×

சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்தி சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது 1400 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் திருவண்ணாமலை அருகே

திருவண்ணாமலை, மே 19: திருவண்ணாமலை அருகே சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 1400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் கோட்டப்பாறை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கலால் பிரிவு டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோட்டப்பாறை பகுதியில் உள்ள அடர்ந்த முட்புதர் மறைவிடத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசை கண்டதும் அங்கிருந்த 3 பேர் தப்பியோடினர். அதில், போலீசார் விரட்டிச் சென்றதில் ஒருவர் மட்டும் சிக்கினார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், கீழ்பென்னாத்தூர் அடுத்த பிடாரன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ெஜயராமன் மகன் சத்தியராஜ்(34) என்பது ெதரியவந்தது. அதைத்தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய இரண்டு நபர்களை தேடி வருகின்றனர். மேலும், காய்ச்சி வடிகட்டி விற்பனைக்கு அனுப்புவதற்கு தயராக வைத்திருந்த 140 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 7 பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்த 1,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவோர், விறகு அடுப்பு பயன்படுத்துவது வழக்கம். ஆனால், நேற்று நடந்த சோதனையின் போது, வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டரை பயன்படுத்தி, காஸ் ஸ்டவ் மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சியது வியப்பையும் அதிர்ச்சிையயும் ஏற்படுத்தியுள்ளது.

The post சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்தி சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது 1400 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் திருவண்ணாமலை அருகே appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Thiruvannamalai ,Vettavalam Kottaparai ,Dinakaran ,
× RELATED (தி.மலை) குழந்தைகளின் பெயர் பதிவு செய்ய...