×

சங்கரன்கோவிலில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி: தலைமுறை தலைநிமிர்ந்து நிற்க கல்வி ஒன்றுதான் வழி

தென்காசி, மே 20:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 2023-2024ம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை கலெக்டர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்து பேசுகையில், ‘மனிதன் அறிவு பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று கல்வி, மற்றொன்று கேள்வி. நூல்களிலிருந்து கற்பது கல்வி. ஆசிரியர்களிடமிருந்து கேட்டுப் பெறுவது கேள்வி. கல்வியைவிடக் கேள்வி சிறந்தது. நமக்கு கிடைக்கும் நூல்களிலிருந்துதான் நாம் கற்க முடியும். ஆசிரியர்களிடம் கேட்கும்போது அவர்கள் கற்ற பல நூல்களின் அறிவை நாம் பெறமுடியும். கற்கும் போது சந்தேகம் ஏற்பட்டால் புத்தகங்களிடம் கேட்க முடியாது.

ஆனால் ஆசிரியரிடம் கேட்கலாம். அனைத்தையும் நாம் நேரடியாக அனுபவம் பெற்று அறிவது இயலாது. கேள்வியின் மூலம் பலருடைய அனுபவங்களை நாம் அறிந்து அறிவு பெறுகிறோம். இந்த என் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியிலும் உங்கள் விருப்பமான உயர்கல்விகற்பது குறித்த சந்தேகங்களை கேள்வியாக எழுப்பி நீங்கள் அறிந்துகொள்ளலாம். தலைமுறை தலைநிமிர்ந்து நிற்க கல்வி ஒன்றுதான் வழி என்பதை அறிந்துகொண்டு தன்னம்பிக்கையுடன் முன்னேறுங்கள் வெற்றி நிச்சயம்’ என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், சங்கரன்கோவில் ஆர்டிஓ கவிதா, மாவட்ட மேலாளர் ரமேஷ். ஏபிஆர்ஓ ராமசுப்பிரமணியன், டான்பாஸ்கோ கல்லூரி பேராசிரியர் பிரபு, ஆடல் அரசு, அர்னால்டு ப்ரவுன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சங்கரன்கோவிலில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி: தலைமுறை தலைநிமிர்ந்து நிற்க கல்வி ஒன்றுதான் வழி appeared first on Dinakaran.

Tags : Shankaran Temple ,Thenkasi ,Collector ,AK Kamalkishore ,Adi Dravidian ,Sankarankoil, ,Tenkasi ,Sankarankoil ,
× RELATED தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில்...