×

சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி கேரள அரசுக்கு எச்சரிக்கை: தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்


சென்னை: சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதிக்கு தண்ணீர் வழங்கும் சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரளம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்திற்கான தண்ணீரை கேரளம் தடுப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே இரு தடுப்பணைகளை கட்டியுள்ள கேரள அரசு, மூன்று தடுப்பணையைக் கட்ட திட்டமிட்டது.

எதிர்ப்பு வந்த நிலையில் தடுப்பணை கட்டும் திட்டத்தை கேரள அரசு கைவிட்டது. காவிரி துணை ஆறுகள் மற்றும் அவற்றின் துணை ஆறுகளின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயன்றால், அதை முதலில் அறிந்து தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாடு, எந்த ஆற்றின் உரிமையையும் விட்டுக் கொடுக்கக்கூடாது. கேரள அரசை தொடர்பு கொண்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு எச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அமராவதி ஆற்று நீர் உரிமைகளை பாதுகாப்பதற்காக சட்டப்படியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி கேரள அரசுக்கு எச்சரிக்கை: தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Kerala Govt ,Silianti River ,Anbumani ,Tamil Nadu Govt ,CHENNAI ,BAMA ,Tamil Nadu government ,Kerala government ,Spider River ,Amaravati ,Cauvery ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...