×

வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்து: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கோவை: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா அடிக்கடி பழுதாகி செயல்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும், அதிமுக எம்எல்ஏ.வுமான தா.மலரவன் (75) வீட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்று, அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:

கேரள மாநில அரசு, இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுகிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீர் நின்றுவிடும். அமராவதி அணை பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, கேரள அரசின் முயற்சியை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆந்திரா மாநில அரசு, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. இதுவும், தமிழகத்துக்கு நீர்வரத்தை தடுக்கும். இதையும், மாநில அரசு தடுக்க வேண்டும்.

இல்லையெனில், தண்ணீருக்கு, அண்டை மாநிலங்களை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்படும். தமிழகத்தில், அதிமுக வாக்காளர்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளனர். கோவையில் வாக்காளர்கள் இருமுறை பதிவு என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளனர். இதை தேர்தல் ஆணையம் ஒழுங்குபடுத்தவில்லை. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதிலும், வாக்குப்பதிவின்போதும், ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தற்போது, வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி பழுதாகி, செயல்படாமல் உள்ளது. இவை, எல்லாவற்றையும் பார்க்கும்போது, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக தெரிகிறது. நாடாளுமன்ற ேதர்தலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான `இந்தியா கூட்டணி’ 400 சீட்டுகள் பெறுமா? அல்லது பா.ஜ. தலைமையிலான கூட்டணி 400 சீட்டுகள் பெறுமா? என்பதை தற்போது சொல்லமுடியாது. வரும் ஜூன் 4ம் தேதி எல்லாம் தெரிந்துவிடும்.

The post வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்து: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Edappadi Palaniswami ,Coimbatore ,Dinakaran ,
× RELATED ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள்...