×

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்கான கால அவகாசம் 24-ம் தேதி வரை நீட்டிப்பு: இதுவரை 2,34,883 பேர் விண்ணப்பம் சமர்ப்பிப்பு

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறையில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி.எஸ்.சி., பி.ஏ., பி.காம் பட்டப்படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன.

இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு இம்மாதம் 6-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், நேற்றைய முன்தினம் மாலை 6 மணி வரை, 2 லட்சத்து 18 ஆயிரத்து 915 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 211 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருந்தனர். இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் (மே 20) நிறைவடைந்தது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளான நேற்று மாணவ, மாணவிகள் அதிக ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். நேற்றைய மாலை 6 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 34 ஆயிரத்து 883 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1 லட்சத்து 89 ஆயிரத்து ஒரு பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி இருந்தனர். இந்நிலையில் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பம் செய்யவும், கட்டணம் செலுத்துவதற்கும் ஏதுவாக கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து இணைய வழியாக விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை வரும் 24-ம் தேதி வரை நீட்டித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சென்னையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாத மாணவ, மாணவிகள் நேற்று நேரில் சென்று விண்ணப்பித்தனர். உதவி மையங்களில் மாணவர்களின் ‘கட்ஆப்’ மதிப்பெண்களை கேட்டறிந்த பேராசிரியர்கள், அவர்களுக்கான வாய்ப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

The post அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்கான கால அவகாசம் 24-ம் தேதி வரை நீட்டிப்பு: இதுவரை 2,34,883 பேர் விண்ணப்பம் சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Directorate of College Education in Tamil Nadu Higher Education Department ,Government Arts ,Arts and Science Colleges ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல்...