×

கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும்

நாமக்கல், மே 17: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோடை உழவு செய்ய இது ஏற்ற தருணமாகும். கோடை மழையை பயன்படுத்தி, உழவு செய்வது அவசியமாகும். முதலில் வயலில் இரும்பு கலப்பை கொண்டோ அல்லது டிராக்டர் வாயிலாக குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக புழுதிபட உழவு செய்யப்பட வேண்டும். இதனால் கடினத் தன்மையுள்ள மண் கட்டிகள் உடைந்து, பொலபொலப்புத் தன்மை அடைகிறது. பயிர்ப்பருவ காலங்களில், சில வகை பூச்சிகளின் புழுக்கள், மண்ணுக்குள் சென்று, கூட்டுப் புழுவாக மாறி வளர்ந்து கொண்டிருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம், இவ்வகை கூட்டுப் புழுக்கள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்படுகின்றன. அவை பறவைகளால் பிடித்துத் உணணப்பட்டு அழிக்கப்படுகின்றன. இதன் வாயிலாக, அடுத்த பயிர் சாகுபடியின் போது பூச்சிகளின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது. களைச் செடிகள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. மேலும் மண்ணில் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகரிக்கின்றது. மழைநீர் பூமிக்குள் சென்று, மண்ணில் ஈரப்பதம் காக்கப்படுகிறது. மண்ணின் பௌதீக தன்மை மேம்படுகிறது. நாற்றங்கால் மற்றும் நடவு, வயல் தயாரிப்பு மிகவும் எளிதாகிறது. மண் பொலப்பொலப்புத் தன்மையைப் பெறுவதால், அடுத்த பருவத்தில் சாகுபடி செய்யும் பயிருக்கு, இடும் உரம் சமச்சீராக கிடைக்கும். இதனால், பயிர் செழித்து வளர்ந்து மகசூல் அதிகரிக்கும். எனவே விவசாயிகள் தவறாது, கோடை உழவு செய்து, பயன் பெற வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,District ,Erumapatti ,Regional Assistant Director of ,Kavitha ,Dinakaran ,
× RELATED அக்கா, மாமாவை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது