×

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னை: பொதுப்பணித்துறையின் சார்பில் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ₹65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு மருத்துவமனை. பழமையான இந்த மருத்துவமனையில் அனைத்து வகை நோய்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. 2,500 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த அரசு மருத்துவமனையில் 10,000 முதல் 15,000 பேர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

மருத்துவ துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் அமையப்பெற்றுள்ள இந்த மருத்துவமனையில் அனைத்து மருத்துவ துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைக்கு மேலும் பெருமை சேர்க்கின்ற வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் ₹65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்று மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை விரைந்து செயல்படுத்திடும் பொருட்டு 65 கோடி ரூபாய் அனுமதித்து முதல்வர் உத்தரவிட்டார்.

நரம்பியல் துறைக்கென்று புதிதாக உருவாக்கப்படும் இந்த கட்டிடம் ஏறத்தாழ 1 லட்சத்து 12 ஆயிரத்து சதுர அடியில் (10,428 ச.மீ.) நான்கு தளங்களுடன் 220 படுக்கை வசதிகளோடு உலகத் தரத்தில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

இந்த கட்டிடத்தில் தரைத்தளத்தில் நரம்பியல் மருத்துவ புறநோயாளிகள் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, கதிரியக்கவியல் பிரிவு, இயன் மருத்துவ பிரிவு போன்ற வசதிகள் அமையும். முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பொது வார்டுகள், மூன்றாம் தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள் போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்காம் தளத்தில் நவீன வசதிகள் கொண்ட 6 அறுவை சிகிச்சை அரங்குகள், அறுவை சிகிச்சைக்கு முந்தைய அறை, மீட்பு அறை போன்ற வசதிகள் இடம்பெறும்.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் இந்த கட்டிடத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொது கழிப்பிடம், 4 மின்தூக்கிகள், 2 படிக்கட்டுகள், சாய்வுதளம், மருத்துவ திரவ ஆக்சிஜன் இணைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற பிற வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு சிறந்த நரம்பியல் துறை மருத்துவ சேவைகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Govt General Hospital ,CHENNAI ,Department of Neurology ,Rajiv Gandhi Government General Hospital ,Complex ,Public Works Department ,South Asia ,Rajiv Gandhi Government General Hospital Complex ,Neurology Department ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...