×

மாமல்லபுரம் கடற்கரையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள், பேட்டரிகள், வயர்கள் மாயம்: குற்றச்செயல்கள் அதிகரிப்பு

* சுற்றுலா பயணிகள் அச்சம்
* நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாமல்லபுரம், மே 30: மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் ஆங்காங்கே பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள், பேட்டரிகள் மற்றும் அதன் வயர்களை மர்ம கும்பல் திருடிச் சென்று விட்டது. இதனால், குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் பீதியடைந்து உள்ளனர். இதனை தடுக்க வேண்டிய கடலோர பாதுகாப்பு படை போலீசாரும், சட்டம் ஒழுங்கு போலீசாரும் கை கட்டி வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, போலீஸ் உயரதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்.தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் சுற்றுலா தலம் திகழ்ந்து வருகிறது. மாமல்லபுரம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது புராதன சின்னங்களும், கற்சிற்பங்களும் தான். கடந்த 7ம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் அழகுர செதுக்கிய புராதன சிற்பங்களை யுனெஸ்கோ நிறுவனம் உலகின் மிகவும் பழமை வாய்ந்த பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிகரித்துள்ளது.

இங்குள்ள புராதன சின்னங்களை கண்டு ரசிக்க தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சொகுசு பேருந்து, வேன், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
அப்படி, வருபவர்கள் இங்கு ஒரு வாரம் தங்கி சுற்றிப் பார்ப்பது, புராதன சின்னங்களின் முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுப்பது, புராதன சின்னங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வது, கடற்கரைக்கு சென்று மீன் வறுப்பதை புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர். பின்னர், அந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும், இங்கு வரும் காதல் ஜோடிகள் பாரம்பரிய நினைவு சின்னங்களை சிதைப்பதும், தங்களின் பெயர்களை புராதன சின்னங்களில் எழுதி அலங்கோலப்படுத்தி விட்டு செல்வது, உணவு, தின்பண்டங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை கண்ட இடங்களில் வீசி விட்டு செல்லும் சுய ஒழுக்கமற்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் செல்போன் பறிப்பு, கைப்பை திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் மர்ம கும்பலை எளிதில் அடையாளம் காணும் வகையில், வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், கடற்கரை உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் 360 டிகிரியில் சுழன்று கண்காணிக்கும் வகையிலும், பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கடந்த 2017ம் ஆண்டு ₹11.63 கோடி நிதி ஒதுக்கி ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, நகர பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள், நவீன கழிப்பறைகள், நடைபாதைகள் அலங்கார மின் விளக்குகள், மீட்பு படகுகள், குப்பைகளை அகற்ற டிராக்டர்கள், கடற்கரையில் பயணிகள் அமர்ந்து இயற்கை அழகை ரசிக்க இருக்கைகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க சுற்றுலாத்துறை முடிவு செய்தது. இந்த பணிகளை மேற்கொள்ள முதல் கட்டமாக ₹6.6 கோடி நிதி வழங்கப்பட்டது.

மேலும், இப்பணிகளை சுற்றுலாத்துறை முழுமையாகவும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் திட்டமிட்டது. இதில், முதல் கட்டமாக மாமல்லபுரம் கடற்கரையில் 24 மணி நேரமும் 360 டிகிரி சுழன்று துல்லியமாக கண்காணிக்கும் வகையில் 40 சுழலும் சிசிடிவி கேமராக்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்டது. பின்னர், சிசிடிவி கேமராக்களை பராமரிக்க சுற்றுலாத்துறை நிர்வாகம், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமும், சுற்றுலாத்துறை நிர்வாகமும் கேமராக்கள் இயங்குகிறதா என சரி வர கண்காணிக்காமல் விட்டதால், 39 சிசிடிவி கேமராக்கள், பேட்டரிகள் மற்றும் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். தற்போது, ஒரே ஒரு கம்பத்தில் மட்டும் ஒரு சிசிடிவி கேமரா உள்ளது. அதுவும், உடைந்தும், பேட்டரியின் பெட்டி கழன்றும், வயர்கள் அறுந்து காட்சிப் பொருளாக காணப்படுகிறது. மற்ற கம்பங்களில், சிசிடிவி கேமராக்கள் இன்றி பரிதாப நிலையில் காணப்படுகிறது.

மேலும், பல ஆண்டுகளுக்கு சுழன்று கண்காணிக்க வேண்டிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சில ஆண்டுகளிலேயே சேதமடைந்து காட்சிப் பொருளாக உள்ளது. மேலும், கடற்கரையில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மர்ம கும்பல் ஒன்று கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வழிப்பறி, கொள்ளை, பாலியல் சீண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். கடலோர காவல் படை போலீசாரும், சட்டம் ஒழுங்கு போலீசாரும் பணியில் இல்லாததால் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் பைக்குகளில் சுலபமாக தப்பி செல்கின்றனர். மேலும், மர்ம கும்பல் மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட்டுகளில் அறைகளை வாடகைக்கு எடுத்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல், கொலை கொள்ளை, முக்கிய வழக்குகளில் தேடப்படும் ரவுடி கும்பல், முக்கிய கஞ்சா வியாபாரிகள் போலீசாரிடம் சிக்காமல் இருக்க மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டுகளில் போலியான ஆவணங்களை காட்டி தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நேரில் வந்து ஆய்வு செய்து குற்றச் சம்பவங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை மீண்டும் பொருத்தி, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், ‘மாமல்லபுரம் கடற்கரையில் கடலோர காவல் படை போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் பணியில் இல்லாததால் அங்கு வரும் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகின்றனர். மேலும், போலீசார் பணியில் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம கும்பல், சுற்றுலா வரும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு, கை பை பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை அங்குள்ளவர்கள் மடக்கி பிடிப்பதற்குள் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பித்து செல்கின்றனர்.

சில மர்ம ஆசாமிகள் பாறைகள் மற்றும் மணல் மேடுகளுக்கு பின்புறம் மறைந்திருந்து இயற்கை உபாதைகளை கழிக்க ஒதுக்குபுறமாக செல்லும் பெண்களையும், காதல் ஜோடிகளையும் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதை காட்டி நகை, பணம் கேட்டு தொந்தரவு கொடுக்கின்றனர். நகை, பணம் கொடுக்க மறுத்தால் ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவேன் என மிரட்டி நூதன முறையில் கொள்ளையடிக்கும் சம்பவமும் நடக்கிறது. இதனால், சில காதல் ஜோடிகள் பயந்து பணம் கொடுத்து விட்டு அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பி சென்று விடுகின்றனர். அதேபோல், வெண்ணெய் உருண்டை பாறை பின்புறம் பாறை சரிவிற்கு கீழ் உள்ள மரங்களின் மீது ஏறி ஒரு கும்பல் மறைந்திருந்து பெண்களை மட்டும் புகைப்படும் எடுத்து மிரட்டுவதும், அதை தட்டிக் கேட்கும் உள்ளூர் இளைஞர்களை தாக்குவதும் தொடர் கதையாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மர்ம கும்பலின் கூடாரமாக மாமல்லபுரம் மாறிவிடும்’ என்றனர்.

சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்ப்பு
கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மர்ம கும்பலின் நடமாட்டத்தை கண்காணிக்க சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து சிசிடிவி கேமராக்கள் இல்லாத கம்பங்களில் மீண்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பணியில் இல்லாத போலீசார்
மாமல்லபுரம் கடற்கரையில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் ரப்பர் படகு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போலீசாரும் இல்லை, பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை. கடலோர போலீசார் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம கும்பல் சுற்றுலாப் பயணிகளிடம் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

24 மணி நேர கண்காணிப்பு
கடற்கரையில் புதிதாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி அதன் செயல்பாடுகளை கடலோர காவல் படை போலீசார் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், சுழற்சி முறையில் போலீசாரை பணியமர்த்தி கண்காணிக்க போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

கடலோர காவல் படை எங்கே
மாமல்லபுரம் – புதுச்சேரி 4 வழிச்சாலை பணிக்காக இசிஆர் நுழைவு வாயிலுக்கு அருகே இருந்த கடலோர காவல் படை அலுவலகம் கடந்தாண்டு இடித்து அகற்றப்பட்டது. அப்போது, முதல் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டரும் மாமல்லபுரம் வருவதில்லை. அலுவலகமும் தற்காலிகமாக எங்கும் இயங்கவும் இல்லை. இதனால், கடலோர காவல் படை அலுவலகம் எங்கே உள்ளது என மீனவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வார நாட்களில் தீவிர ரோந்து
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் ஏராளமான பயணிகள் கடற்கரைக்கு வருகின்றனர். இதனால், அந்த 2 நாட்கள் மட்டும் பயணிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், அதிகளவு போலீசாரை பணியமர்த்தி தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

குற்றவாளிகளுக்கு சிறை
மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகள், காதல் ஜோடிகளிடம் வழிப்பறி மற்றும் பாலியல் சீண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் மர்ம ஆசாமிகள் ஈடுபடுகின்றனர். அவர்களை கண்டறிந்து, சட்டம் ஒழுங்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post மாமல்லபுரம் கடற்கரையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள், பேட்டரிகள், வயர்கள் மாயம்: குற்றச்செயல்கள் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில்...