×

ஆண்டுக்கு 75 லட்சத்திற்கும் அதிகமானோர் அருவிக்கு வருகை தரும் நிலையில் குற்றாலத்தை வனத்துறை கைப்பற்ற முயற்சியா?

* தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலம் முடக்கமா? உள்ளூர் வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் கவலை

சீசன் காலத்தில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் அலைமோதும். குற்றால அருவியில் கொட்டும் வெள்ளம் பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வருவதுதான். இந்த பகுதிகள் பெரும்பாலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் வசந்த காலம் என்று கூறப்படும் தென் மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் மாதத்தில் இருந்து, தமிழ்நாட்டிற்கு வசந்த காலமான வடகிழக்கு பருவமழை முடியும் ஜனவரி மாதம் வரை குற்றாலத்தில் சீசன் களைகட்டும்.

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு-கேரள எல்லையான நெல்லை, தென்காசி, குமரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் கோடை வெயிலை சமாளிக்க மக்கள் நீர்நிலைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். பழைய குற்றாலத்தில் கடந்த 17ம் தேதி மதியம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நெல்லையை சேர்ந்த பிளஸ் 1 மாணவன் அஸ்வின் (17), தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மறு உத்தரவு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டது.  இந்நிலையில் பழைய குற்றாலம் அருவி பகுதி பராமரிப்பு நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம், வனத்துறை வசம் ஒப்படைத்து விட்டதாகவும், ஏற்கனவே மெயினருவி, ஐந்தருவி நிர்வாகமும் வனத்துறை வசமே உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஏற்கனவே வனத்துறையினர் கட்டுப்பாட்டில் நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பல அருவிகள் உள்ள நிலையில் அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கடும் கெடுபிடி விதிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் பிரபலமான சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளும் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டதாக பரவிய அதிகாரப்பூர்வமற்ற தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பழைய குற்றாலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களாக வனத்துறை மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தாலும், கடந்த ஒரு மாதமாக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே ஐந்தருவியை கைப்பற்ற முயற்சித்தனர். விஐபி அருவி என்று அழைக்கப்பட்ட தேனருவியை தோட்டக்கலைத் துறையிடம் இருந்து வனத்துறை கைப்பற்றியது.

அங்கு விஐபி பாஸ் என்ற பெயரில் பெரும் முறைகேடுகள் நடந்தது. இறுதியில் நீதிமன்ற கண்டிப்புக்கு பிறகு அருவி வேலி அமைத்து மூடப்பட்டது. குற்றாலம் மெயினருவியும் வனப்பகுதியில் தான் உள்ளது என்று அவ்வப்போது உரிமை கோருவதும் வாடிக்கையாக உள்ளது. குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திடம் இருந்த சிற்றருவியை கைப்பற்றிய வனத்துறை, அங்கு குளிப்பதற்கு கட்டண வசூல் முறையை தொடர்வது குறிப்பிடத்தக்கது.

பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவி நிர்வாகங்கள் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டால், தற்போதைய நிலையில் இருந்து என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு சிற்றருவியும், மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளும் முன்மாதிரியாக உள்ளது. ஆண்டுக்கு 75 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் எந்தவித கட்டணமும் இல்லாமல் சுதந்திரமாக அருவிகளில் நீராடி வரும் நிலையில் வனத்துறை அனுமதி இருந்தால் மட்டுமே அருவிகளுக்கு செல்ல முடியும். மேலும் அருவிகளில் குளிக்க கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். அதன் மூலம் சுற்றுச்சூழலை பராமரிக்கிறோம் என்ற கெடுபிடியும் வந்து விடும்.

எனவே, பழைய குற்றால அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது என்று சுற்றுலா பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதேபோல், குற்றால அருவிகள் வனத்துறை கட்டுப்பாட்டிற்குள் சென்றால் தங்களால் சுதந்திரமாக கடைகளை போட முடியாது. தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்று உள்ளூர் வியாபாரிகளும் கவலை தெரிவித்து உள்ளனர். வனத்துறை குற்றால அருவிகளை கைப்பற்றினால் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாதலம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* குற்றாலம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு குதுகலம்தான். எங்கு குளித்தாலும் குற்றால அருவியில் குளித்தது போல் இருக்காது என்பார்கள். இதற்கு முக்கிய காரணம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கொட்டும் ரம்மியமான நீர்வீழ்ச்சிதான். தென்காசி என்றால் அருவிகளின் மாவட்டம் என்று கூறலாம். அந்த அளவுக்கு அருவிகள் சூழ்ந்த மாவட்டம். குற்றாலத்தில் ஐந்து அருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி என பஅருவிகள் உள்ளன. இதில் செண்பகாதேவி மற்றும் தேனருவியில் மக்கள் குளிக்க அனுமதியில்லை. ஆனால், மலையில் உள்ள செண்பகாதேவி கோயிலுக்கு செல்ல மட்டும் அனுமதி உண்டு.

* வெள்ளப்பெருக்கை அறிய சென்சார் கருவி
அருவியின் மேல் பகுதியில் அல்லது வனப்பகுதியில் சென்சார் கருவி பொருத்தி வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே எச்சரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து ஆலோசித்து வருகிறது. செண்பகாதேவி அருவி மற்றும் ராதா குண்டம் பகுதியில் இதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஐந்தருவியிலும் சுற்றுச்சூழல் பூங்காவிற்கு மேல் பகுதியில் இதுபோன்ற சென்சார் கருவிகளை பொருத்தினால் சில நிமிடங்கள் முன்னதாக வெள்ளப்பெருக்கை அறிந்து குளிப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யலாம்.

அதேசமயம் பருவமழை காலங்களில் குறிப்பாக சீசன் காலத்தில் ஒருமுறை மழை பெய்தால் கிட்டத்தட்ட ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு தண்ணீர் தொடர்ந்து விழும். அதாவது மலையின் சோலை பகுதிகளில் பெய்யும் மழையானது பஞ்சுபோன்று தண்ணீரை உறிஞ்சி கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும். ஆனால் கோடை மழை காட்டாற்று வெள்ளம்போல ஒரு சில நிமிடங்களில் அருவிக்கு வந்து விடும்.

அதேபோன்று சில மணி நேரங்களில் வெள்ளப்பெருக்கு குறைந்து விடும். உதாரணத்திற்கு பழைய குற்றாலத்தில் மதியம் 2.30 மணிக்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மாலையில் கட்டுக்குள் வந்துவிட்டது. இந்த மழை, மலையின் சோலைப் பகுதியில் பொழிவதற்கு பதிலாக அருவியின் குறைவான உயரப் பகுதியில் பெய்யும் பொழுது நமக்கு அவகாசம் என்பது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும். பழைய குற்றாலத்தில் அதுதான் நடந்தது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

* வெள்ளத்தில் பலியானது வஉசியின் கொள்ளு பேரன்
நெல்லை என்ஜிஓ காலனி ராம் நகரை சேர்ந்தவர் குமார், பாண்டியன் வங்கி கிராம மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஸ்வின் (17). இங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்1 வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை என்பதால் தென்காசி மாவட்டம் மேலகரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த 17ம் தேதி பழைய குற்றலாத்திற்கு உறவினர்களுடன் குளிக்க சென்றபோது, திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இவர், வஉசியின் கொள்ளுப்பேத்தி ஆறுமுகச்செல்வியின் அக்கா செண்பகவள்ளியின் பேரன் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

* உள்ளாட்சி வசம் ஒப்படைக்கப்படுமா?
மெயினருவி, ஐந்தருவி போன்று பழைய குற்றால அருவிப்பகுதி பராமரிப்பையும் ஆயிரப்பேரி ஊராட்சி நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. ஏற்கனவே பொதுப்பணித் துறையினர் எவ்வித வசதிகளும் செய்து கொடுக்காமல் கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமை என்ற பெயரில் நீண்ட காலம் ஏலம் விட்டு வந்த நிலையில், ஆயிரப்பேரி ஊராட்சி நிர்வாகம் நீதிமன்றம் வரை சென்று கார் பார்க்கிங் கட்டண வசூல் ஏலம் விடும் உரிமத்தை பெற்றது.

இதன் பிறகு தான் பேருந்து நிலையம், கார் பார்க்கிங் பகுதி உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகத்திடம் சுகாதாரம், நிதி ஆதாரம், வளர்ச்சிப் பணிகளை திட்டமிடுதல் அவற்றை செயல்படுத்துதல், பணியாளர்கள் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது. வனத்துறையோ, பொதுப்பணித் துறையோ இத்தகைய வசதிகளை முறையாக செய்து கொடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

* வனத்துறை எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமா?
பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து வனத்துறை சரியான தகவல் தரவில்லை என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘17ம் தேதி பிற்பகல் 1.54 மணிக்கு செண்பகாதேவி அருவி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட வனக்காவலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஆதாரம் உள்ளது.

மெயின் அருவி மற்றும் ஐந்தருவி ஆகியவற்றில் போலீசார் தடை விதித்து விட்ட நிலையில் பழைய குற்றாலத்தில் மட்டும் தடை விதிக்கப்படவில்லை. செண்பகாதேவி, ஐந்தருவி பகுதிகளில் வனக் காவலர்கள் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கம். எனவே அங்கு நீர்வரத்து குறித்த தகவல் காவல் துறைக்கு உடனடியாக பகிர்ந்து கொள்ளப்படும். பழைய குற்றாலம் பகுதியில் மலைக்கு மேல் மிக அரிதாகத்தான் ரோந்து செல்வது வழக்கம்.

ஐந்தருவி பகுதிகள் குற்றாலம் வன சரகத்திற்குள் உள்ள நிலையில், பழைய குற்றாலத்தில் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே உள்ள பகுதிகள் கடையம் புலிகள் சரணாலய வனக் காவலர்களின் கட்டுப்பாட்டில் சென்று விடும். எனவே நாங்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை. வழக்கமாக தண்ணீர் வரத்து மலைப்பகுதியில் அதிகரிக்கிறது என்ற எச்சரிக்கை அனைத்து அருவிகளுக்கும் சேர்த்து தான் கொடுக்கப்படுகிறது. தனித்தனியாக கொடுக்கப்படுவது இல்லை. எனவே பழைய குற்றாலம் வெள்ளப்பெருக்கு குறித்து வனத்துறை தகவல் தெரிவிக்கவில்லை என்ற கருத்து தவறானது’ என்றனர்.

* பழங்குடியினர், மலைவாழ் மக்கள் இல்லாத அருவிகள்
பொதுவாக வனத்துறை ஒரு அருவியை கைப்பற்றுவதற்கு சுற்றுச்சூழல் வனப்பகுதி மற்றும் மலைப் பகுதி, பழங்குடியினர் வேலைவாய்ப்பு, மேம்பாடு உள்ளிட்டவற்றை காரணமாக கூறுவது வழக்கம். ஆனால், ஐந்தருவி, பழைய குற்றாலம் பகுதிகளில் அதுபோன்று மலைவாழ் இன மக்கள் யாரும் இல்லை. வனப்பகுதிகளில் உள்ள பிற அருவிகளை எளிதாக வனத்துறை கைப்பற்றியது போன்று குற்றாலம் அருவிகளை கைப்பற்றுவது இயலாத காரியம். மேலும் சுற்றுலாப் பயணிகளிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து இப்பகுதி மக்கள் மத்தியில் உள்ளது.

* கலெக்டர் மறுப்பு
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கூறுகையில், ‘வனத்துறை சார்பில் ஒரு மாதத்திற்கு முன்பு பழைய குற்றாலம் அருவி பராமரிப்பு நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்துள்ளனர்‌. ஆனால் அதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. தற்போது வரை ஒப்படைக்கப்படவில்லை. அருவி பகுதிகளுக்கு மேல் சென்சார் கருவிகள் பொருத்துவது குறித்து ஆய்வு மற்றும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post ஆண்டுக்கு 75 லட்சத்திற்கும் அதிகமானோர் அருவிக்கு வருகை தரும் நிலையில் குற்றாலத்தை வனத்துறை கைப்பற்ற முயற்சியா? appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala ,Karnataka ,
× RELATED சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு