×

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் 4வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை: கோவையில் உள்ள பெற்றோர் வீட்டில் தூக்கில் தொங்கினார்

காரமடை: சென்னையில் உள்ள அபார்ட் மென்ட் பால்கனியில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய், கோவையில் உள்ள பெற்றோர் வீட்டில் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்தவர் வெங்கடேஷ் (35). இவரது மனைவி ரம்யா (33). இருவரும் அப்பகுதியில் உள்ள அபார்ட்மென்டில் தங்கி, பிரபல ஐடி நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். காதல் திருமணம் செய்த இந்த தம்பதிக்கு மெதந்த் (5) என்ற மகனும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது.

கடந்த மாதம் 28ம் தேதி அபார்ட்மென்டின் 4வது மாடி பால்கனியில் இருந்து 7 மாத கைக்குழந்தை தவறி விழுந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பதற்றத்துடன் மற்றொரு வீட்டின் பால்கனி வழியாக சென்று குழந்தையை உயிருடன் மீட்டனர். குழந்தையை மீட்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பின்னர் ரம்யா கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து ஒரு மாறுதலுக்காக குழந்தைகளுடன் ரம்யாவை சொந்த ஊரான கோவை மாவட்டம் காரமடைக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் அழைத்து சென்றுள்ளார். காரமடை பெள்ளாதி சாலையில் உள்ள ரம்யாவின் தந்தை வாசுதேவன் வீட்டில் தங்கியிருந்த வெங்டேஷ், ரம்யா ஆகியோர் ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ முறையில் பணி செய்து வந்தனர். மன உளைச்சலில் இருந்த ரம்யாவுக்கு அதிலிருந்து வெளியே வர கவுன்சலிங் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ரம்யாவின் தந்தை வாசுதேவன் (67), தாய் புஷ்பா (60) ஆகியோர் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் சென்றுவிட்டனர். அன்று இரவு வெங்கடேஷ் படுக்கையறையில் உறங்கினார். குழந்தைகளும் தூங்கிவிட்ட நிலையில் அதே அறையில் ரம்யா தூக்கில் தொங்கி உள்ளார். படுக்கையில் இருந்து வெங்கடேஷ் எழுந்து பார்த்தபோது, ரம்யா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த காரமடை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து
வருகின்றனர்.

* சமூக வலைத்தள விமர்சனங்களால் விபரீத முடிவு
சென்னை அப்பார்ட்மென்ட் பால்கனியில் இருந்து குழந்தை விழுந்து மீட்கப்பட்ட வீடியோ பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வைரலானது. இதை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் பலர் ரம்யாவை கடுமையாக விமர்சித்துள்ளனர். இது அவரை மிகவும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.. சொந்த ஊருக்கு அழைத்து வந்த பின்னரும் அவர் சகஜ நிலைக்கு திரும்பவில்லை என தெரிகிறது. இதன் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

The post சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் 4வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை: கோவையில் உள்ள பெற்றோர் வீட்டில் தூக்கில் தொங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Coimbatore ,Karamadai ,Venkatesh ,Tirumullaivayal, Chennai ,Ramya ,
× RELATED கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல்...