×

ஸ்ரீபெரும்புதூரில் கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: அதிகாரிகள் அலட்சியம்; விவசாயிகள் குற்றச்சாட்டு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் நெல் மூட்டைகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், ராமானுஜபுரம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு மதுரமங்கலம், சிவன்கூடல் , ஜம்போடை, மேல்மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தனர். இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேமித்து வைக்கபட்டுள்ளன. நேற்று ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை பெய்தது. இதில், எந்தவித பாதுகாப்புமின்றி திறந்த வெளியில் நெல் மூட்டைகள் வைக்கபட்டதால், நெல் மூட்டைகள் மழையில் சேதமாகி உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளன. காலை முதல் பெய்து வரும் மழையில் நனைந்த நெல்மணிகளில் முளைப்பு ஏற்பட்டால் வீணாகப் போய்விடும். வானிலை ஆய்வில் 2, 3 நாட்கள் மழை பெய்ய கூடும் என்று அறிவிக்கபட்டது. இதனை, பொருட்படுத்தாமல் திறந்த வெளியில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இதனால், அரசுக்கு பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்தனர். இதுகுறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ராமானுஜபுரம் ஊராட்சியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்க அதிகாரிகள் தார்பாய் வழங்கவில்லை என விவசாயிகள் புகார் அளித்துள்ளார்.

* தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்
கட்டவாக்கம் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும், அலுவலர் முறையாக பணிக்கு வராததால் நெல் மூட்டைகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளதால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வாலாஜாபாத் ஒன்றியம், கட்டவாக்கம் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, மக்களின் பிரதான தொழிலாக விளங்குவது விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, நெல் அறுவடை சீசன் களைக்கட்ட தொடங்கியுள்ளது. கட்டவாக்கம் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு, கட்டவாக்கம் விவசாயிகள் மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த விவசாயிகளும் தங்களின் அறுவடை செய்யப்பட்ட நெல்களை இங்கு விற்பனை செய்தனர். தற்போது, இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் அலுவலர் முறையாக வராததால் விவசாயிகள் நெல்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், கடந்த 2 நாட்களாக கோடை மழை மிரட்டி வரும் நிலையில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டவாக்கம் ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்கள் உள்ளன. இதில், அறுவடை செய்த நெல்களை எங்கள் ஊரில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தோம். தற்போது, நெல் கொள்முதல் நிலையத்திற்கு முறையாக அலுவலர்கள் வராததால், நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் தேங்கி கிடக்கின்றது. தற்போது, கோடை மழை மிரட்டி வரும் நிலையில் நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து வீணாகி விடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளோம்’ என்றனர்.

The post ஸ்ரீபெரும்புதூரில் கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: அதிகாரிகள் அலட்சியம்; விவசாயிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Kanchipuram District ,Sriperumbudur Union ,Ramanujapuram Panchayat ,Dinakaran ,
× RELATED ராஜிவ் காந்தியுடன் உயிர்நீத்த...