×

ஆரணி அருகே அழிந்த கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு

ஆரணி, மே 20: ஆரணி அடுத்த முருகமங்கலம் கிராமத்தில் அழிந்துபோன கோட்டை இருந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து ஆரணியை சேர்ந்த முன்னாள் தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஆர்.விஜயன் தெரிவித்துள்ளதாவது: திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் முருகமங்கலம் கிராமம் உள்ளது. வரலாற்றில் இந்த ஊரை படைவீடு ராஜ்ஜியத்து முருகமங்கல பற்று எனக்குறிப்பிடுவர். படைவீட்டை ஆண்ட சம்புவராய மன்னர்களின் முக்கிய ஆட்சி பகுதியாகவும் இது இருந்துள்ளது. இன்றைய ஆரணி நகரமே அன்றைக்கு முருகமங்கல ஆட்சி பகுதியில் அடங்கிய ஒரு கிராமமாக இருந்துள்ளதாக கல்வெட்டுகளின் மூலமாக தெரியவந்துள்ளது. முருகமங்கலம் கிராமத்தின் தென்கிழக்கு திசையில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. அதன் கரையின் மீது நடந்து சென்றால், கரையின் முடிவில் ஒரு வயல்வெளி காணப்படும்.
நன்செய் நிலமாகவும், புன்செய் நிலமாகவும் உள்ள அந்த இடமே அன்றைக்கு கோட்டை இருந்த இடமாகும். அந்த வயல் பகுதியில் பல இடங்களில் செங்கல் துண்டுகளும், உடைந்த பானை ஓடுகளும், இப்போதும் காண முடிகிறது. ஏர் கொண்டு உழும்போது நிறைய செங்கல் துண்டுகள் வெளிப்படுகிறது. வேறு பெரியதாக எந்த அடையாளங்களையும் தற்போது காணமுடியவில்லை.

இங்கு கோட்டை இருந்ததை ஆங்கிலேயர்கள் சில குறிப்புகளை மட்டுமே எழுதியும் வைத்துள்ளனர். படைவீடு ராஜ்ஜியத்தை போரில் வென்ற விஜயநகர படைகள், சம்புவராயர்களின் கோட்டை இருந்த முருகமங்கலத்தையும் தாக்குதல் நடத்தி இருக்கலாம். இப்பகுதியில் போர் நடந்ததற்கு அடையாளமாக, இதே ஏரிக்கு உட்புறமாக போரில் இறந்த ஒரு வீரனின் நடுகல் இருப்பதையும் பார்க்கலாம்.அதுமட்டுமின்றி தேவிகாபுரத்தில் உள்ள தேவரடியார் குளத்திற்கு வடமேற்கில் 2 மன்னர்கள் போரிடும் நடுகல் ஒன்றும், இக்கோட்டையின் வரலாற்றை சேர்ந்ததாக இருக்கக்கூடும். காரணம் முருகமங்கலம் ஆட்சி பீடத்தில் இருந்த காலத்தில் தேவிகாபுரம் என்ற ஊரே உருவாகவில்லை. முருகமங்கலத்தை வென்ற விஜயநகர படையினர், படைவீடு கோட்டையை போலவே இக்கோட்டையையும் அழித்துள்ளனர். அதனாலேயே இங்கும் எந்த சுவடுகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை எனலாம். முருகமங்கலம் என்ற இந்த ஊரின் மேற்கு திசையில் ராஜகெம்பீர மலை என்ற ஒரு சிறிய மலை உள்ளது. சம்புவராயர்களின் முக்கிய தலைநகரமான படவேடு பகுதியில் உள்ள கோட்டை மலையின் பெயரும் ராஜகெம்பீர மலை என்பதாகும். முருகமங்கல மலையின் உச்சியில் சம்புவராயர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு காவல் கோபுரமானது தற்போது முழுவதும் சிதைந்த நிலையில் உள்ளது. கருங்கல்லால் அமைந்த அதன் அடித்தளம் மட்டுமே தற்போது காண முடிகிறது. இம்மலையின் அருகில் வீரசம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இதன் பெயரும் சம்புவராயர் என்ற அடையாளத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று ஆய்வாளர் ஆர்.விஜயன் செய்யாறு அருகே அழிவிடைதாங்கியில் அழிந்துபோன கோட்டையை கண்டுபிடித்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆரணி அருகே அழிந்த கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Arani ,Murugamangalam ,R. Vijayan ,Murugamangalam village ,West Arani Panchayat Union ,Tiruvannamalai district ,
× RELATED ஆரணி அருகே அழிந்த கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு