்யக் கூடியவர் என்று பொருள்படும்.
ஸ்காந்தம்
வியாசர் எழுதிய 18 புராணங்களில் ஸ்காந்தம் எனும் கந்தபுராணமே மிகப் பெரியது. ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் ஸ்லோகங்கள்தான். முருகனின் பெருமையை இந்தப் புராணம் விளக்குகிறது. பரமேசுவரன் இமவான் மகளாகிய உமையை மணக்கிறார். பிரம்மனிடம் பெருவரம் வாங்கிய சூரபத்மனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் சிவனிடம் முறையிடுகின்றனர். அவரும் தேவர் துயர் தீர்க்க ஒரு குமாரனைத் தருவதாக வாக்களிக்கிறார். ஐந்து திருமுகங்களோடு அதோமுகமும் கொள்கிறார், ஆறு திருமுகங்களிலும் உள்ள ஆறு நெற்றிக் கண்களினின்றும் ஆறு பொறிகள் கிளம்புகின்றன. அந்தப் பொறிகளை வாயுவும் அக்னியும் ஏந்திவந்து சரவணப் பொய்கையில் சேர்த்து விடுகின்றனர். அப்பொய்கையில் பூத்த ஆறு தாமரை மலர்களில் இந்தப் பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறுகின்றன.
முருகன் திரு அவதாரக் கதை
இந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்க்கின்றனர். இந்த கார்த்திகேயனைக் காண சிவபெருமான் உமையம்மையோடு சரவணப் பொய்கை வருகிறார். அம்மை, குழந்தைகள் அறுவரையும் சேர்த்து எடுக்க ஆறு குழந்தைகளும் சேர்ந்து ஆறுமுகத்தோடு கூடிய ஒரே பிள்ளையாக மாறுகிறார்கள். ‘‘அவனே கந்தன் என்றும் ஆறுமுகம் என்றும் அழைக்கப்படுகிறான்’’ என்று முருகன் திரு அவதாரக் கதையை கச்சியப்பர் கந்த புராணத்திலேயே விளக்குகிறார்.
“அருவமும் உருவம் ஆகிஅனாதியாய், பலவாய், ஒன்றாய்
பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து உதித்தனன் உலகம் உய்ய’’
ராமாயணத்தின் நிகழ்வுகள் போலவே கந்தபுராணத்தில் இருக்கும். ‘‘வேலும் வில்லும்” என்று பி.ஸ்ரீஅக்காலத்தில் அற்புதமான புத்தகத்தை இரண்டு நூல்களையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.
சோதி நாள்
விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர். புத்த பெருமான் பிறந்ததும் ஞானம் பெற்றதும் இந்த வைகாசி விசாகத்திலேயே ஆகும். இந்நாளிலேயே வைணவத்தில் ஆழ்வாரும் ஆச்சார்யருமான நம்மாழ்வாரும் பிறந்தார். ஆழ்திருநகரி, திருக்கண்ணபுரம், காஞ்சிபுரம் முதலிய திருத்தலங்களில் வைகாசி பிரமோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.
ஆறுமுகனாக வழிபடுவதற்கான காரணம்
கந்தனை ஆறுமுகனாக வழிபடுவதற்கான காரணத்தை திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் விளக்குகிறார். உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம், பக்தர்களுக்கு அருள ஒரு முகம், வேள்விகளைக் காக்க ஒரு முகம், உபதேசம் புரிய ஒரு முகம், தீயோரை அழிக்க ஒரு முகம், பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் சேர்ந்திருக்க முகம். அதனால்தான் ‘சரவணபவ’ எனும் ஆறெழுத்து மந்திரத்தால் வேலனை வலம் வந்து துதிக்கிறோம்.
ஆறு குண்டலினிகள்
இந்த ஆறு படை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.
திருப்பரங்குன்றம் – மூலாதாரம்
திருச்செந்தூர் – ஸ்வாதிஷ்டானம்
பழனி – மணிபூரகம்
சுவாமிமலை – அனாஹதம்
திருத்தணிகை – விசுத்தி
பழமுதிர்சோலை – ஆக்ஞை
ஏறுமயிலேறி விளையாடுமுகம்
முருகனின் வாகனம் மயில். முருகன் மயில்மேல் ஆரோகணித்து வருவதையும் கண்டிருக்கிறோம். ஞானப்பழமான மாம்பழத்திற்காக முருகன் உலகைச் சுற்றி வருவதற்கு உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின் போது இந்திரன் மயிலாக உருமாறி முருகனைத் தாங்கியது தேவ மயில். சூரனை இரண்டாகப் பிளந்து வந்த மயில் அசுர மயில். சின்னஞ்சிறு விளையாட்டுப் பிள்ளையாக ஏறுமயில் ஏறி விளையாடும் முருகனை மாயூரத்தை அடுத்த நனிபள்ளி என்னும் தலத்திலே செப்புச்சிலை வடிவத்திலே தரிசிக்கலாம். திருப்பத்தூர் அடுத்த குருசிலாப்பட்டு அருகே அமைந்துள்ளது மயில் பாறை முருகன் கோயில். இக்கோயில் அடர்ந்த வனப் பகுதி நடுவில் மயில்கள் ஆடும் சோலைவனமாக அமையப் பெற்றிருக்கிறது. எனவே இதற்கு மயில் பாறை எனப் பெயர் பெற்று விளங்கி வருகிறது.
வள்ளியை மணம்புணர வந்தமுகம்
தெய்வானைத் திருமணத்தைவிட வள்ளித் திருமணம் விசேஷம். தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். ஆனால் வள்ளியை திருமணம் செய்துகொள்ள முருகனே தேடி வந்தான். நாடகங்களிலும் வள்ளித்திருமணம் சிறப்பு. அருணகிரிநாதரும் வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்று என்று இந்த திருமணத்தையே முதன்மைப்படுத்திப் பேசுகிறார். முருகனுக்கு வள்ளிக்கணவன் என்ற பெயர் உண்டு.
“வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே’’
– என்ற பாடல் பிரசித்தமல்லவா!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது வேளிமலை குமார கோயில். முருகப் பெருமானுக்கும் வள்ளிக்கும் இடையே காதல் வேள்வி நடந்த மலை என்பதால், இதற்கு வேள்வி மலை என்று பெயர். இதுவே பின்னர் வேளி மலையாக மருவியது. வள்ளியை முருகப் பெருமான் காதலித்த காலகட்டம். அப்போது வள்ளியின் உறவினர்கள் வள்ளியைத் தேடி அங்கே வர… வள்ளியுடன் இருந்த முருகப் பெருமான் வேங்கை மரமாக மாறினார் என்கிறது புராணம். எனவே இங்கு வேங்கை மரத்துக்கு சிறப்பு உண்டு.
வேளிமலை வைகாசி விசாகத் திருவிழா
வருடம்தோறும் இங்கு வைகாசி விசாகத் திருவிழாவின் 6-ஆம் நாளன்று மஞ்சள் தடவிய தாளில் எழுதப் பெற்ற வள்ளிக்குச் சொந்தமான உடைமைகளின் விவரம் தேவஸ்வம்போர்டு ஊழியர் ஒருவரால் இங்கு வாசிக்கப்படுகிறது. இங்கு பல வகை காவடிகள், துலா பாரம், பிடிப்பணம் (கையளவு காசு) வாரியிடுதல், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல், சோறு ஊட்டுதல், காது குத்துதல், மாவிளக்கு ஏற்றுதல், உப்பு – மிளகு காணிக்கை செலுத்துதல், அரிசி-பயறு வகைகள், காய்கறிகள்-பழங்கள் காணிக்கை செலுத்துதல், அங்கப் பிரதட்சணம், மயில்களுக்கு பொரிகடலை – தானியங்கள் வழங்குவது போன்ற நேர்ச்சை வழிபாடுகளும் நடக்கின்றன. கோயிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள ஒரு குகையை ‘வள்ளிக் குகை’ என்பர். முருகப் பெருமான் – வள்ளி திருமணம் இந்த பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது. முருகன் – வள்ளி திருமண சம்பவத்துடன் தொடர்பு கொண்ட தினைப்புனம், வள்ளிச் சோலை, வட்டச் சோலை, கிழவன் சோலை ஆகிய இடங்கள் உள்ளன. வள்ளிதேவி நீராடிய சுனை அருகே பாறையில் – விநாயகர், வேலவர், வள்ளிதேவி ஆகியோரது புடைப்புச் சிற்பங்களைக் காணலாம்.
கழுகுமலை முருகன்
கோவில்பட்டி அருகே உள்ளது கழுகுமலை. இங்கு கோயிலிலுள்ள முருகன் ஆறு கரங்களுடன் மயில் வாகனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். இங்கு முருகனின் இடப்பக்கத்தில் மயில் உள்ளது. ஆலயத்திலுள்ள நூறு தூண்களிலும் ராமர் மற்றும் ஆஞ்சநேயரின் உருவங்கள் காட்சி அளிக்கின்றன. விராலிமலை மூலவர் சண்முகர், மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார்.
சுவாமிமலை
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகும். தந்தையாகிய சிவபெருமானுக்கு `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை உபதேசித்த பிரசித்தி பெற்ற தலமாகும். முருகப் பெருமான் இக்கோயிலில் தகப்பன்சுவாமி எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோயில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது. சென்னையை அடுத்த போரூரில் உள்ள உறவுகன் ஆலயத்தில், ஞானபண்டிதனைக் காணலாம். கருவறையைச் சுற்றியுள்ள மேலப்பிரகாரத்திலே இரண்டடி உயரத்திலுள்ள செப்புச் சிலை வடிவில் சிவனின் மடிமீது இருந்துக் கொண்டே பிரணவ உபதேசம் செய்யும் கோலத்தில் ஞான பண்டிதன் காட்சி தருவான்.
வள்ளியுடன் முருகன் காட்சி தரும் தலங்கள்
பழநியில் வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய மூன்று நாள்களிலும் மலைக் கோயிலில் வள்ளித் திருமணம் நடைபெறும். அதேபோல், பெரியநாயகி அம்மன் கோயிலிலும் மூன்று முறை நிகழ்த்துகிறார்கள். பழநிமலைக் கோயிலிலும், பள்ளியறையில் வள்ளி மட்டுமே முருகனுடன் எழுந்தருள்கிறாள். திருச்செந்தூரரில் பங்குனி உத்திர விழாவில் வள்ளித் திருமணம் நடத்துவர். இங்கே, வள்ளியே பள்ளியறை நாச்சியாராக முருகனுடன் பள்ளியறைச் சேவை காண்கிறாள். சுவாமி மலையில் வேட ரூப வடிவில் முருகனும், கையில் கவண் ஏந்திய வள்ளியும் உற்சவ மூர்த்திகளாக உள்ளனர். கோவைக்கு அருகில் குருந்த மலையில், வள்ளிமலை என்ற சிறு குன்றில் வள்ளிக் குகையும், வள்ளி வடிவமும் உள்ளன. சென்னைக்கு அருகே சிறுவாபுரியில் வள்ளியும் முருகனும் மணவாளக் கோலத்தில், ‘வள்ளி கல்யாண சுந்தரராக’ கரம் பற்றிய நிலையில், பஞ்சலோக வடிவில் அருள்கிறார்கள்.
விசாகத்துக்கு இணை விசாகம்தான்
இது குருவின் நட்சத்திரம் என்பதால் பல குருமார்கள் இந்த விசாகத்தில் அவதாரம் செய்திருக்கிறார்கள். வள்ளல் ராமலிங்க அடிகளார் தன் சத்யஞான சபையை வடலூரில் நிறுவிய தினம் இது. நேபாளத்தில் கபிலவஸ்து பேரரசர் சுத்தோனா கெளதமாவின் குமரன் சித்தார்த்தர் எனும் கெளதம புத்தர் வைகாசி விசாக புண்ணிய நாளில்தான் ஞானத்தை அடைந்த நாளாகக் கருதப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலில் ராஜ ராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக அரங்கேற்றும் நாடக கலைஞர்களுக்கு ஆண்டுதோறும், வைகாசி விசாகதினத்தில் ஊதியமாக நெல் வழங்கி ராஜேந்திர சோழன் ஆணையைப் பிறப்பித்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாகனான முருகனுக்கு எத்தனைத் தலங்கள்?
ஞானம், வைராக்கியம், செல்வம், கீர்த்தி, பலம், ஐஸ்வர்யம் போன்ற ஆறு பண்புகளை கொண்டது முருகனின் திருமுகங்கள். அவரை வணங்குவதால் இந்த குணங்கள் நமக்கு கிடைக்கும். முருகனின் அருளை வேண்டுவோர் இந்நாளில் பால்குடம், காவடி எடுத்து வழிபடுவார்கள். இனி சில முக்கியமான முருகன் தலங்களை தரிசிப்போம். திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 44 கி.மீ.யில் செட்டிகுளம் என்ற தலத்தில் உள்ளது, தண்டாயுதபாணி ஆலயம். குழந்தைப் பேறு வேண்டி இந்த முருகனைப் பிரார்த்திக்கும் தம்பதியர் வேண்டுதல் நிறைவேறியதும் அக்குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்து, பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள மேலகல்கந்தார் கோட்டையில் உள்ளது பாலமுருகன் ஆலயம். கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் இருக்க, அவருக்கு முன் அன்னை மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் பாலமுருகனுக்கு பாதுகாவலாய் உள்ளாள். சென்னிமலையில் இரண்டு முகங்கள், எட்டு கரங்கள் கொண்டு யாக அக்னியை வளர்க்கும் அக்னி ஜாதகர் என்னும் அரிய திருவுருவத்தில் இருக்கின்றார்.
நாகதோஷ நிவர்த்தி
சீர்காழிக்கு மேற்கே 4 கி.மீ.யில் கொண்டல் என்ற கிராமத்தில் அருள்பாலிக்கிறார் குமார சுப்ரமணிய சுவாமி. தங்கள் மகளுக்கு மணமாக வேண்டும் என்று எண்ணும் பெற்றோரும் விரும்பிய கணவன் அமைய பெண்களும் இந்த ஆலயம் வந்து முருகனிடம் வேண்டிக் கொள்கின்றனர். லால்குடியிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது மணக்கால் சுப்ரமணியசுவாமி கோயில். வைகாசி விசாகம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவை காந்திபுரத்திலிருந்து 8 கி.மீ.யில் உள்ளது பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம். கிரகப் பெயர்ச்சி நாட்களில் இந்த ஆலயத்தில் பலவகை மூலிகைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற விசேஷயாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் கலந்து கொள்வதால், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்பு கணிசமாக குறைவது கண்கூடு. திருப்பூர் – நம்பியூர் பாதையில் 15கி.மீ. தூரத்தில் உள்ள உதயகிரியில் முத்து வேலாயுதசுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள பாறை ஒன்றில் ஐந்து தலை நாகமொன்று புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து நாகதோஷ நிவர்த்தி செய்துகொள்கின்றனர். இவ்வாலயத்திலுள்ள காலபைரவருக்கு தனிச் சந்நதி அமைந்துள்ளது.
The post வளமான எதிர்காலத்திற்கு வைகாசி விசாகம் appeared first on Dinakaran.