×
Saravana Stores

இயற்கையோடு இயைந்த பொருட்களுக்கான வரவேற்பு அதிகம்!

நன்றி குங்குமம் தோழி

பெண் தொழில் முனைவோர் கௌதமி மஞ்சு

‘‘இளமையாக, அழகாக இருக்க யாருக்குதான் ஆசையிருக்காது. ஆனால் அதேபோல் ஆபத்தில்லாத அழகு வேண்டும் என்கிற ஆசையும் உண்டுதானே. கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் அழகு சாதனப் பொருட்களில் ரசாயனங்கள் அதிகம் கலக்கப்பட்டு இருப்பதால், அதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது சருமத்திற்கு பல விளைவுகள் ஏற்படுகிறது. அதன் காரணமாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட கலப்படமில்லாத மூலிகைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறேன்.

அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைக்கிறது’’ என்கிறார் ‘சர்வ மங்களா ஹெர்பல்’ பெயரில் அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விற்பனையில் வெற்றிக்கொடி நாட்டி வரும் கௌதமி மஞ்சு. ‘‘எங்க தயாரிப்புகள் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படுவதால், முகங்கள் அழகு பெறுவதோடு இளமையான தோற்றத்தையும் தக்கவைக்க உதவும்’’ என்கிறார் மஞ்சு. இவர் மூலிகையிலான அழகு சாதனங்களை பயன்படுத்துவது குறித்தும், அதன் பயன்பாடுகள் மற்றும் சிறப்புகள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

‘‘நான் இந்தத் ெதாழிலுக்கு வரும் முன் முதலில் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்தேன். பிறகு மாண்டிசோரி பள்ளியில் ஆசிரியராக இருந்தேன். கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட வேலை இழப்பில், ஏதேனும் ஒரு சுயதொழில் துவங்கினால் தான் சமாளிக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இருந்தேன். அப்போது ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்கள் குறித்த தகவல்கள் பற்றி நண்பர்கள் குறைபட்டுக் கொண்டதை பார்த்தேன்.

அந்த சமயத்தில்தான் நாமே ஏன் பாரம்பரிய இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கக் கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அதற்கென பல்வேறு தேடலில் இறங்கினேன். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் அழகு பொருட்கள் குறித்த ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்தேன். அதில்தான் இதன் தயாரிப்பு வழிமுறைகளை முறையாக படிப்படியாக கற்றுக் கொண்டேன். முதலில் என்னுடைய சொந்த உபயோகத்திற்காகத்தான் தயாரித்தேன்.

அதைப் பார்த்து என் நண்பர்களும், உறவினர்களும் அவர்களுக்கும் தயாரித்து தரச்சொல்லி கேட்டார்கள். அப்படி துவங்கப்பட்டது தான் இந்த ‘சர்வ மங்களா ஹெர்பல்’ அழகு பொருட்களின் தயாரிப்பு நிறுவனம். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமில்லாமல், அவர்கள் மூலமாக நிறைய வாடிக்கையாளர்கள் வரத் துவங்கினார்கள். இது என்னுடைய உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்லணும்.

உங்களின் தயாரிப்புகள்…

முப்பதுக்கும் மேற்பட்ட அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். ஆலோவேரா ஜெல், மஞ்சிஸ்தா ஜெல், குங்குமாதி ஜெல், ரோஸ் ஜெல், ஹெர்பல் ஹேர் ஆயில், பொடுகிற்கான எண்ணெய், முடி உதிர்வினை கட்டுப்படுத்தும் எண்ணெய், ஹேர் சீரம், ரோஸ் சீரம், குங்குமாதி சீரம், குங்குமாதி கிரீம், குங்குமாதி ஃபேஸ் வாஷ், மஞ்சிஸ்தா ஃபேஸ் வாஷ், வாட்டர்மெலன் ஃபேஸ் வாஷ், வாசனை குளியல் பவுடர் என பல்வேறு தயாரிப்பிலான அழகு சாதனப் பொருட்களை நாங்க உற்பத்தி செய்து வருகிறோம்.

இதன் தரம் மற்றும் பலன்களால் தொடர்ந்து மக்களிடம் இருந்து எங்களின் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு முறை வாங்கியவர்கள் தற்போது என்னுடைய நிரந்தர வாடிக்கையாளர்களாவே மாறிவிட்டார்கள். மேலும் முகநூல் மற்றும் இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் எங்களின் பொருட்களை சந்தைப்படுத்தி வருகிறோம்.

மூலிகையிலான அழகு சாதனப் பொருட்களின் சிறப்புகள்…

இயற்கை முறையில் விளைந்த அதிமதுரம், கற்றாழை, வெட்டிவேர் போன்ற பல்வேறு பாரம்பரிய மூலிகைகளை சேர்த்து தான் இந்த அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கிறேன். இதில் எந்தவிதமான ரசாயனங்களும் கலப்பதில்லை. பொதுவாக இயற்கை மூலிகையிலான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும்போது உடனடி பலன்களை பார்க்க முடியாது. ஆனால் அதைத் தொடர்ந்து பயன்படுத்தினால்தான் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

மேலும் நீடித்த தீர்வுகளையும் பெறமுடியும். முழுக்க முழுக்க இயற்கை மூலிகைகள் என்பதால், பக்க விளைவுகள் குறித்து பயம் கொள்ள தேவையில்லை. தற்போது மக்களிடையே இயற்கை சார்ந்த பொருட்கள் அது உணவாக இருக்கட்டும், அழகு சாதனப் பொருளாக இருக்கட்டும் அது குறித்து நல்ல விழிப்புணர்வு பரவி வருகிறது. இனிவரும் காலங்களில் இயற்கையோடு இயைந்த பொருட்களுக்கான வரவேற்பு பெருமளவில் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

ஹெர்பல் பொருட்களை மக்கள் விரும்ப காரணம்…

இவை பக்க விளைவுகள் அற்றது. சருமப் பிரச்னைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை தரவல்லது. சருமத்தின் இளமைத் தன்மையை தக்கவைக்கும். கற்றாழை கொண்டு தயாரிக்கப்படும் அழகு சாதனங்கள் அனைவருக்குமே ஏற்றது. இது இயற்கை மாய்சரைசர். அதே போல் ரோஜாக்களை பயன்படுத்தி செய்யப்படும் பொருட்கள் சருமத்திற்கு மிருதுவான தன்மையை அளிக்கும். மஞ்சட்டியில் தயாரிக்கும் பொருட்கள் சரும சுருக்கங்களை அகற்றி கரும்புள்ளிகளை நீக்கும். இயற்கை தயாரிப்புகளை தொடர்ந்து பயன்படுத்தி வர நல்ல மாற்றங்களை சருமத்தில் நாளடைவில் காணலாம்.

விற்பனை வாய்ப்புகள்…

தற்போதைய நவீன காலத்தில் இணையம் மூலமாக ஆன்லைனில் நல்ல விற்பனை சந்தைகள் கிடைக்கிறது. பொருள் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நம்முடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மற்றவர்களுக்கு ரெகமண்ட் செய்வார்கள். தவிர, டிஜிட்டல் சந்தைகள், கண்காட்சிகள், மால்கள் போன்றவை மூலமும் நமக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்க வாய்ப்புகள் கிடைக்கும். அங்கு விற்பனையும் அதிகமாக நடக்கும். சிலர் எங்களிடம் நேரடியாக பொருட்களை வாங்கி அதனை மற்றவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். மேலும் வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்கள் இயற்கை மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கிச் செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒருமுறை வாங்கியவர்கள் திரும்ப வாங்க வைக்க நம்முடைய பொருள் தரமாக இருக்கணும். அதன் பிறகு அதில் சின்னச் சின்ன வியாபார நுணுக்கங்களை சேர்த்தால், அதுவே நம்முடைய பொருளை மக்கள் மத்தியில் தானாக கொண்டு செல்லும். இவை எல்லாவற்றையும் விட நம்மைத் தேடி வரும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வது நம்முடைய சாமர்த்தியம். நம்முடைய தொடர் வாடிக்கையாளர்களுக்கு அவர்களை நாம் நினைவில் வைத்துள்ளோம் என்பதை புரிய வைத்தாலே போதும். கண்டிப்பாக நம் பொருளின் தரத்திற்காகவே நம்மைத் தேடி வருவார்கள்.

குடும்பத்தின் ஒத்துழைப்பு…

இந்தத் தொழிலை என் உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்துதான் நடத்தி வருகிறேன். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் குடும்பத்தில் உள்ள அனைவரும்தான் காரணம். அவர்கள்தான் எனக்கு எல்லா காலக்கட்டத்திலும் உறுதுணையாக இருந்து நான் துவளும் போது ஊக்கமளித்தார்கள். அதனால்தான் இன்று என்னால் வெற்றிகரமான பெண் தொழில்முனைவோராக வலம் வர
முடிகிறது. என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் குடும்பத்தினர் என்று சொல்லும் போது கூடுதல் மகிழ்ச்சிதானே. அந்த கடும் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்தான் சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான ‘வெற்றி திருமகள் விருது’.

என்னைப்போல தொழில்முனைவோராக விரும்ப நினைக்கும் பெண்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதனை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு கடுமையாக உழைத்தால் வெற்றி உங்கள் வசமாகும். இதற்கென பெரிய முதலீடோ அதிகமான இடவசதியோ தேவையில்லை. வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி அதில் தயாரித்து விற்பனை செய்யலாம். அதன் மூலம் கணிசமான லாபத்தையும் பெறலாம்.

எதிர்காலத்தில் பெரிய யூனிட் ஆரம்பித்து, சொந்தமாக கடை அமைத்து பெரிய அளவில் விற்பனை செய்து தொழிலை அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அந்த இலக்கை நோக்கி நான் கடுமையாக உழைக்கிறேன். எனக்கான வெற்றி தொட்டு விடும் தூரத்தில்தான் உள்ளது’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார் கௌதமி மஞ்சு.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

The post இயற்கையோடு இயைந்த பொருட்களுக்கான வரவேற்பு அதிகம்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Gautami Manju ,Dinakaran ,
× RELATED உடல்நலம் காக்கும் உணவு விதிகள்!