×

மாமல்லபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ₹1 கோடியில் கட்டப்பட்ட உதவியாளர்கள் தங்கும் கட்டிடங்கள் ஓராண்டாக பூட்டியே கிடக்கும் அவலம்: மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாமல்லபுரம், மே 18: மாமல்லபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ₹1 கோடி மதிப்பில் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்கும் கட்டிடங்கள் கட்டி முடிக்கபட்டு ஓராண்டாக பூட்டிக் கிடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு கட்டிடங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இசிஆர் சாலையொட்டி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு மாமல்லபுரம், பூஞ்சேரி, தேவனேரி, வெண்புருஷம், பட்டிப்புலம், நெம்மேலி, வட நெம்மேலி, பையனூர், கொக்கிலமேடு, மணமை, கடம்பாடி, வடகடம்பாடி, நல்லான் பிள்ளைபெற்றாள், காரணை, நந்திமா நகர், குழிப்பாந்தண்டலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும், 30க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், உள் நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் நோயாளிகளை அனுமதித்துவிட்டு, தங்குவதற்கு இடமின்றி அங்கு வெட்ட வெளியில் அமர்ந்து ஓய்வெடுத்தனர்.

உள் நோயாளிகளின் உதவியாளர் தங்குவதற்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய 2 கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையை, ஏற்று மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் மூலம் ₹1 கோடி சிறப்பு நிதி ஒதுக்கி, பூமிபூஜை போட்டு தனித்தனியாக 2 கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி, நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு அனைத்து பணிகளும் நிறைவு பெற்றது.

மேலும், கட்டிடப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ஓராண்டை கடந்தும் இன்னும் திறக்கப்படாமல் வீணாக பூட்டு போட்டு பூட்டியே கிடக்கிறது. இதனால், உள் நோயாளிகளுக்கு உதவியாக வருபவர்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் அங்குள்ள மரத்தடியில் ஒதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உடனடியாக தலையிட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட 2 கட்டிடங்களை நேரில் வந்து ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் 600க்கும் மேற்பட்டோர் புற நோயாளியாகவும், 30க்கும் உள் நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இது மட்டுமின்றி, மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகளிம் தினமும் கணிசமான அளவில் சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவிக்காக வருபவர்கள் தங்குவதற்காக தனித்தனியே 2 கட்டிடங்கள் கட்டப்பட்டது. இந்த கட்டிடங்கள், பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், நோயாளிகளுக்கு உதவியாக வருபவர்கள் தங்க இடமின்றி வெட்ட வெளியில் படுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்’ என்றனர்.

உதவியாளர்கள் அவதி
தமிழ்நாட்டில் எத்தனையோ அரசு அலுவகங்கள் வாடகை கட்டிடத்திலும், பாழடைந்த கட்டிடங்களிலும் இயங்கி வருகிறது. ஆனால், மாமல்லபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் விசாலமான இடத்தில் உள்நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் வீணாக பூட்டியே கிடக்கிறது.
இதனால், தங்க இடமின்றி உள் நோயாளிகளின் உதவியாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

வெட்ட வெளியில் உறக்கம்
மாமல்லபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்காக ₹1 கோடி மதிப்பீட்டில் தலா 2 கட்டிங்கள் ஓராண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. மேலும், கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டை கடந்தும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டு போட்டு பூட்டியே கிடக்கிறது. இதனால், உள் நோயாளிகளின் உதவியாளர்கள் பாதுகாப்பின்றி வெட்ட வெளியில் படுத்து உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆய்வு செய்ய வேண்டும்
மாமல்லபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ₹1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 கட்டிடங்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் சம்பந்தப்பட் அதிகாரிகளுடன் நேரில் வந்து அந்த கட்டிடங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை மற்றும் மின்சார வசதி உள்ளதா என ஆய்வு செய்து உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post மாமல்லபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ₹1 கோடியில் கட்டப்பட்ட உதவியாளர்கள் தங்கும் கட்டிடங்கள் ஓராண்டாக பூட்டியே கிடக்கும் அவலம்: மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram Government Hospital ,Mamallapuram ,District Collector ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில்...